அன்னையர் தினம்

நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள் எனச் சார்லி பென்னடோ கூறுவார்.

அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது. இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது.

அது எவ்வாறான நேசம் என்றால், நம்மிடம் திரும்பி எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை பொழிந்து கொண்டிருக்கும் நேசம் ஆகும்.

நாம் யார் யாரிடமோ நாம் அவர்களை நேசிக்கிறோம் எனக் கூறுகிறோம். ஆனால், ஒரு முறையாவது நம் தாயிடம் அவளை நேசிப்பதாகக் கூறி இருக்கிறோமா.

அந்த வார்த்தைகளைத் தவிர அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

எந்த ஒரு தாயிடம் கேட்டாலும் அவள் கூறுவாள், குழந்தைகளைப் பெற்றெடுப்பதை விடக் கடினமானது அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பது தான் என்று.

இதற்கு ஒரு சினிமா ப் பாடலே உதாரணம் காட்டலாம்.
‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’‘
வளர்ப்பு என்பதில் கூடத் தந்தையின் வளர்ப்பை அவர்கள் குறிப்பிடவில்லை. தாயின் வளர்ப்பையே குறிக்கிறார்கள்.

ஏனென்றால் பிறப்பின் பின் அக்குழந்தைக்கு விவரம் தெரியும் வரை தாயிடமே இருக்கின்றது. தாயைப் பார்த்துதான் உலகத்தைக் கற்றுக் கொள்கிறது. தாயைப் போலத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது.
ஆனால் குழந்தை எவ்வாறான மனிதன் ஆகப் போகின்றான் என்பதையே தாய் தான் தீர்மானிக்க வேண்டும்.

புரிதலும் தாயிடம் தான் அதிகமாக நடைபெறுகின்றது.

தன் மகன் அல்லது மகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தாயால் புரிந்து கொள்ள முடியும். அதேபோல நமக்குப் பிடித்தவை பிடிக்காதவை உடம்பிற்குத் தீங்கு விளைவிப்பவை என அனைத்தையும் தாய் அறிவாள்.
நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றே தாய் முதலில் நினைப்பாள்.
நாம் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து வீடு திரும்பும்பொழுது, வாசலிலேயே துண்டுடன் நின்று,

‘‘அப்பவே குடை எடுத்துட்டுப் போகச் சொன்னேன், கேட்டியா’‘ எனத் திட்டுவதும் தாய்தான்.

நமக்கு அடிபடும் பொழுது நம்மைவிட வலியால் அதிகம் துடிக்கும் ஒரே நபரும் நம் தாயாகத் தான் இருக்க முடியும்.

ஒரு மகனுக்கும் சரி ஒரு மகளுக்கும் சரி அவர்கள் தாய் மேல் வைத்திருக்கும் அன்பு வேறுபடுகிறது.

மகனோ சிறுவயதில் இருந்தே தாயை நேசிக்கின்றான். அவள் அருகிலேயே நாட்களைச் செலவழிக்கின்றான்.

‘‘சாப்பாடு வேணும், என் யூனிபார்மை துவச்சாச்சா, என் பொம்மையைத் தேடித்தா, கால்ல இடிச்சுகிட்டேன், இந்தாம்மா மார்க் சீட் சைன் போட்டு விடு’‘ என அனைத்தையுமே அவன் தாயிடம் தான் சொல்கிறான். கேட்கிறான்.
தந்தையிடம் அவன் கேட்டது ஒன்று தான் ‘‘அப்பா அம்மா எங்கே?’‘
இவ்வாறாகத் தாயின் செல்லப்பிள்ளையாகவே அவன் வளர்கிறான்.
ஆனால், மகளோ தன் சிறு வயதிலெல்லாம் தந்தை உடனே களிக்கிறாள். அவளுக்குத் தந்தைதான் அவளது சூப்பர் ஹீரோ. வெளியே கூட்டிக் கொண்டு போகச் சொல்வது, எதாவது வாங்கித் தர சொல்வது என எல்லாமே தந்தையிடம் தான்.

அவ்வயதில் அவள் தாயை கண்டு கொள்வதே இல்லை. ‘‘ஐஸ்கிரீம் வேண்டாம்’‘ என்றால் தாய் கெட்டவள்.

அடம் பிடிப்பதைப் பொறுக்காமல் அதை வாங்கித் தரும் தந்தையோ நல்லவர். ஆனால் யார் உண்மையிலேயே நன்மை செய்கிறார்கள் என அவருக்கு அப்பொழுது தெரிவதில்லை.

ஆனால் வளர்ந்த பிறகு அனைத்துமே மாறி விடுகின்றது.

அதுவும் மகள்களுக்குத் தாங்களும் தாய் ஆகும் நிலையில்தான் அவர்களின் அம்மாக்களின் மகிமை தெரிகின்றது.
அதன் பிறகு அக்கடவுளே நினைத்தாலும் அம் மகளையும் தாயையும் பிரிக்க இயலாது.

தன் மகளோ மகனோ செய்யும் ஒவ்வொன்றையும் பார்க்கும் பொழுதுதான், ‘‘நாமும் நம் அம்மாவை இப்படித்தானே திட்டி இருப்போம் கஷ்டப்படுத்தி இருப்போம். ஆனால் அவள் எங்கள் மீது ஒருபோதும் கோபம் கொண்டதில்லையே’‘ என உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்கள் செய்தது சரி என உணரும் வேலையில், அவர்களைத் தவறாக நினைக்கும் பிள்ளைகள் அவர்களுக்கு வந்து விடுகின்றார்கள்.

அதேபோல, மகனோ தன் மனைவி வரும் வரை தான் தாயின் அருகில் இருக்கிறான். அதன்பிறகு அவன் தாயின் கருத்துக்கள் இரண்டாம் நிலைக்குச் சென்று விடுகின்றன. மனைவி தான் முதல் என அவன் மாறிப் போகின்றான்.

ஆதலால் தான் ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

மகன் தனக்குத் திருமணம் நடைபெறும் வரை தான் தாய்க்கு மகனாக இருக்கிறான்.

ஆனால், ஒரு மகளோ வாழ்நாள் முழுவதும் தாய்க்கு மகளாகவே இருக்கிறாள்.

வாழ்வில் எந்த ஒரு சூழலிலும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அன்று நம் பெற்றோர்கள் இல்லையென்றால் இன்று நாம் இல்லை. அவர்கள் தான் நமக்கு உயிர் அளித்த தெய்வங்கள். அவர்களை நாம் என்றுமே மறக்கவோ உதாசினப் படுத்திவிடவோ கூடாது. ‘‘

அதிலும் தாய் ஆனவள் ஒருபடி மேல் தான். தன் உடலில் பாதி மட்டும் அளிக்காமல், அவளது உயிர் அன்பு வாழும் காலம் அனைத்தையும் நமக்காக அளிக்கும் அவளை நாம் தெய்வமாகவே எண்ண வேண்டும்.

என்றுமே தாய் ஆனவள் நம் உடலில் ஓர் அங்கம்தான். நமக்குள்ளும் ஒருவராகவே அவளை நினைக்க வேண்டும். தினமும் நினைக்க வேண்டும் என்றாலும், அன்னையர் தினம் அன்றாவது அவளிடம் நாம் இதைக் கூறுவோம்.

‘‘இவ்வுலகை பொறுத்தவரை நீ எனக்குத் தாய் ஆனால் என்னைப் பொறுத்தவரை நீ தான் என் உலகமே”

எழுதியவர் : (7-Dec-17, 4:11 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : annaiyar thinam
பார்வை : 1295

மேலே