மருத்துவத்தின் மகத்துவம்
மருத்துவத்தின் மகத்துவம் !
ஒரு மருத்துவனுக்கு ஒரு சந்தேகம் வந்தால் அவன் மருத்துவனாக தொடர்வது கடினம் ஆகிவிடும் அது என்னவென்றால் தான் செய்யும் மருத்துவம் உண்மையிலேயே தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பயன் அளிக்கிறதா என்கிற சந்தேகம் தான். அந்த சந்தேகம் எனக்கு ஓர் நாள் வந்தது. ஒரு நோயாளி வருகிறார் எனக்கு சுகர் பீபி பத்து வருஷமா இருக்கு அதுக்குரிய மாத்திரை மருந்து சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். சுகர் பீபி என்பது இரு வெவ்வேறு வியாதிகள் என்று புத்தகத்தில் படித்து மருத்துவன் ஆனவன் தான் என்றாலும் அவற்றை தனித்தனி வியாதியாக பார்க்க சொல்லி தான் பயிற்சி அளிக்கப்பட்டது என்றாலும் காலம் போக போக என் சிந்தனையில் மாற்றம் வந்தது. தினசரி வரும் நோயாளிகளில் நிறைய நாட்கள் தொடர்ந்து மாத்திரை மருந்து சாப்பிடுவோர் என்ன என்ன வியாதிகள் உடையவர்களாக இருக்கின்றனர் என்று நினைத்து பார்த்தேன்.
சுகர் ஏறியவர், பீபி ஏறியவர். தைராய்டு குறைந்தவர். கொலஸ்டிரால் ஏறியவர்.என்று பல நாட்கள் மாத்திரை சாப்பிடுவதாக வருவார்கள். ரத்தத்தில் சர்க்கரை அதிகம் ஆவது ஒரு தனி வியாதி என்றும் ரத்த நாளங்களில் உள்ள பீபி ஏறுவது தனி வியாதி என்றும் ரத்தத்தில் கொலஸ்டிரால் ஏறுவது தனி வியாதி என்றும் ரத்தத்தில் தைராய்டு குறைவது தனி வியாதி என்றும் இதற்கெல்லாம் முறையே சர்க்கரை மாத்திரை, பீபி மாத்திரை. கொலஸ்டிரால் மாத்திரை தைராய்டு மாத்திரை என்று தினமும் சாப்பிட சொல்ல வேண்டும் என்று எனக்கு நவீன ஆங்கில மருத்துவம் சொல்லி கொடுத்தது. மருத்துவம் சொல்லி கொடுத்தது போல நானும் செய்து கொண்டு இருந்தேன். இப்படியே எத்தனை நாள் தான் ஒருவர் சாப்பிடுவார் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
பிறகு ஒரு நாள் "மன அழுத்தம் நிர்வகிப்பது எப்படி?" என்று ஒரு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகுப்பில் நான் கூறிய விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தது.ஒரு மிருகம் இருக்கிறது, காட்டில் ஒரு ஆபத்து வரும் சமயம் அது ஓடவோ தாக்கவோ வேண்டிய சூழல் வரும் பொழுது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அட்ரீனலின் எனும் ஹார்மோன் சுரக்கும் அது பீபி அதிகப்படுத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட்டும் கொலஸ்டிரால் கூட்டும் ஏனெனில் ஓடுவதற்கோ தாக்குவதற்கோ தேவையான சக்தி வேண்டும். தசைகள் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். அதற்கு தசைகளுக்கு நிறைய ஆக்சிஜென் தேவை, மற்றும் சர்க்கரை தேவை. அட்ரீனலின் நிறைய சுரக்க கொலஸ்டிரால் தேவைப்படும். ஆகவே இத்தேவைகளை பூர்த்தி செய்ய இதயத்துடிப்பு அதிகப்படுத்தி ரத்த நாளங்களில் பீபி அதிகரிக்க செய்து, உடலில் சேமித்து வைத்த சர்க்கரை எல்லாம் உடைத்து ரத்தத்தில் கலக்கும் வேலையை இந்த அட்ரீனலின் ஹார்மோன் செய்யும். அட்ரீனலின் சுரக்க கொலஸ்டிரால் தேவை என்பதால் ரத்தத்தில் கொலஸ்டிராலும் அதிகரிக்கும். இவை எல்லாம் சரியாக நடந்தால் அந்த விளங்கால் நல்ல படியாக ஓடவோ அல்லது எதிரியை தாக்கவோ முடியும் அளவு வல்லமை பெறும்.(அந்த நேரத்தில் அந்த விலங்கின் சர்க்கரை அளவு, பீபி, கொலஸ்டிரால் சோதனை செய்தால் நோய் உள்ளது என்று எடுத்து கொள்ளமுடியுமா என்று சிந்திக்க வேண்டும்). இது ஒரு உயிர் காக்கும் உன்னதமான ஏற்பாடு.
