கோவையின் முக்கிய பண்பாட்டுத் திருவிழா
சீ. முத்துசாமி அவர்களின் ‘அகதிகள்’ குறுநாவல் வாசித்து இருந்தேன். பொதுவாக கதை சொல்பவர் வெளியே நின்று பாத்திரங்களின் அகமும் புறமும் சொல்லிக் கொண்டு இருப்பார் அல்லது பாத்திரங்களில் ஒன்று அல்லது சில தத்தமது அகத்தையும் மற்றவரது புறத்தையும் சொல்லிக்கொண்டு செல்வதாக இருக்கும். இப்புனைவு இன்னார் என்று கூறாமல் ஒவ்வொரு மனதிற்குள்ளும் புகுந்து செல்வது போல் இருந்தது. புறக்காட்சிகள் மட்டும் ஒரு பாத்திரத்தின் வழியாக காட்டப்பட்டு இருந்தது. இந்த முறை வித்தியாசமாக இருந்தது. காட்சிகளை நேரில் அந்த இடத்தில் நின்றே காண்பது போல் அமைக்கப்படும் முப்பரிமாண திரைப்படங்கள் நினைவுக்கு வந்தது. நான்கு பரிமாணம் இலக்கியத்திற்கு மட்டுமே சாத்தியம் என்று தோன்றியது. உள் நின்று மன ஓட்டங்களை, உணர்வுகளை, உருவிலியை திரைப்படம் காட்சிப்படுத்த முடியாது. ஒருவராக மட்டும் நின்று நோக்காமல் ஒருவர் பலராக நின்று நோக்குவது. ஒருவர் ஒருவராக மட்டும் நோக்குவது முப்பரிமாணம் என்றால் ஒருவர் இருவராக நோக்கினால் ஆறு பரிமாணம் சாத்தியம். ஓராயிரம் பேராக, அனைவருமாக, அனைத்து உயிருமாக, உள்ளும் புறமாக, ஒட்டுமொத்தமாக, எண்ணிலடங்கா பரிமாணங்கள். எல்லா நகர்வுகளுக்கும் ஈர்ப்பு விசையே காரணம் ஆவது போல் பல பரிமாணம் நாடி, பலராக வாழ முற்பட்டு எல்லோருமே, இலக்கியம் நாடாதவர்களும் கூட, சினிமா, தொலைக்காட்சி நாடகம் என்று அல்லது அதேதுவும் இல்லாவிட்டாலும் மற்றவரது வாழ்வை கேட்க, பேச, உலக நடப்புகளை அறிய விழைவு கொண்டவர்களாக உள்ளனர் என்று தோன்றுகிறது. தனக்கும் தன் மனம்-உடல் இவற்றுக்கும் ஓர் இடைவெளி நாடுபவர் மது அருந்த, இது தவறானது பள்ளத்தில் வீழ்ந்து அழிவீர் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதை இதுதான் என்று, கானல் நீர் நோக்கிச் செல்பவருக்கு நிஜ நீர் நிலையை, நேர் வழியை, யோகப்பயிற்சியை காட்டுவது போல், பலராக வாழ்வு அறிதலுக்கு, உணர்தலுக்கு இட்டுச்செல்லும் சரியான பாதை இலக்கியப்பறிச்சி என்று காட்டப்படுவதே முறை எண்ணுகிறேன். உடல், மூச்சுகாற்று, என்று உடலின் பௌதீக அடிப்படை கொண்டது யோகபறிச்சி என்றால் மனம், கற்பனை என்ற அடிப்படையில் இயங்குகிறது இலக்கியம். தீவிர இலக்கியம் எல்லோருக்குமானதல்ல. யோகமெல்லாம் வேண்டாம் எங்களுக்கு சரக்கடிப்பதே போதும் என்பவர்கள் போல தீவிர இலக்கியமெல்லாம் வேண்டாம் எங்களுக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டும் போதும் என்றால் இது அவர்களுக்கானது அல்ல. இலக்கியம் மதமல்ல, ஆனால் நிச்யமாக மாற்று ஆன்மிகம்தான். அதனால்தான் அழிவற்று இருக்கிறது. தொடர் இயக்கமாக இருக்கிறது. மதங்கள் மரணம் அடையாமல் இருப்பது அவை இலக்கியம் என்ற ஆன்மீகம் வழங்கும் உயிரோட்டத்தைப் பெற்றுகொண்டே இருக்கும் வரைதான். இலக்கியத்துடன் துண்டித்துக்கொள்ளும் மதங்கள் காலாவதி ஆகி அழிகின்றன. சில புற உண்மைகளைக் கண்டறிந்து, தொடர்ந்து தேடிச் சென்றுகொண்டே இருக்கும் அறிவியல் போல சில அக உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை உள்ளடக்கி தொடர்ந்து தேடல் கொண்டு பயணிப்பது இலக்கியம். கண்டடையப்பட்ட உண்மை நிலைத்தது ஆகிறது, தேடல் தொடர் இயக்கமாகிறது.
