எட்டுணையும் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே – மூதுரை 4
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - எட்டுணையும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4
– மூதுரை
பொருளுரை:
பாலைக் காய்ச்சினாலும் அதன் இனிய சுவை குறையாது; சங்கினை சுட்டு நீராக்கினாலும் அது வெண்மையான நிறத்திலேயே இருக்கும்.
அதுபோல, மேலான குணமுடையோர் பொருள் வளம் குறைந்து வறுமையடைந்தாலும் மேன்மையான குணங்களுடனே விளங்குவர்; நற்குணமில்லாத கீழோர் கலந்து பேசி நட்புச் செய்தாலும் நண்பராகத் தகுதி இல்லாதவர்.
பால், சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாகும். மேலோர் வறுமையுற்ற பொழுதும் முன்னையிலும் சிறந்து விளங்குவர் எனப்படுகிறது.