சிறிய இயற்கை

சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை
உனது இருபின்மையால் உணர்கிறேன்.
நிழல் போல வருவதாய்
நீ வாக்களித்திருந்த வரிகள்
எனது நாட்குறிப்பின் பக்கங்களில்
வரிகள் மட்டுமே அருகிருந்து
சொற்களை அர்த்தப்படுத்துகின்றன.

எனது வாழ்க்கை வனத்தில் இது
நட்புதிர்காலம்…
வெறுமை பூத்த கிளைகள் மட்டும்
காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி
அகத்தே மண்டிய நினைவின் புகையாய்
அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை
நமது நட்புறவின் குருதியை
நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி
புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி
புகைப்படங்களில் மட்டும் நீ
வேரற்ற மரமாய் மிதந்தலைகிறேன்
உனக்குப் பிரியமான இசையைக் கேட்கையிலும்
நீ ரசித்த உடைகளை உடுத்தும் போதும்
வாசிக்க எடுத்த புத்தகத்தில்
என்றோ பத்திரம் செய்த- நீயளித்த
மயிலிறகை விரல்களால் வருடும் போதும்…
இருக்கும் போது வரமான நட்பு
இல்லாத போது சாபமாகிறது.

எழுதியவர் : (30-Nov-17, 11:33 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : siriya iyarkai
பார்வை : 564

மேலே