தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி1

" கலீல் இங்கு வந்த போது அணிந்திருந்த உடை எங்கே இருக்கிறது அப்பா? ", என்று அமான் பஞ்சாபியில் அஹ்மத்திடம் கேட்க,
உள்ளே சென்று வந்த அஹ்மத், அந்த உடையைக் கொடுத்தார்.

அந்த ஆடையில் என்ன இருக்கிறது? என்று தேடிப்பார்த்த அமான் அதில் மூவர் புகைப்படம் இருப்பதைக் கண்டார்.
வேறு எதுவும் இல்லை.

" கலீல் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டுகள் இருக்கின்றனவா அப்பா? ", என்று பாஞ்சாபியில் கேட்டிட, அந்தத் துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து அமானிடம் காட்டினார் அஹ்மத்.

அவற்றை உற்று நோக்கிய அமான், " இவ்வகை துப்பாக்கிக் குண்டுகள் பாக்கிஸ்தான் இராணுவத்திலேயே பயன்படுத்தவில்லையே. ", என்று பஞ்சாபியில் அமான் சொல்ல,
" என்ன சொல்கிறாய்? வேறு யாரால் இவனைக் காயப்படுத்தக் கூடும்? ", என்றார் அஹ்மத் பஞ்சாபியில்.

" அதான்பா, எனக்கு தெரியவில்லை. கலீலுக்கு அவனுடைய பழைய ஞாபகம் திரும்ப வந்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியும். ", என்று அமான் பஞ்சாபியில் கூறிட, " இப்போது என்ன செய்வது? ", என்றார் அஹ்மத் பஞ்சாபியில்.

" அவனுக்குப் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்த முயற்சிக்கலாம். ",என்ற அமான், மேலும் இந்த போட்டோவில் இருப்பவர்கள் அவன் குடும்பத்தாராகத் தான் இருக்க வேண்டும். ",என்றார் பஞ்சாபியில்.

கலீல் தன் கால் தெறிவந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக ஊன்றுகோல் துணையின்றி நடமாட ஆரம்பித்தான்.

பஞ்சாபியும் அதீஃபாவின் உதவியுடன் கற்றுவந்தான்.

அமானின் மகன் அன்வர் மற்றும் அமானின் மகள் அமீனா இருவருக்கும் கலீலை மிகவும் பிடிக்கும்.
கலீலில் அவ்விரு குழந்தைகளிடமும் மிக அன்பாக பழகினான்.

கலீல் குழந்தைகளுடன் விளையாடுவதும், பழகுவதும் பற்றி அவ்வப்போது அமானிடம் அவர் மனைவி ஆயிஷா தெரிவிப்பார்.
அமானும் சந்தோஷப்படுவார்.

ஒருநாள் கலீல் அதீஃபாவைக் காண அவளுடைய வீடு சென்றான்.
அங்கு அதீஃபா இல்லை.
அவரது பாட்டி ஆதிலா மட்டும் இருந்தார்.
கலீலை அன்பாக வரவேற்று அருந்த தேனீர் கொடுத்தார்.

அப்போது, வீட்டில் மட்டப்பட்டு இருந்த ஒரு இராணுவ அதிகாரியின் படத்தைக் கண்ட கலீல், " இது யார் பாட்டி? ",என்று பஞ்சாபியில் கேட்க, " அது என் மகன், அதீஃபாவின் தந்தை அப்துல்லா. பாக்கிஸ்தானிய இராணுவத்தில் மேஜராக பணியாற்றினான்.
ஒரு போரில் இறந்துவிட்டான். அவன் பக்கத்தில் அவனுடைய மனைவி பாத்திமா. மிகவும் அன்பானவள்.
என் மகன் இறந்த கொஞ்ச நாட்களிலேயே அவளும் இறந்துவிட்டாள்.
அப்போது அதீஃபாவிற்கு பத்து வயதிருக்கும்.
அப்பா, அம்மாவை நினைத்து மிகவும் அழுவாள்.
பின்னர் விபரம் தெரிந்தபிறகு தான் அவள் அழுவதில்லை. ",என்றார் பஞ்சாபியில்.

அதைக் கேட்ட கலீல் மனம் இளகியது.

" சென்று வருகிறேன் பாட்டி. ", என்று விடைப்பெற்றுக் கொண்ட கலீல் வைத்தியர் அஹ்மத் இல்லம் வந்து உணவருந்திவிட்டு தன் படுக்கைக்குச் சென்றான்.

அன்றிரவு அவன் கனவில் பழைய ஞாபகங்கள் வந்து போக, விழித்தெழுந்த கலீலுக்குக் குழப்பமாக இருந்தது.

