பெண் – 1960
பிறக்கும் போதே
பெண் என தனி பேதம் தந்தீர் !
சில காலம் மட்டும் குழந்தை என்றீர்
அதே,
பருவம் வந்தவுடன் பாவை என்றீர் !
முழுமையாய் வளரும் முன்னே
பல அர்த்தமற்ற
வரைமுறை கொண்டீர் !
நீ விதித்த விதிமுறைகள்
அவளை
வீதி வரை கூட வர
அனுமதிக்கவில்லை !
உன் குல விளக்காய் அவளை
நீ நினைத்ததால் தான் என்னவோ !
அக்னி பறவையாய் பறக்க
வேண்டியவள்,
வீட்டின் உள்ளே மட்டும்
தன் ஆசைகளை எரித்து
ஒளி தந்தால் !
ஓடாதே என்றாய்!
அதே சமயம்
வேகமாக நட என்றாய் !
தலை நிமிர
தடை விதித்தாய்!
இருந்தாலும்
பார்த்து செல் என
பாடம் உரைத்தாய் !
சத்தமில்லாமல் இருப்பது
அவள் புன்னகை மட்டும்மல்ல
அழுகையும் தான்!
மாத்தில் மூன்று நாள்
மண் புழுவாய் தான் வெறுத்தீர்!
வலியால் துடித்தாலும்
வாசல் ஓரம்
தனிப்படுக்கை தான் கொடுத்தீர் !
இதுவெல்லாம் போதாதென
கண்ணை மூடி விழித்து
யார் என்று கேட்டால்?
இவன்தான் உன் கணவன்
என்றீர்!
சுற்றி திரிந்த வீடும்
உனதில்லை.
வளர்த்த தாய் தந்தையும்
இனி முதல் இல்லை என்றீர் !
இனி இது தான்
நீ புதிதாக வாழப் போகும்
இடம், வாழ்க்கை என்றீர் !
அடுத்த நிமிடமே
என்னோடும்,
எனக்காவும்,
என் குடும்பத்தினர் அனைவருக்காகவும்
நீ உன் வாழ்க்கையை
வாழப் போகும்
இடம் என்றீர்!
புதிர் கொண்டு நின்றிட
சட்டென்று
என் உடற்ச்சதை காண
நாள், நொடி, நேரம் மற்றும்
நீர் விதித்த விதிமுறைகள்
தான் தளர்த்தி
திடீரென
என் உடல் மீது
உரிமை கொண்டீர்!
நீர் தீட்டாய் கருதிய உதிரம்
உறவில் உதிராவிட்டால்
சிறிதும் கூச்சமின்றி
இவள் உத்தமியே
இல்லை என்றீர் !
காதல் இல்லா காமம்
கண் மறைக்க
கணவிலும்
காணாத வலி தந்தீர் !
உன் தாய் தந்தையை
சில நொடி காணாவிட்டாலும்,
என் தாய் தந்தையை
பல மாதங்களுக்கு
ஒரு முறை காணக் கேட்டாலும்,
கரித்து கொட்டுனீர் !
மாதங்கள் செல்லா முன்
எங்கே மழலை?
என்றீர்
இன்னும் சில மாதங்கள்
சென்ற உடன்
மலடி என்றீர் !
கருவுற்று நின்ற நொடி
சிசுவிற்க்காக சிரித்தீர்!
அன்பு, அக்கறை, பாசம்
என பொய் வேஷம்
பல போட்டீர்!
பத்து திங்கள்
கழித்து பிறக்கும்
பிள்ளையே ..
நீயாவது
என்னைப் போல்
பெண்ணாய் பிறக்காமல்
ஆண் மகனாய் பிறந்திடு ..!
உன்னையாவது
பெண்னை சக மனிதியாய் பார்க்கும்
மனிதனாய் வளரத்திட ..!
– குரு

