நெஞ்சில் உரமுமின்றி

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

எழுதியவர் : (30-Nov-17, 11:02 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1074

மேலே