பணமே வெல்லும்

“இந்தியாவில் மக்கள் மத்தியில் சமூகம் பற்றிய அக்கறையை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. வாழ்க்கையை விட்டு விட்டு பணமே வாழ்க்கையாக நாம் வாழ ஆரம்பித்து நெடுங்காலமாயிற்று.” என்கிறார் அதுல் சதீஜா. "தி நட்ஜ் பவுண்டேஷனின்" (The Nudge Foundation) நிறுவனர், இன்மொபி (InMobi) நிறுவனத்தின் முன்னாள் முதன்மை வர்த்தக ஆலோசகர். அவரது நட்ஜ் பவுண்டேஷன், (அவரே கூறுவதைப் போல) வறுமையில் இருப்பவர்களை அதில் இருந்து வெளியேறத் தூண்டும் ஒரு சமூக அமைப்பாகச் செயல்படுகிறது.

இந்தியா உலகிலேயே அதிகமான ஏழைகளைக் கொண்ட நாடாக இருக்கிறது என்று கூறும் அதுல், வறுமை ஒழிப்புக்கான, ஸ்திரத்தன்மை வாய்ந்த, பல்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்கிறார். அதற்கு ஒவ்வொருவருக்கும் 360 டிகிரி உச்சபச்ச திறன் பயிற்சியை அளிக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறது நட்ஜ் பவுண்டேஷன். “பல அமைப்புகள் அல்லது குழுக்கள் கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் குவிக்கின்றன. ஆனால் வாழ்நாள் முழுவதும் ஒருவர் வறுமை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதை அவை உறுதி செய்யவில்லை” என்கிறார் அதுல்.

வாகன ஓட்டி ஒருவரின் வாழ்க்கையில் நேர்ந்ததை அதுல் இதற்கு உதாரணமாகக் கூறுகிறார். "அந்த வாகன ஓட்டி ஒருமுறை ஒரு பெரிய விபத்தில் சிக்கினார். மாதக்கணக்கில் அவர் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது. வருமானம் பாதிக்கப்பட்டது. மருத்துவக் கட்டணம் செலுத்த முடியவில்லை. அவர் விபத்துக் காப்பீடு செய்திருக்கவில்லை. சேமிப்பும் இல்லை. கடைசியில் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த தனது கார்களை விற்க நேர்ந்தது.”

தற்போது, வாழ்வாதாரத்திற்குத் தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் அது போதாது என்பது அதுலின் கருத்து. “பெரும்பாலானவர்கள் ஒரு வேலையில் இருந்து மற்ற வேலைக்குத் தாவிக் கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் இப்படி மாறிச் செல்வதற்கு எந்த ஒரு லட்சியமோ அல்லது வேலைக்குரிய பொறுப்போ இருப்பதில்லை. சம்பளம் குறைவான வேலையில் இருந்து, அடுத்த வேலைக்கு அவர்கள் தாவிச் செல்ல காரணம் இதுதான்.” என்கிறார் அவர்.

இன்மொபி நிறுவனத்தில் தலைமை வருவாய் அலுவலராக பணியாற்றிய போது, சமூகத் தளத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினார் அதுல். சமூகம்சார் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற அவரது காதல் முதலில் "எண்ட் பாவர்ட்டி" (EndPoverty) நிறுவனத்தில்தான் தொடங்கியது. அந்த நிறுவனத்தில் ஒரு தன்னார்வத் தொண்டராக பணியாற்ற ஆரம்பித்து பிறகு அதன் தலைவராக உயர்ந்தார் அதுல். சமூகத்தின் அடிமட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதில், அதுலுக்கு ’என்ட் பாவர்ட்டி’ நிறுவனத்தில் ஆரம்ப நிலை பயிற்சி கிடைத்தது.