மனிதனும் ஒரு விலங்கு தானே ... மனிதனுக்கும் ஆபத்துக்கள் வரும் அவனுக்கும் இந்த உன்னதமான ஏற்பாடு தேவைப்படும் தானே. இக்காலத்தில் மனிதனுக்கு நேரடியான ஆபத்துக்கள் குறைவு ஏனெனில் காட்டில் இருந்து விலகி நகர வாழ்க்கை வாழ்வதால். எனினும் ஆபத்து என்று அவன் மனத்தால் நினைத்தாலே போதும் அதே ஹார்மோன் மாற்றங்கள் அவனுக்கும் ஏற்படும். எ.கா.ஒருவரை ஒரு மனிதன் வெறுக்கிறான் என்றால் அவன் ஒன்று அவனை தாக்கவோ அல்லது அந்த இடத்தில் இருந்து ஓடவோ வேண்டும் (இயற்கையின் விதிப்படி). ஆனால் ஏதோ ஒரு கமிட்மென்ட் காரணமாக அவன் ஓடவோ தாக்கவோ முடியாத சூழ்நிலை. அவன் வெறுக்கும் காரணத்தால் அவன் உடல் அட்ரீனலின் சுரந்துவிட்டது அவன் தசைகள் ஓடவோ தாக்கவோ தயார் அதாவது பீபி அதிகம் ஆகி விட்டது, சுகர் எகிறிவிட்டது, கொலஸ்டிரால் ஏறி விட்டது ஆயினும் அவனால் ஓடவோ தாக்கவோ முடியவில்லை.மேலும் அந்த மனிதன் வெறுக்கும் செயல் வெறுக்கப்படும் நபர் நேரில் இருந்தாலும் செய்வான்இல்லையென்றாலும் மனதால் செய்வான். அந்த மனிதன் எப்போதெல்லாம் வெறுக்கிறானோ அப்போதெல்லாம் அந்த ஹார்மோன்கள் செயல்பட்டு மேலே சொன்ன வேதியல் மாற்றங்கள் உருவாக்கும். வெறுப்பு மட்டும் அல்ல பயம், பதட்டம், காமம், குரோதம், பொறாமை என்று எந்த உணர்ச்சிகளுக்கு வசப்பட்டாலும் அதே நிலை தான். தேவையான அளவு சாப்பிடாமல் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது என்பதும் பல வியாதிகளுக்கு அடிப்படை காரணம் ஆகும்.
ஒரு நோய் வந்தால் நோயின் மூலம் அறிந்து அதை மாற்றுவதுதான் சிறந்த மருத்துவம் ஆக முடியும். அதை விடுத்து வில் எய்தவனை விட்டுவிட்டு அம்பை உடைத்துக்கொண்டு இருப்பது அறிவான செயல் ஆகுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். அப்படி அம்பு உடைக்கும் மருத்துவம் செய்தால் வாழ்நாள் முழுதும் உடைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்படி செய்வதால் வியாபாரம் நன்றாக அமையும் எனினும் செய்வது மருத்துவம் அல்லவா? வியாபாரம் இல்லையே... தினமும் சுகர் மாத்திரை சாப்பிடுங்கள் பீபி மாத்திரை சாப்பிடுங்கள், கொலஸ்டிரால் மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறும் மருத்துவம் ஒரு நல்ல மருத்துவமாக முடியுமா? என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் என் மனதில் தோன்றி கொண்டே இருந்தது. ஒவ்வொரு நோயாளிக்கும் அந்த மாத்திரைகளை எழுதும் பொழுது குற்ற உணர்ச்சி யாக இருந்தது. எப்படி கொசுவை உற்பத்தியில் தடுக்காமல் உற்பத்தியானபின் தடுப்பது கடினமான செயல் மற்றும் பெரிய வியாபாரமா அதே போல மருத்துவம் ஆகி விட கூடாது என்பது தான் என் ஆதங்கம்.
சரியான வாழ்க்கை முறை, உணர்ச்சிகளுக்கு வசப்படாமல், மன அழுத்தத்தை சரியாக நிர்வகித்தல், தேவையான அளவு சாப்பிடுவது மற்றும் தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்தால் சுகர், பீபி, கொலஸ்டிரால் போன்ற நோய்கள் என்று சொல்லப்படும் இயல்பான வேதியல் மாற்றங்கள் (மனதில் வஞ்சம் இருந்தால் அது உடலில் தஞ்சம் புகுவது இயல்பே - நோயல்ல) வராமல் தடுக்கலாம். ஏற்கனவே வந்ததாக சொல்லப்படுபவரும் இவற்றை பின்பற்றினால் குணமாகலாம் அல்லது வேறு சித்தா ஆயுர்வேதா போன்ற மருத்துவ முறைகளில் பலன் பெற முயற்சிக்கலாம், அரசும் சித்த, ஆயுர்வேத முறைகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்ய ஊக்குவித்தால் மக்களுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும். அதை விடுத்து தினமும் கலர் கலராக மாத்திரை சாப்பிட்டால் சுகர் கண்ட்ரோல் வரும் பீபி கண்ட்ரோல் வரும் கொலஸ்டிரால் கண்ட்ரோல் வரும் ஆனால் அடிப்படை காரணம் மாறாது, நீங்கள் தீரும் வரை நோயும் தீராது.
நோயின் அடிப்படை கண்டறிந்து அதை மாற்றுவதன் மூலம் குணமாக்குவது தான் மருத்துவத்தின் மகத்துவம் ஆக இருக்க முடியுமே தவிர, வியாதிகளின் அறிகுறிகளுக்கு தினமும் மாத்திரை சாப்பிட சொல்வது மருத்துவத்தின் மகத்துவம் ஆகாது. மருத்துவம் திரும்பவும் அதன் மகத்துவத்தை திரும்ப பெறும் என்று நம்புவோம். வாழ்க நலமுடன்.
குறிப்பு: இது என் சொந்த கருத்து. முடிந்த அளவு எனக்கு தெரிந்த அளவு உண்மை கூறும் முயற்சி. உங்களுக்கு தெரிந்த நல்ல டாக்டர்ட கேட்டு தெளிவு பெறுங்கள். சுகர் ஏறியவர் மரபணு காரணமாக இருப்பின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டும் போதாது மற்றும் அவரவர் உடல்நிலை பொறுத்து மருத்துவம் மாறுபடும். எனவே தகுந்த மருத்துவ ஆலோசனை இன்றி இந்த கட்டுரையை மட்டும் பின்பற்றுவது ஆபத்தாகும்.