களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை - முத்தொள்ளாயிரம் 65
நேரிசை வெண்பா
களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என்அலால் யான்! 65
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
களிக்கும் யானைமேல் உலா வருபவன் தென்னன். அவன் என் கனவில் வந்தான். அவன் எனக்கு இன்பம் எதுவும் தரவில்லை. இன்பம் தருபவன் போல இருந்தான். உடனே செங்காந்தள் பூப் போன்ற என் விரல்களால் அவனைத் தடவினேன். உண்மையில் படுக்கையைத் தடவிக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர என் படுக்கையில் வேறு யாரும் இல்லை.