சிறிது நேரம் யோசித்தான்.
கனவு காட்சிகள் எதுவும் புரிபடவில்லை.
பிறகு, படுத்து உறங்க முயற்சித்தான்.
தூக்கமும் வரவில்லை.
மணியை நோக்கினான்.
அதிகாலை மூன்று மணியாகி இருந்தது.

குளிரில் கம்பளியாடையை போத்திக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து அமர்ந்தான்.
கனவுக் காட்சிகள் கண்கள் முன்னே வந்து வந்து போயின.

சிறிது அயர்வாக உணர அருகில் இருந்த பாறையில் சாய்ந்தவன் தூங்கிப் போனான்.

பொழுது புலர்ந்தது.
படுக்கையில் கலீலைக் காணாத குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்ல, அவர் அமானிடம் கூறினார்.
அமான் கலீலைத் தேடி ஆற்றங்கரைக்கு வர, அங்கே கலீல் பாறையில் கண்ணயர்ந்து இருந்தான்.

அவனை எழுப்பிய அமானின், " இந்தக் குளிரில் இங்கே தூங்கிவிட்டாயா சகோதரா? ", என்று கேட்டிட, இரவு கனவில் கண்டதைக் கலீல் அமானிடம் கூறினான்.

அதைக் கேட்ட அமானிற்கு, கலீலுக்கு நினைவு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறது என்பது புரிந்தது.

" சரி. உன்னை குழந்தைகள் தேடுகிறார்கள். வா, சாப்பிடப் போகலாம். ", என்று அழைத்தார் பஞ்சாபியில்.

கலீலும் அமானுடன் சாப்பிடச் சென்றான்.
சாப்பிடும் போது தனக்கொரு வேலை பார்த்துத் தருமாறு அமானிடம் கேட்டான்.

அவரும் சரியென்று தன் தோட்டத்திலேயே வேலை பார்க்குமாறு கூறினார்.
நன்றி கூறிய கலீல் உண்டு விட்டு தோட்டத்திற்கு சென்றான்.

இப்படியே இரு தினங்கள் நகர, கலீலைக் காணாத அதீஃபா அவனைத் தேடிவந்தாள்.

ஆயிஷா அம்மாவிடம் கலீலைப் பற்றிக் கேட்க, " அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார். ", என்றிட அதீஃபா அங்கு செல்லக் கிளம்பினாள்.

அப்போது வந்த அமான் கலீலில் உடையில் இருந்த போட்டோவை அதீஃபாவிடம் கொடுத்து, தக்க சூழலில் அவனிடம் அதைக் காட்டிக் கேட்கச் சொன்னார்.
அதீஃபாவும் சரியென்றாள்.

தோட்டத்திற்கு வந்த அதீஃபா, " என்ன சார்? அதிசயமாக வேலைக்கெல்லாம் வந்திருக்கீங்க! ", என்று சற்று கிண்டலாகக் கேட்க, " சும்மா தான் மேடம்! கால் சரியாகிவிட்டது. உழைத்து உண்டால் தான் உடலில் சேரும்.
அதோடு வேலை பார்த்தால் தான் உடல் உறுதியாக இருக்கும். ",என்று பஞ்சாபியில் பதிலளித்தான், தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய, வாய்க்கால் திருத்திக் கொண்டே.

" அட! என்னவொரு தத்துவம்! இதயத்தைத் தொட்டுட்டிங்க, போங்க.", என்று சிரித்துக் கொண்டே அதீஃபா சொல்ல, கேட்ட கலீல் புன்னகைத்தான்.

சிறிது நேர மௌனம்.

பிறகு, அதீஃபா, " நான் உங்களிடம் ஒரு புகைப்படம் காட்ட வந்தேன். ",என்றிட, " என்ன புகைப்படம் அது? ", என்று கலீல் பஞ்சாபியில் கேட்டான்.

" நீங்க இங்க வந்த போது அணிந்திருந்த உங்க உடையில் இருந்த புகைபடம்! ", என்று புகைப்படத்தை நீட்டினாள் அதீஃபா.

புகைப்படத்தை உற்றுப் பார்த்தான் கலீல்.

" அவர்கள் யாரென்று தெரிகிறதா? ", என்று அதீஃபா கேட்டாள்.

போட்டோவைத் தடவிய கலீலுக்கு, ஒரு நிமிடம் மனத்திரையில், தன்னை அண்ணாவென்று அழைத்த தங்கையும்,
மகனே என்று அன்புருக வளர்த்த அப்பாவும் தோன்றிட, " இது என் அப்பா, அம்மா. பக்கத்திருப்பது என் தங்கை.", என்றிட, " அவர்கள் பெயர்களென்ன? ", என்று கேட்டாள் அதீஃபா.
பலத்த யோசனைக்குப் பின் ஞாபகமில்லை என்றான் கலீல்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Dec-17, 10:10 pm)
பார்வை : 168

மேலே