“ஆரம்பித்த புதிதில் நான் கல்வித் துறையில்தான் கவனம் செலுத்தினேன். ஏனெனில் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ள கல்வி அவசியம் என்பது என் நம்பிக்கை. எனது குழுவினரும் மருத்துவ முகாம்களைத்தான் வலியுறுத்தினர். என்ட் பாவர்ட்டி நிறுவனம் தத்து எடுத்திருந்த கிராமத்தில் இளம் வயதிலேயே பார்வை இழக்கும் கொடுமையை பெண்கள் சந்தித்தனர். அவர்களின் உணவில் விட்டமின் குறைபாடு இருந்தது. இந்தக் காரணத்தால் நானும் எனது குழுவினர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன். 25 வயதுக்குப் பிறகு பார்வை பெற்று, வெளிச்சத்தை தரிசித்த ஒரு பெண்ணைப் பார்த்த போது ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே அதை விவரிக்கவே முடியாது” என்கிறார் அதுல்.

கல்வி விஷயத்தில் நீங்கள் மக்களிடம் நம்பகத்தன்மையை பெற, அவர்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்ய, கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனால் உடல் ஆரோக்கிய விஷயம் அப்படி அல்ல. அதில் நீங்கள் இறங்கி செயல்படுவது அவர்களது நம்பிக்கையைப் பெறுவதற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

இந்த அனுபவங்களும், சமூகப் பணியின் மீது இருந்த பேரார்வமும் உந்தித் தள்ள தி நட்ஜ் பவுண்டேஷனை ஆரம்பித்தார் அதுல். பி.டி. அண்ட் அல்கடெல்-லுசென்ட் (BT & Alcatel-Lucent) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அருண் சேத், தற்போது நட்ஜ் பவுன்டேஷனின் ஆலோசகராக இருக்கிறார்.

“கிரே காலர் பணிகள் எனப்படும் தகவல் தொழில்நுட்பம்(ஐ.டி.) போன்ற பணிகளில் எந்த அளவுக்கு திறன் பற்றாக்குறை இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது, திறன் வளர்ப்பு மட்டுமே இந்தியாவை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்க ஒரே வழி என்று நான் நம்புகிறேன். ஆனால் தீர்வுகாணப்படாத மிகப்பெரும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. நட்ஜ் பவுண்டேஷன் சரியான துறையில் சரியான விருப்பத்தோடு கவனம் செலுத்துகிறது. சமூக மட்டத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத் தளத்திலும் இதில் உள்ள சாத்தியக் கூறுகள் என்னை சந்தோஷப்படுத்துகின்றன.” என்கிறார்.

நட்ஜ் மூலமாக 'குருகுலம்' போன்ற ஒரு பள்ளியை தொடங்கி, அதன்மூலம் தனி மனித மேம்பாட்டுக்கான மென் திறன் பயிற்சி அளிக்க விரும்புகிறார் அதுல். “வெறுமனே வன்திறன் பயிற்சிகள் (தொழில் பயிற்சி போன்றவை) பயனளிக்காது” என்கிறார் அதுல். முறையான பள்ளிப் படிப்பு கிடைக்கப் பெறாத மக்களுக்கு வெறுமனே தொழில் பயிற்சி பயன்படாது என்பது அவரது கருத்து. “முறையான பள்ளிப் படிப்பு என்பது 15 ஆண்டுகால சமூகத் திறன் பயிற்சி மற்றும் தேவையான மென் பயிற்சிகளுக்கு இணையானது” என்கிறார் அவர்.

”பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வரும் அவர்கள், வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கின்றனர். அடிப்படை சுகாதாரமும் சுத்தமும் அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். இது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்கு 15 வருட பள்ளி வாழ்க்கையில் கிடைத்தது. பள்ளிப் படிப்புக்கே வாய்ப்பில்லாத அவர்கள் நம்மைப் போல் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது நியாயமல்ல.” என்கிறார் அதுல்

“அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மாதத்திற்கு 10 லட்சம் புதிய பணியாளர்கள் வீதம் அதிகரித்துக் கொண்டிருப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார் அதுல். “தொழிலில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்குவதற்கான முன் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் தங்களின் சாதாரண நடவடிக்கைகள் குறித்து புரிந்து கொள்ளவும் மதிப்பிடவும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.” என்கிறார் அவர். "வெறுமனே தொழில் பயிற்சி என்பது, குறைந்த உற்பத்தித் திறனையே அளிக்கும். அவரால் வேலையில் அடுத்த படிக்குச் செல்ல முடியாது. ஆற்றல் வீண் விரயமாகும்." என்று அதுல் விளக்குகிறார்.

