இயற்கை வேளாண்மை

ஓர் கண்ணோட்டம்

வேளாண்மை நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. வேளாண்மை இடுபொருட்களை மிகக் குறைவாக இடப்பட்டதால் வேளாண்மை உற்பத்தியும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக பசுமைப் புரட்சி 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்பசுமை புரட்சியின் நோக்கம் வேளாண் விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஆகும். இதன் பொருட்டு இரசாயன உரங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரக விதைகள் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தினர். இதன் விளைவாக 1990ம் ஆண்டு முதல் மண் வளமும், இயற்கை வளமும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
இயற்கை வேளாண்மை

நம் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு மற்றும் உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையினை கடைபிடிப்பது குறித்து தற்போது விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிக படுத்தலாம்.
இயற்கை வேளாண்மை எதிர்நோக்கும் சவால்கள்

இயற்கை வேளாண்மை மூலம் அனைவருக்கும் போதுமான தானியங்களை உற்பத்தி செய்ய முடியுமா?
இயற்கை வேளாண்மை மூலம் இயற்கைக்கு ஏதேனும் நன்மை உள்ளதா?
இயற்கை வேளாண்மை மூலம் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியுமா?
அனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்களை வழங்க முடியுமா?

கண்டறியப்பட்ட பதில்கள்

இயற்கை வேளாண்மையில் தரமான விதை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தியை போதுமான அளவு அதிகரிக்க முடியும்.
இயற்கை வேளாண்மையில் இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் இரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பட்டு மிகக் குறைவு. ஆகையால் இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
கால்நடை உரங்கள், மரத்தடியில் இருக்கும் உதிர்ந்த இலைகள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை சரியான முறையில் சேகரித்து உபயோகித்தால் அனைத்து விவசாயிக்கும் செவ்வனே பயிர் செய்யும் வகையில் இயற்கை உரங்கள் வழங்க முடியும்.

இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமான பயிர்கள்

நெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு பொருத்தமானவை.

இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்படும் விளைபொருட்கள் அதிக சத்துள்ளதாகவும், தரம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காகவும் இவ்விளைப் பொருட்கள் யாவும் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.

எழுதியவர் : (23-Nov-17, 1:59 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 9922

மேலே