தூயனின் ‘இன்னொருவன்’ ‘முகம்’ சுரேஷ் பிரதீப்பின் ‘நறுமணம்’ ‘உதிர்தல், அசோக்குமாரின் ‘கனவு’ விஷால் ராஜாவின் ‘குளிர்’ என வாசித்து இருந்தேன். ஒளிர்நிழல் நண்பர்களிடம் கொடுத்து திரும்பவில்லை என்பதால் படிக்கவில்லை. அமர்வுகள் நன்றாக இருந்தன. தன் நேரடி அனுபவங்களை, புற சூழலை, சுயசரிதைத்தன்மையானவற்றை மட்டுமே எழுதுவதும் பொழுதுபோக்கிற்கானதை மட்டுமே எழுதுவதும் போதுமானது அல்ல நம் தனிப்பட்ட குறுகிய எல்லைகளுக்கு அப்பால் உள்ளவற்றையும் சென்று அடைவது, கற்பனையின் பிரமாண்டமான சாத்தியம், கற்பனைத் திறம் நிஜத்தைத் சென்று தொடும் அதிசயம் என விரிவடைவது கலை. கதை என்பது வெறும் பதிவு அல்ல அது நுண்ணுணர்வால் செயல் கொள்வது. தான் உணர்ந்தவற்றை, தன் அக அனுபவங்களை, தரிசனங்களை மற்றவர்களுக்கு வெறும் தகவலாக அல்லாமல் அவர்களது சொந்த அனுபவமாக மாறிவிடும் வகையில் கடத்தும் நுண்ணுணர்வுத் திறம் கலை. தூயனின் ‘முகம்’ கதை அவ்வாறு நெருங்கியது, சீனு அதைப்பற்றி எழுதி இருந்தார். சுரேஷ் பிரதீப்பின் பேச்சில் ‘போரும் அமைதியும்’ ‘வெண்முரசு’ என்று பேரிலக்கியங்களின் அருட்கொடை அவருக்கு இருப்பது தெரிந்தது. வாழ்ந்தவர் மட்டுமே வாழ்க்கையைச் சொல்ல முடியும், ஆழமான கலை வடிவமாக தர முடியும். எண்ணற்ற வாழ்க்கைகளை பேரிலக்கியக்கிய வாசிப்பில் வாழ்ந்து விட முடியும். நுண்ணுணர்வு இருந்தால் தடைகளோ எல்லைகளோ இல்லை. பெரும் உயரங்களை நம் இளம் எழுத்தாளர்கள் எட்ட முடியும். தேவை சோர்வறியா உழைப்பு. அதற்காகத்தானே இத்தனை தீவிரமும் விசையும் வேகமும் கொண்ட படையாழியைப் போன்று செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய தீவிரவாத வட்டம்? விஷால் ராஜா தன் பதில்களை தயக்கமற்று கூறினார். அசோக்குமாரிடம் ஒரு தயக்கம் இடையே தென்பட்டாலும் அதை கடந்து விட்டார்.
அபிலாஷ் மேடைகள் நன்கு பழகியவர். தனக்கும் தன் வாசகர்களுக்கும் பிடித்ததை எழுதுவது, தன் வாசகர்களுடனான உரையாடலின் வாயிலாக அவர்கள் ரசனை அறிந்து அதற்கேற்ப செல்வது போதுமானது என்பது அவர் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன். போகன் சங்கர் தன்னை, தன்னை சுற்றி இருப்பவற்றை எழுதுவதற்கு அப்பால் ஏதும் இல்லை என்று சொல்லி அடுத்தாக மேலிருக்கும் ஏதோ ஒன்று தகுந்த நரம்பு மண்டலம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்தம் சூழலை எழுதச் செய்கிறது என்று கூறியது ஒன்றிற்கொன்று முரண்பட்டது என்று தோன்றியது. ஏதோ ஒன்றுதான் அப்பால் இருந்து நரம்பு மண்டலம் தோதானவர்களை தேர்ந்து எடுக்கிறது எனக்கொண்டால் இங்கு மட்டும் சுற்றிலும் எல்லைகள் இவ்வளவு தான் என்று கருதிக்கொள்வது எப்படி சரியாகும்? நரம்பு மண்டலம் இங்கிருந்தும் வேறு இடங்களை சென்று தொட முடியுமே?. பெரும் சாத்தியங்கள் முன்முடிவுகளால் ஏன் நிற்க வேண்டும்?. வெயிலின் கவிதைகளில் அரசியல் குறித்து கேள்வி-பதில் சென்றது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ‘தீவிரவாதிகள்’ என்று யாரோ அவருக்கு சொல்லி இருக்கிறார்கள். கடலூர் சீனு தளபதி என்று சொல்லி விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சியளிக்கறது.
