கிராமப்புற வாழ்க்கை
ஆரோக்கியத்துக்கு கிராமப்புற வாழ்க்கை தான் சிறந்ததா?
போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையோரங்களின் அருகே வாழ்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மூளை நோயால் விளையும் மனநல பாதிப்பு உருவாவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்த செய்தியை அடுத்து, தூய்மையான, போக்குவரத்துநெரிசல் இல்லாத கிராமப்புறங்களில் வாழ்வது குறித்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா? அப்படியென்றால், நீங்கள் தனியாக இல்லை, பலருக்கும் இதே எண்ணம் தோன்றியது என்பது உண்மை.
ஆனால் உண்மை நிலை என்ன? நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமத்தில் வாழ்வது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?
டிமென்ஷியா ஏற்படுவதற்கான காரணங்களைப் போன்றே, இது ஒரு எளிமையான கேள்வி அல்ல, மேலும் இதற்கு தெளிவான பதில்களும் இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால், கிராமப்புறத்துக்கு தப்பி ஓடுவது சிறந்த வழி என்று தோன்றும்.
ஐக்கிய ராஜ்யத்தை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அங்குள்ள மக்கள் தொகையில், கால் பகுதிக்கும் குறைவானவர்களே கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
அங்குக் காற்று தூய்மையானதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் குறைவானதாகவும், காற்று மாசு குறைவானதாகவும் உள்ளது. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய், சுவாச நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் காற்று மாசு கிராமப்புறத்தில் ஒரு விஷயமாக இல்லை.
அங்கு திறந்த வெளி இருப்பதால், வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. நடைப் பயிற்சி மேற்கொள்ள நீண்ட பாதைகள், பசுமையான சுற்றுச்சூழல் என்றெல்லாம் கனவு கண்டது நினைவுக்கு வருகிறதா?
நீண்ட கால வாழ்க்கை
''காற்று மாசு பிரச்சனை என்றால், கிராமப்புறத்தில் வாழ்வதுதான் உங்களுக்குச் சிறப்பானது, '' என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இதய நோய் துறை பேராசிரியர் டேவிட் நியூபி.
பரபரப்பான சாலைகளில் இருந்து தொலைவில் வசிப்பதால், அந்த வாழ்க்கை உங்களுக்கு, நெரிசலான சாலைப் போக்குவரத்தில் வெளியாகும் சிறிய துகள்கள் மற்றும் வாயுக்கள் மூலம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.
பேருந்துகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நெரிசலான போக்குவரத்து ஆகியவை மாசடைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் ஆபத்துகளை அதிகப்படுத்தும் என்றாலும், உங்களது ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆபத்தான நிலையைக் குறைக்க நீங்கள் வெகு தூரம் சொல்லவேண்டியது இல்லை என்கிறார் நியூபி.
முக்கிய சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் நீங்கள் வாசித்தால் அது மோசமான ஒன்று. ஒரு பூங்கா போன்ற பசுமை நிறைந்த பகுதிக்கு அருகே நகர்வது நல்லது,'' என்றார் அவர்.
''கிராமப்புறத்தில் வாழ்வது குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் ஆரோக்கியமானது,'' என்கிறார், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார துறை பேராசிரியர் ராய் ஹாரிசன்.
காற்றில் உள்ள மாசுபாடுதான் , பிரிட்டன் முழுவதும் உள்ள மக்களின் சராசரியான வாழ்நாளில், அவர்கள் ஆறு மாதங்களை இழக்க காரணம் என்றும் பெரும்பாலும் நகர்ப் பகுதிகளில் வாழ்வதுதான் அதற்கு வழிவகுக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.
நகர்ப் பகுதிகளோடு ஒப்பிடும் போது,பெரும்பாலான தொலைதூர கிராமப்புறங்களில், பாதி அளவு தான் காற்று மாசுபாடு உள்ளது. நகரப் பகுதிகளை காட்டிலும், ஊரக பகுதிகளில்தான் சுகாதார நிலை சாதகமானதாகவும் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை காட்டுகிறது.
