புறப்பாட்டு
அது ஜனவரி மாத மூடுபனி, வானுந்து வாகனத்திலே வானூடாய் கொரிய தேசத்திற்கு சென்று கொண்டிருந்த நேரம். திருமறைக்காட்டில் எங்கோ ஒரு கோடியிலிருந்து ஒருவனாய், பல்லாயிரம் மைல் தொலைவிலிருக்கும் கொரிய தேசத்திற்கு புறப்படலானேன். திருச்சி வானுந்து நிலையம் அது, மலேசியாவின் ‘ஏர் ஆசியா’ நிறுவனம், என்னைப்போன்ற நடுத்தர பொருளாதாரர்களுக்காகவே பிரத்தியேயமாக மிகக்குறைந்த விலையில் வானுந்துகளை திருச்சியிலிருந்து, மலேசியா வழியாக கொரியாவின் பூசான் நகருக்கு இயக்குவதை அறியாத நான், வேறு வழியே இல்லையென இலங்கை ஊடாய், சீனாவின் ஷாங்காய் சென்று பின் அங்கிருந்து பூசான் செல்ல திட்டமிட்டுவிட்டேன், பயணச்சீட்டையும் விலை கொடுத்து வாங்கிவிட்டேன். அவ்விலையில் என் தன்மானமும் அடங்கியிருந்தது என்றே நினைக்கிறேன், இலங்கை வழி அவ்விலக்கை அடைய முற்பட்டதால்.
ஒருவழியாய் இலங்கை சென்றடைந்தேன். இலட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தத்தால் அம்மணற்பரப்பே அலங்கரிக்கப்பட்டதாகவே என் மனம் எண்ணியது. அப்படிப்பட்ட ஒன்றும் இங்கே நிகந்துவிடவில்லை என்று இவ்வுலகம் நினைப்பதுபோலவே அமைதியாய் இன்முகத்துடன் வீற்றிருதார் கௌதமர். ஆனால் அக்கௌதமரின் முன்னே எழுதியிருந்தது ஒரு சொற்றொடர் ‘கௌதமரின் முன்னே உன் பின்னை காண்பித்து புகைப்படம் எடுக்காதே’ என்றொரு பொருளில் இருந்தது. முதல் மொழியாய் சிங்களம், இரண்டாவதாய் ஆங்கிலம், கடைசியாய் வேண்டாவெறுப்பாய் தமிழ் இடம்பெற்றிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையை தாங்கி கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் தமிழ்மொழி, குவேனியால் இடம்கொடுக்கப்பட்ட சிங்களவனின் காலில் விழும் சிலபல தமிழர்களால், தலைகுனிந்தே நின்றது.
எப்படியோ ஒருவழியாய் இலங்கையிலிருந்து புறப்பட்டு ஷாங்காய்க்கு வந்தடைந்தேன். இரவு 2 மணி இருக்கும், கடும் குளிர். நம்மூர் மார்கழி மாத குளிருக்கு மட்டுமே பழக்கப்பட்டு போன என் மேற்தோல், இது ஏதோ புதுவகை கால நிலையென நிலைகுலைந்து போனது. வெறும் மரக்கறியை மட்டுமே கண்டிருந்த என் உடலின் அடிபோஸ் திசுக்கள், இக்குளிரை தாங்கும் கொழுப்பு என்னிடமில்லை என்பதாய் சிலிர்த்துக்கொண்டது. வெயிலில் வெந்து மடிந்த ரோமங்கள், இக்குளிரைக் குத்தி கிழிக்கிறேன் பார் என்றவாறு ஈட்டி போல் எழுந்து போர்செய்தும் பலனில்லை. மீயொலி அளவிற்கு இருந்தும், நடுக்கத்தில் பற்களை கடிக்கும் சப்தம் என் காதுகளையே சென்றடையவில்லை, அப்படி அடைபட்டிருந்தது என் காதுகள். காலை மணி 6 க்கு அடுத்த வானுந்து, ஆனால் அதற்குள் என் உயிர் பறந்துவிடுமோ என்றொரு பயமும் இருந்தது எனக்கு. பகைவனையும் அண்டக்கூடாது பசி என்றெண்ணும் தமிழ்குடியில் பிறந்த எனக்கு பசி பிடுங்கி எடுக்கிறது. தேவையான கொழுப்பு கையிருப்பு இல்லை என்பதால் மிகவும் செறிவுமிக்க வயிற்று அமிலங்கள், குடல் உட்சுவர்களை முட்டி கரைத்துக்கொண்டிருக்கின்றன.
காலை 5 மணியிருக்கும், கடைகள் திறக்கப்பட்டது, முதல் ஆளாய் நான் நின்றேன் அக்கடையின் முன். விசித்திரமாய் பார்த்த அக்கடைக்காரருக்கு, நானும் மனிதன்தான் என்று சொல்ல எனக்கு சீன மொழி அறிந்திருக்கவில்லை. எனினும் இரு பிரட் துண்டுகளால் செய்யப்பட்ட பர்க்கரை வாங்கினேன், என் வாய் சுவைக்கும் முன் அக்குளிர் வேளையிலும் என் உமிழ் நீர் விழுந்தது அப்பிரட் துண்டுகளின் மீது. ஒரு பருக்கை வைக்காது உண்ட பின்தான் அறிந்தேன் அந்த பிரட்டின் நடுவே ஊண் கறி இருந்ததை. இருந்தால் என்ன, புலி பசித்தால் புல்லும் திண்ணும், ஆறாம் அறிவிருந்தால். நான் தான் ஆறறிவு புலியாயிற்றே. அப்படி இப்படி என்று உயிர் பெற்று வானுந்தை அடைந்து காலை கொரிய தேசத்திற்கு சென்றடைந்தேன். பிற்பாடு ஊர் சுற்ற கிளம்பும்பொழுதெல்லாம், தேவையானவற்றை எடுத்து வைத்தே கிளம்புவது வழக்கமாயிற்று. எது இருக்கிறதோ இல்லையோ, இரண்டு ரொட்டி பைகளும், செல்லும் ஊரின் காலநிலை பற்றிய புரிதலுடன் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளல் மிகமுக்கியம்.