நவீன் மேலேசிய இலக்கியத்தின் தெளிவான ஒரு சித்திரத்தை அளித்தார். அவரது உறுதியான ஆளுமை அனைவரையும் கவர்ந்து. அவதானிப்பு, வாசிப்பு, களப்பணி என்று அவரது உழைப்பு போற்றுதலுக்கு உரியது. விஜயலட்சுமி அவர்களின் மலேசிய தமிழ் எழுதாளர்கள், கருத்து சுதந்திரத்தின் மீதான அரசின் ஒடுக்குமுறைகள் பற்றிய புள்ளி விவரங்களுடன் கூடிய கட்டுரை வாசித்திருந்தேன். அவரது உழைப்பும் துணிவும் போற்றுதலுக்கு உரியது.
பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடனான கேள்வி-பதில், குறிப்பாக தங்கள் கேள்விகள், அவரது படைப்பின் மீதான தங்களது அவதானிப்புகள், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தொகுத்து எடுத்துக்கொண்டேன். ஜெனிஸ் பரியத் அவர்களின் ஆங்கிலம் கேட்பதற்கு நன்றாக இருந்தது. மேகாலயா மக்களின் தூய்மை, தாய்வழி சமூக அமைப்பு, கசி, காரோ, ஜெயின்டியா என்று அதன் பழங்குடிகள், அவர்களது மொழி. நதிகளை, மரங்களை நேசிக்கும் பண்பாடு (நதியில் இருந்து எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி எடுத்தால் அதற்கு ஈடு செய்ய வேண்டும். மரங்களை வெட்ட அவற்றிடம் வேண்டி வணங்கி கோரல்), நம்பிக்கைகள், அவற்றுடன் கத்தோலிக்க மதம் கலந்து அமைந்து கொண்ட விதம் எல்லாம் கேள்வி-பதில்களில் வெளிப்பட்டன.
ராஜகோபாலன் அவர்களின் உரை நன்றாக இருந்தது. விழா நாயகர் சீ. முத்துசாமி அவர்களுடனான உரையாடல் அவரது யதார்த்தமான பதில்களால், உண்மையால் அழகு பெற்றிருந்தது. அவர் குறித்த நவீனின் ஆவணப்படம் மிக நன்றாக இருந்தது. சீ. முத்துசாமி அவர்களின் ஏற்புரை நெகிழ்ச்சியானது.
அன்பு மிகுந்த தேவதேவன், நாஞ்சில் நாடன், பாவண்ணன், வண்ணதாசன் உள்ளிட்ட பெரும் இலக்கிய கலைஞர்களை கண்டது மனநிறைவு தந்தது.
வினாடி-வினாவில் நான் கலந்து கொள்ளவில்லை. பின்னால் ஆடியன்ஸ் என்பாருள் அமைந்து கொண்டேன். ஒரே ஒரு கேள்வி கூட எந்த குழுவுக்கும் தெரியாதது என்றாகி ஆடியன்ஸ் பக்கம் வரவே இல்லை. விஷ்ணுபுர இலக்கிய வட்ட வாசகர்கள் உண்மையிலேயே வாசகர்கள் என்பதற்கு இது சான்று.
நல்ல புத்தகங்கள் (உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் உட்பட) விற்பனைக்கு வைக்கப்பட்டது மிகவும் பயனுடையது. சில நூல்கள் வாங்கினேன். தாமரைக்கண்ணன் சிலவற்றை தேர்வு செய்து கொடுத்தார்.
இவ்விழாவின் கச்சிதமாக அமைந்த தன்மை, ஒருங்கிணைப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் அய்யம் இல்லை. செந்தில் அவர்கள் திறம். மீனாம்பிகாவின் ஈடுபாடு. மிகச்சிறு குறைகளும் முற்றும் களையப்பட்டு அடுத்தமுறை மேலும் துல்லியம் கொள்ளும்.
. “சம்பவாமி யுகே யுகே” (சம்பவன் நற்பணி அடுத்தடுத்த பல ஆண்டுகள் தொடரட்டும்). விஜய சூரியன் அவர்களுக்கு நன்றி.
இலக்கிய ஆர்வம் கொண்ட எவருக்கும், குறிப்பாக இளையவர்களுக்கு, விஷ்ணுபுரம் விருது விழா மிகவும் பயன்மிக்கது, முக்கியத்துவம் வாய்ந்தது. கோவையின் முக்கிய பண்பாட்டுத் திருவிழா என எதிர்காலத்தில் மேலும் உயர்ந்து நிற்கப்போவது. இலக்கிய நேசமுடைய அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.
அன்புடன்
விக்ரம்
கோவை