சிறுகதை பெண் புத்தி முன் புத்தி

பெண் புத்தி முன் புத்தி !
சிறுகதை by: பூ.சுப்ரமணியன்

பள்ளிக்கரணை ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வாசுவும் அதில் முண்டியடித்து ஏறி, பேருந்துக்குள்ளும் நுழைந்து விட்டான். அவன் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் டிபன் பாக்ஸ்யையும் ஒரு கையில் வைத்துக் கொண்டிருந்தான். அவன் அதனை கையில் வைத்துக் கொண்டே பேருந்தில் நிற்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால், அதனை பேருந்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் யாரிடமாவது கொடுக்கலாமா ? என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவன் நின்று கொண்டிருந்த சீட்டின் அருகில் இருந்த சித்ரா என்ற கல்லூரி மாணவி, அவன் சிரமப்படுவதைப் பார்த்தவுடன் “புத்தகத்தை என்னிடம் கொடுங்க” என்று கேட்டு வாங்கி தன்னோட மடியில் வாங்கி வைத்துக் கொண்டாள்.

அவனோட நோட்டின் அட்டையில் ‘வாசு தேர்ட் இயர்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அந்தப் பேருந்து சிவன் கோவில் நிறுத்தத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த வாசு, சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்ராவைப் பார்த்தான். நிலவுபோன்ற முகம் அழகிய கண்கள், சுருள் சுருளான கூந்தல், அவள் நீலக்கலர் சுடிதாரில் ஜொலித்தாள். அவள் தன்னோட நோட்டுப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன் கையில் வைத்திருந்த நோட்டுகளையும் டிபன் பாக்ஸ்யையும் தான் சிரமப்படுவதைப் பார்த்து அவள் ‘நோட்டை என்கிட்டே கொடுங்க’ என்று கேட்டு வாங்கும்போது அவளுடைய குரலினிமையையும் அவன் கேட்டு ரசித்தான்.

அவள் கல்லூரியில் படிப்பவள் போன்றுதான் இருந்தாள். எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பாள், அவளுடைய பெயர் என்னவாக இருக்கும் என வாசு, அவளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே வரும்போது, பேருந்து நாராயணபுரம் நிறுத்தத்தில் நிற்கும்போது, படிக்கட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த சித்ராவின் தோழி “சித்ரா! நான் வரேன் இன்னிக்கி ஈவினிங் எப்போதும்போல் நாம் சந்திக்கலாம் :”என்று சித்ராவை நோக்கிக் கூறிக் கொண்டே இறங்கிச சென்றாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த வாசு, அவள் பெயர் சித்ரா என்பதையும் தெரிந்து கொண்டவன், தன்னையறியாமல் தனக்குள்ளேயே மகிழ்ந்தும் கொண்டான். தன்னோட நோட்டுப்புத்தகத்தைப் புரட்டும் அவளுடைய மென்மையான விரல்களின் அழகினையும் வாசு ரசித்துக் கொண்டிருந்தான்.

‘ரெயில்வே ஸ்டேஷன் இறங்குங்க’ பேருந்து நடத்துனர் குரல் கொடுத்தவுடன்தான் வாசு தன்னிலைக்கு வந்தவன் சித்ராவிடம் தன்னோட நோட்டுப்புத்தகம் டிபன்பாக்ஸையும் அவசரமாக கேட்டு வாங்கும்போது, அவளது மென்மையான விரல்கள், இயல்பாகவே அவனோட விரல்களையும் முத்தமிட்டுச் சென்றது. வாசு பேருந்தில் இருந்து இறங்கி விட்டாலும் , அவளைப் பற்றிய அவனது எண்ணங்கள் மட்டும், அவளோடு பயணம் செய்து கொண்டிருந்தது.

