காடுகளின் நன்மை
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது. காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.
காடுகள் தரும் பொருட்கள்
உபயோகப்படுத்தப்படும் எரிபொருள் சக்தி பலவற்றில் நகர்ப்புறத்தில் 50 சதமும், கிராமப்புறத்தில் 70 சதமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விறகில் பெரும்பகுதி விறகு காடுகளிலிருந்தே வருகிறது.
நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.
நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.
காகிதம், ரப்பர், தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.
பஞ்சு (இலவம் மரம்), வாசனை எண்ணெய்கள் (சந்தன மரம்), தைல எண்ணெய், சோப்பு தயாரிக்க உதவும் எண்ணெய்கள் (வேம்பு, புங்கம் மற்றும் இலுப்பை), தோல்பதனிட உதவும் டானின், கோந்து, பீடி இலைகள் போன்ற பல உபயோகமான பொருட்களையும் காடுகள் தருகின்றன.