குழப்பமான சித்திரம்
ஐக்கிய ராஜ்யத்தில் கிராமப்புறங்களில், சராசரி ஆயுட்காலம் அதிகமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாகவும், அகால மரணங்களை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள் மூலம் நீங்கள் இழக்கும் வாழ்நாள் குறைவு என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் இது முழுக் கதையையும் சொல்லவில்லை. கிராமம் மற்றும் நகரத்திலும் வறுமை நிலையில் வாழ்வதில் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.
ஒரு நகரத்தில் வாழ்பவரைக் காட்டிலும், கிராமப்புறத்தில் வாழும் ஒரு நபர் நீண்ட நாள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது. பசுமை நிறைந்த ஒரு புறநகர் பகுதியில் வளர்ந்த ஒரு நபரோடு ஒப்பிட்டால், நகர்ப் புறத்தில் வறுமையில் வாழும் ஒரு நபரின் வாழ் நாள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்.
பிரிட்டனின், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 2010 ல் வெளியான அறிக்கையின்படி, வறுமையைக் கணக்கில் கொண்டால், கிராமப்புறத்தில் சராசரி வாழும் காலம் அதிகமாகவும், அதே நேரத்தில், அதிக செல்வம் படைத்த நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் வாழ்நாள் அதைக் காட்டிலும் மிக அதிகமானதாகவும் உள்ளது.
பசுமை மற்றும் இனிமையான வாழ்க்கை?
பசுமை மற்றும் அமைதி நிறைந்த கிராமப்புற வாழ்க்கையை இனிமையானது என்று வெகு எளிதில் சொல்லி விடலாம். இது உண்மையாக இருந்தாலும், கிராமப்புற வாழ்க்கை என்பதும் பிரச்சனைகளோடுதான் இருக்கிறது.
சராசரியாக கிராமப்புறத்தில் வயது மூத்தவர்கள்தான் வாழ்கிறார்கள் என்ற நிலையில், அங்கு மக்களுக்கு வயதாகும் போது, தனித்து வாழ்வது என்பது ஒரு பிரச்சனையாகலாம்.
வயதான, உடல் நலம் குன்றியவர்களுக்கு, மருத்துவ வசதிகள் குறைந்த மற்றும் சரியான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், கிராமப்புறங்களில் வாழ்வது பெரிய சவால் தான்.
வேலைக்குச் செல்லும் இள வயதினர், வீட்டில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய இடம் உள்ளது என்ற எதிர்ப்பார்ப்புகளால் கவரப்பட்டு, கிராமப்புற வாழ்வைத் தேர்ந்தெடுத்தால், பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
அவர்கள், வெளியில் போக வேண்டும் என்பதற்காக, காரில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியில் செல்ல காரில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக அதிக அளவில் காற்றை மாசுபடுத்துகின்றனர். அவர்கள் மிகக் குறைந்த உடற்பயிற்சி தான் செய்கிறார்கள்.
தனிப்பட்ட தேர்வு
கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்கள் வேலைக்கு செல்வது மற்றும் கடைகளுக்கு செல்வது போன்ற விஷயங்களுக்காக, அதிகமாக நடக்கின்றனர். ஆனால் இதனால் அவர்கள் உடல் நலத்துக்கு பெரிய பலன் ஏதும் கிடைத்த விடுவதில்லை என்பதை ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது என்கிறார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதார துறை பேராசிரியராக உள்ள ஆண்டி ஜோன்ஸ் .
''நகர்ப்புறங்களில் பல நடவடிக்கைகள், விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் வறுமையில் உள்ள மக்கள் பலரால் அவை எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடிவதில்லை. இறுதியாக, உங்களது வேலை, உங்களது நிதி ஆதாரம், சுகாதாரம், வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்களைக் கொண்டுதான் நீங்கள் எங்கு வாழவேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்ய முடியும்,'' என்கிறார் ஜோன்ஸ் . நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி ஆதாரம் இல்லாமல் வசித்தால் அது கிராமமாக இருந்தாலும் , நகரத்தின் மையமாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் வாழ வேண்டியிருக்கும் ‘’, என்கிறார் ஜோன்ஸ்.