மறுநாள் காலையில், அவள் வரக்கூடிய தி.நகர் பேருந்துக்காக வாசு காத்துக் கொண்டிருந்தான். பேருந்தில் ஏறியதும் அவன் கண்கள் அவளைத் தேடியது. அவள் மட்டும் அந்தச் சீட்டில் தனியாக உட்கார்ந்து இருந்தாள். மற்ற சீட்டுகளில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து இருந்தார்கள். பேருந்தில் உட்காருவதற்கு இடம் இல்லாததால் அவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். அவன் அவளைப் புன்னகையுடன் பார்த்தான். வழக்கம்போல் அவன் நோட்டுப் புத்தகங்களுடன் டிபன்பாக்ஸ்-டன் இருந்ததைப் பார்த்த சித்ரா அவனை நோக்கி “ வாசு இங்க வந்து உட்காருங்க” என தன்னருகே காலியாக உள்ள இடத்தில் உட்காரும்படி கூறினாள். வாசு சிரித்துக்கொண்டே “பரவாயில்லை சித்ரா” என்று மறுத்துக் கூறியவனை வற்புறுத்தி அருகே உட்காரும்படி கூறினாள்.

வாசு அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு, அவளிடம் பேசிக்கொண்டு வருவதை நினைத்து மனதிற்குள்ளே மகிழ்ந்து கொண்டான். அவன் மனமும் அதை விரும்பியது. அதனை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ வாசு நீ பி.இ. எந்தக் காலேஜ்லே படிக்கிறே ? என்று கேட்டவள், தொடர்ந்து அவனிடம் உன் காலேஜ் நோட்டைப் பார்த்தேன். உன்னோட கையெழுத்து நல்லாயிருக்கு. கையெழுத்து நல்லாயிருந்தால் அவர்களின் தலைஎழுத்தும் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க “ என்று இயல்பாக தன் மனதில் தோன்றியதை சித்ரா அவனிடம் கூறினாள்.

“ நான் மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் காலேஜ்லே படித்து வரேன் . நாங்கள் பள்ளிக்கரணையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரோம்.. எனக்கு ஒரு தங்கை உண்டு அவள் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். என்னோட அப்பா டி.வி.எஸ்.லில் வேலை பார்த்து வருகிறார் ” என்று தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் அவள் கேட்காமலேயே படபடவென்று வாசு கூறினான்.

“ சித்ரா நீ என்ன படிக்கறே என்று கேட்டதற்கு அவள் பி.எஸ்.சி பர்ஸ்ட் இயர் படிக்கிறேன் “ என்று அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு அமைதியானாள்.

வாசு இன்றைய இளைஞன் நினைப்பதுபோலவே சித்ரா தன்னிடம் சிரித்துப்பேசியதை நினைத்து, தனக்குள்ளே மகிழ்ந்தான். திரைப்படத்தில் வருவதுபோல் அவன் சித்ராவுடன் டூயட் பாடி கற்பனையில் மிதந்தான். கற்பனையில் அவளோடு வாழ்ந்தான். ஆனால் தன் விருப்பத்தை அவளிடம் கூறுவதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. நாள்தோறும் தி.நகர் பேருந்தில் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். சித்ரா அவனிடம் அளவோடு பேசியதால், அவனைப்பற்றி அவளது உள்ளத்தில் இருப்பதைப் பற்றி எதுவும் அறிந்து கொள்வதற்கு அவனால் முடியவில்லை. அவன் தினமும் அவளோடு கைபேசியில் பேசி மகிழ்ந்தான். அன்று வெள்ளிகிழமை வாசு கைபேசி மூலம் சித்ராவிடம் “சித்ரா நாளைக்கு பீச்சுக்கு போகலாமா? நீ பீச்சுக்கு வருகிறாயா?” என்று துணிந்து கேட்டு விட்டான்.

சித்ராவும் மறுப்பு எதுவும் கூறாமல், நாளைக்கு பீச்சுக்கு எத்தனை மணிக்கு எந்த இடத்தில் சந்திக்கலாம் என்று விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ‘எதற்கு என்னை திடீரென்று பீச்சுக்கு வரும்படி வாசு கூறுகிறான். இரவு முழுவதும் அவள் சிந்தித்துக் கொண்டே மனக்குழப்பத்துடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள். அவன் தன்னிடம் பேசும்போதும் பழகியவிதமும் நல்ல நாகரீகமாகவே நடந்து கொள்கிறான். அவனைப் பற்றி தவறாகவும் நினைக்கவும் முடியவில்லை. ஒருவேளை நான் அவனிடம் இயல்பாக பேசுவதை வைத்து இன்றைய ,இளைஞர்கள்போல் என்னைத் தவறாக நினைத்து விட்டானா ?என பலவிதமான சிந்தனைகளுடன், சித்ரா தூங்கி விட்டாள்.

