காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்
================================ருத்ரா

நான் என்பது என்ன?
நீ என்பது என்ன?
இன்னும்
அது அவன் அவள்
என்பதெல்லாம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
என்கிறது இலக்கணம்.
இவை வெறும் மேலாடைகள்
கழற்றியெறி என்கிறது
ஆன்மீகம்
இது என்ன?
இதற்குள் என்னதான் இருக்கிறது
என்ற ஞான உந்தலில்
எல்லாவற்றையும்
துறக்க "முனைந்தவர்களே"
முனிவர்கள்.
இப்படி மகாநிர்வாணத்துடன்
மனம் அதன் "உள்குத்துகள்"
ஆகியவற்றையும்
ஏன்
இப்படி ஞானத்தேடலுக்கு
உந்து விசையான‌
சிந்தனையையும் கூட‌
கழற்றி வைத்து விட்டு
தியானம் என்ற பெயரில்
உட்கார்ந்திருக்கிறார்கள்
சிலர்.
அவர்கள் பெரியோர்கள்
என கருதப்படுகிறார்கள்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌
இப்படித்தான்
கீழை நாடுகள்
கல்லாகி மரத்துக்கிடக்கிறது.
"அது நீயாக இருக்கிறாய்"
என்ற பொருளில்
"தத்வம் அஸி"
என்பதே
இப்படி ஒரு ஞானத்தேடலின்
"தத்துவம்" ஆக இருக்கிறது.
அது நீ
என்று தெரிந்த பின்னும்
உன்னை "நான்"கருவறுக்கத்துடிக்கும்
அந்த "சைத்தானுக்கு"
குடமுழுக்கும்
தேர் ஓட்டங்களும் நடத்தி
போக்கு காட்டுகிறேன்.
அதை புனிதம் என்று சொல்லி
அதற்கு மேல்
உன் ஞானவிளிம்பை
சிரச்சேதம் செய்ய‌
சாஸ்திர சம்ப்ரதாயங்களின்
முள்வேலிக்குள்
உன்னை அடைத்து
ரணமாக்கி ரத்தம் கசியச்செய்கிறேன்.
இதுவே
மதம் எனும்
நோய் ஆகி
எல்லோரையும்
படுக்கையில் கிடத்தி இருக்கிறது.
அதனால் தான்
எனக்கு
எம்மதமும் சம்மதமில்லை.
மகாநிர்வாணத்தை
எப்படி இப்படி
ஒரு அசிங்க நிர்வாணம்
ஆக்கியிருக்கிறான் இந்த மனிதன்
என்பதை புரிந்து கொள்ளவேண்டியதே
காலத்தின் கட்டாயம்.

======================================

எழுதியவர் : ருத்ரா (30-Nov-17, 8:46 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 98

மேலே