கண்ணம்மா

கண்ணம்மா

காதல் வந்தென்று
காலை தென்றல் வந்து
காதில் சொன்னதடி
கண்ணம்மா

ஆவல் அப்பி கொண்டு
ஆசை நிரப்பி இங்கு
காண ஏங்கி நின்றேன்
கண்ணம்மா

பார்வை தீண்டுமென்று
திரு காட்சி வேண்டுமென்று
தேடி தவிக்கையிலே
கண்ணம்மா

உனக்கும் நேர்ந்ததென்று
உதட்டு பூட்டுடைத்து
புன்னகை உதிர்த்துவிடு
கண்ணம்மா

சாதி போர்த்தி கொண்டு
மதத்தை தூக்கி கொண்டு
மூடர்களாய் வாழுமுலகில்
கண்ணம்மா

சாதிக்கதான் மனிதமென்று
பகுத்தறிவு புகட்டும்படி
பத்து பிள்ளை ஈன்றெடுப்போம்
கண்ணம்மா

உன்னை போல் பேரழகு
உலகத்தில் இல்லையென
கர்வம் கொண்டவளே
கண்ணம்மா

உன் கர்வம் உடைத்தெரிந்து
அழகோடு தவழ்ந்தோடும்
உன் நகலை கருவினில்
சுமந்திடும் நேரமிது கண்ணம்மா

தாய் மொழியை கழுத்தருத்து
பிறமொழியை உயர்வெனவே
நினையும் கேடுகட்ட உலகினிலே
கண்ணம்மா

செந்தமிழில் நூல் புகுத்தி
கவிதையெனும் தறியேற்றி
உனக்காக கடிதம் நெய்தேன்
கண்ணம்மா

முகநூலில் மூழ்கியே
காலத்தை போக்கிடும்
நவீன கலியுகத்தில்
கண்ணம்மா

உலகம் தொலைந்ததென்று
மானுடமே வீழ்ந்ததென்று
ஆசை தீர பேசி தீர்ப்போம்
கண்ணம்மா

ஆண் பெண் உறவெல்லாம்
காம கழிவிற்கென்று
கருதுகின்ற உலகினிலே
கண்ணம்மா

ஆசை காமம் தீர்ந்த பின்பும்
அறுபது கடந்த பின்பும்
தினந்தோரும் முத்தமிடு
கண்ணம்மா

உடல் தேவை தீர்ந்ததென்று
விவாகரத்திற்கான வரிசையிலே
வெட்கமின்றி நிற்குமுலகில்
கண்ணம்மா

ஜென்மம் முடிந்த பின்பும்
நான் கடைசி மூச்சு விட
உன் மடியினில் வரம் தாடி
கண்ணம்மா

காதல் வந்தென்று
காலை தென்றல் வந்து
காதில் சொன்னதடி
கண்ணம்மா

எந்தன் நிழலெனவே
எப்பொழுதும் சேர்ந்திருக்க
காதல் பிச்சை கேட்கிறேனே
கண்ணம்மா

உணர்வும் பதிவும்
ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (18-Dec-17, 9:12 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : kannamma
பார்வை : 435

மேலே