மறுநாள் மாலை நான்கு மணிக்கு வாசு வரச் சொல்லியபடி சித்ரா பீச்சுக்கு கிளம்பினாள். அவள் அம்மாவிடம் அனுமதி பெற்று கிளம்பும்போது, அவள் சித்ராவிடம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடும்படி கூறினாள். தன் மகள் சித்ரா மீது அவள் அம்மாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது.

பீச்சில் உழைப்பாளர் சிலை அருகில் உட்கார்ந்துகொண்டு , சித்ராவின் வரவை ஆவலுடன் வாசு எதிர்பார்த்து காத்திருந்தான். அவளிடம் இன்று ‘ தன் காதலை தெரிவித்து விட வேண்டும். அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாளா? அவள் என்னிடம் நெருங்கிப் பழகிப் பேசுவதைப் பார்த்தால், நிச்சயமாக என்னைக் காதலிப்பாள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவளும் தன்னோட காதலை என்னிடம் தெரிவிக்க தைரியமில்லாமல் மனசுக்குள் வளர்த்துக்கொண்டிருப்பாள். அவளிடம் என் காதலைத் தெரிவிக்க இதுவரை எனக்கே தைரியம் வரவில்லையே, பெண் அவளுக்கு எப்படித் தைரியம் வரும்’ ?...
“வாசு நீ வந்து ரெம்ப நேரம் ஆகி விட்டதா?” என்று சித்ராவின் குரல் கேட்டு, சிந்தனையிலிருந்து மீண்டான். இருவரும் பீச்சில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். சித்ராவின் முகத்தையே வாசு பார்த்துக் கொண்டிருந்தான்.

“ என்ன வாசு ? இன்னிக்கி ஏதோ முக்கியமான விஷயம் பேசுவதாகக் கூறி விட்டு, என்னோட முகத்தையே பார்த்து கொண்டிருந்தால் எப்படி? பேசு வாசு ! என்ன விஷயம் சொல்ல வந்தாய் ? தயங்காமல் கூறு “ என அவனைப் பார்த்து கூறினாள்.

வாசு பெஞ்சை விட்டு எழுந்து நின்றவன் அவளைப் பார்த்து ” சித்ரா ஐ லவ் யூ “ என கூறிவிட்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்ரா இரு கைகளையும் தட்டிக்கொண்டு “ வெரி குட் வாசு. ஐ லவ் யூ . நம்ம கல்யாணத்தை எப்ப எங்கே வைத்துக் கொள்வோம்? ஹனிமூன் எங்கு போகலாம் ?“என்று சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கேலியாக கேட்டாள்.
வாசு “என்ன சித்ரா இப்படியெல்லாம் கேட்கறே பேசறே ! “ எனக் கேட்டான் தயக்கத்துடன்

“ பிறகென்ன எப்படி உன்னிடம் பேசச் சொல்லச் சொல்றே ! முதலில் ஐ லவ் யூ ன்னு சொல்வே. என்னைத் தினமும் பீச்சுக்கு வா ஜாலியாக இருப்போம்னு சொல்வே பிறகு ரூம் எடுத்து நாம் ஜாலியாக இருப்போம்னு சொல்வே. உன் எல்லா வெறியும் முடிந்தபின் வேறு ஒரு பெண் அழகாக பஸ்லே வந்தால் அவள் பின்னாடி போயிடுவே..”

“என்ன சித்ரா சம்பந்தமில்லாமல் பேசறே? “

“ சரி வாசு , நான் உன்னோட வழிக்கே நான் வரேன். நீ மிகவும் நல்லவன் என்னை கை விட்டு விட மாட்டேன்னும் உன்னை நான் நம்பறேன். ஒரு பேச்சுக்காக நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கோவோம்னு வைத்துக் கொள்.. இப்போதைக்கு நீ எப்படி எந்த வேலை பார்த்து என்னையும் உன்னையும் காப்பாத்துவே. நீயே உன் அப்பா அம்மா உழைப்பிலே இப்ப சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது நம் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றியாவது நீ யோசித்தாயா ? உன்னையெல்லாம் சொல்லிக் குற்றமில்லை நீ என்ன செய்வே இப்போது வரக்கூடிய சினிமாக் கதையெல்லாம் வன்முறைகள் பற்றியும் காதலிப்பது பற்றியும் காட்டி சமூகப் பொறுப்பற்ற தன்மையில்தான் வருது. “

