ஒழுக்கம் உயர்வு தரும்
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி’
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர்.
மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
நீதி நூல்கள்:
நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது. அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின் வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது. இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.
ஒழுக்கக் கல்வி:
பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ் நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.
மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு எடுத்துரைக்கிறார்.
மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல் வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!