நட்ஜ் பவுண்டேஷன் தற்போது இன்மொபி அலுவலக வளாகத்தில்தான் இயங்கி வருகிறது. இன்மொபியின் நிறுவனரும் தலைமை செயல் தலைவருமான நவீன் திவாரி, நட்ஜ் பவுண்டேஷனின் ஆலோசர்களில் ஒருவராக இருக்கிறார். இது பற்றி நவீன், “அதுலும் நானும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவரது பேரார்வம்தான் நட்ஜ் பவுண்டேஷன். அதுலின் திட்டமிடும் திறனும் விரிவான அளவில் அதை செயல்படுத்தும் பாங்கும் நட்ஜ் பவுண்டேஷனில் இணைந்திருக்கின்றன. அவரின் அர்த்தமுள்ள பயணத்தில் நானும் ஒரு பங்கேற்கிறேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷமளிக்கிறது.” என்கிறார்.

“ஒவ்வொருவருக்கும் வறுமையில்லாத, அந்தஸ்து மிக்க வாழ்க்கை வாழத் தகுதி உள்ளது” என்கிறார் அதுல். அவரின் இந்த கருத்துதான் நட்ஜ் பவுண்டேஷனின் நோக்கம். நட்ஜ் பவுண்டேஷனின் குருகுலம் ஒரு, உண்டு உறைவிடப் பள்ளி. சமூக மேம்பாடு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம், தனிமனித முன்னேற்றம், குடும்ப மேலாண்மை, நிதி மேலாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீது இந்த குருகுலம் கவனம் செலுத்துகிறது.

வாசித்தல், எழுதுதல், ஆங்கிலத்தில் பேசுதல் மற்றும் எழுதுதல், வேலைத் தளத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம், எண் அறிவு போன்ற கல்வித் திறன்களிலும் நட்ஜ் பவுண்டேஷன் கவனம் செலுத்துகிறது. கரடி பாத் (Karadi Path), இங்கிலீஸ் லீப் (English Leap) போன்ற நிறுவனங்கள், இந்த பவுண்டேஷனின் கருத்துரு பங்குதாரர்கள் (content partners). பவுண்டேஷன் தனது திட்டத்திற்குள் தொழில் திறன் பயிற்சியும் அளிக்கிறது. “பெரியவர்களுக்கு பள்ளி வாழ்க்கை ஒன்றை அது உருவாக்கித் தருகிறது. பட்டதாரி மாணவர்களுக்கு உதவும் வாழ்வாதார திட்டமும் எங்களிடம் உண்டு” என்கிறார் அதுல்.

அடுத்து வரும் மாதங்களில் சொந்தமாகவும் பிற தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் குருகுலங்களை அமைக்க நட்ஜ் பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல் மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் குருகுலத்தின் கிளைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நட்ஜ் பவுண்டேஷன் நிர்வாகக் குழுவில் (board) அங்கம் வகிக்கும் இன்மொபியின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) மனிஷ் துகார் கூறுகையில்,”யாரோ ஒருவர் தனது வாழ்நாள் பணியில் அனைத்தையும் தியாகம் செய்யும் பொழுது, அதைப் பார்த்து மேலும் பலர் தன்னலம் துறந்து அவருடன் இணைகின்றனர். அது ஒரு தாக்கம். இந்தக் குழுவின் மீது ஏற்படும் நம்பிக்கை. தகுதியும் திறமையும் உள்ள, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களை முன்னேறச் செய்து வறுமை இல்லாத வாழ்க்கை வாழச் செய்வார்கள் என்ற நம்பிக்கை. இந்த வெற்றிக்கு ஏதோ ஒரு விதத்தில் என்னால் பங்களிக்க முடியுமானால், அதுவே என்னை மகத்தான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.” என்கிறார்.

குளோபல் எக்சியோமி யின் விபி, ஹூகோ பாரா, வாட்ஸ் அப் விபி , நீரஜ் அரோரா, பேடிஎம் (Paytm) மற்றும் ஒன்97 நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா போன்றோர் தி நட்ஜ் பவுண்டேஷன் நிர்வாகக் குழுவில் (boardல்) இடம் பெற்றுள்ளனர்.

எழுதியவர் : (7-Dec-17, 4:07 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : paname vellum
பார்வை : 1236

மேலே