சித்ரா மேலும் தொடர்ந்தாள். “ ஒரு பெண் உன்னைப் போன்ற காலேஜ் பசங்களிடம் தப்பித்தவறி சிரித்துப் பேசிடக் கூடாது. பேசினால் அந்தப் பெண் நம் மீது காதலென, தவறாகவே எண்ணி அவளிடம் பேசி பழக ஆரம்பித்து விடுகிறீர்கள். நான் உன் நடவடிக்கைகளைப் பார்த்துதான் பேசி பழகினேன். ஆனால் வாசு நீயும் இந்தக்கால காலேஜ் மாணவன்தான் என்பதைப்போல் என்னிடம் காட்டிவிட்டாய். ஒரு பெண் உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு உதவியோ, அவர்களிடம் இயல்பாக பேசி சிரித்தோ பழகக்கூடாதோ..! என்ன கொடுமையப்பா..”என்று தலையில் மெதுவாக அடித்துக்கொண்டே கூறினாள்.

“சித்ரா...” என வாசு ஏதோ கூறுவதற்கு வாயெடுத்தான்....

“ வாசு ! நீ எதுவும் கூறி என்னைச் சமாளித்துப் பேச வேண்டாம். வாசு நான் சொல்வதைக் கேட்டு நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். நம்மோட பெற்றோர்கள் நம்மை எவ்வளவு எதிர்பார்ப்புட்ன் கல்லூரியில் சேர்த்திருப்பார்கள். நீ பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாய். நீ படிப்பதை விட்டு விட்டு காதல் கீதல் என்று உன் மனதை அலைபாய விடாதே. அவ்வாறு மனம் அலைபாயும்போது, உன் அப்பா அம்மா உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதை நினைத்துப் பார்த்துக் கொள். உன் கவனமெல்லாம் படிப்பிலும் , படித்து முன்னேற வேண்டிய வழிமுறைகளில்தான் உன்னோட கவனம் செல்லவேண்டும். நீ உன் சொந்தக்காலில் நின்ற பிறகுதான் காதல், கல்யாணம் பற்றி எல்லாம் யோசி. இப்போதைக்கு காதலைப் பற்றி மனதில் நினைப்பதற்கும் கூட இடம் கொடுத்து விடாதே . அது உன்னைப் படுகுழியில் தள்ளி விடும். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே உன் நன்மைக்குதான் இதையெல்லாம் சொல்றேன். நான் சொல்வது உனக்கு இப்போது நல்ல புரிந்திருக்குமென நெனைக்கிறேன்“என்று வாசுவிடம் கூறி முடித்தாள்.

“சித்ரா எனக்கு சரியான நேரத்தில் எனக்கு நல்ல வழியைக் காட்டி விட்டாய் இந்த நிமிடம் முதல் என் கவனமெல்லாம் நீ கூறியதைப்போல படிப்பிலும் என் குடும்ப முன்னேற்றத்திலும் சமூகப் பொறுப்புள்ள மாணவனாக நடந்து கொள்வேன் என உனக்கு உறுதி அளிக்கிறேன். பெரும்பாலும் உலகில் பெண் புத்தி பின் புத்தி என்றுதான் கூறுவார்கள். உன்னையும் நீ இப்போது என்னிடம் பேசுவதையெல்லாம் நான் கேட்டபின்பு ,பெண் புத்தி முன் புத்தி என்றுதான் எனக்குக் கூறத்தோன்றுகிறது. சித்ரா ! நான் இதுவரை உன்னிடம் எதுவும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து கொள். நாம் எப்போதும்போல் நல்ல நண்பர்களாக இருப்போம் “என சித்ராவை நோக்கி மகிழ்ச்சியுடன் தன்னோட கையினை நீட்டினான்.

சித்ராவும் “ விஷ் யூ ஆள் தி பெஸ்ட் “ என மகிழ்ச்சியுடன் கை குலுக்கினாள்.

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (5-Dec-17, 12:05 pm)
பார்வை : 308

மேலே