காஷ்மீரில் ஒரு நாள்

காலையில் தான் முதல் பனிமழை பெய்திருந்தது. ஒரு வருடத்திற்கு முன், போருக்குச் சென்ற தந்தை எப்போது வருவாரென தன் தாயிடம் நச்சரித்துக் கொண்டிருந்தாள் ஷாகிதா. எப்போதும் சொல்லும் அதே பதிலான "இன்று நிச்சயம் வருவாரென எதிர்பார்க்கலாம் ஷாகி.. இப்போது உனது ரொட்டியையும் பாலையும் சாப்பிடு" என கெஞ்சியபடி விழ இருந்தக் கண்ணீரை ஷாகிதாவுக்கு தெரியாமல் துடைத்துக்கொண்டாள் தாய் மும்தாஜ். "அப்போ வரும் போது நான் கேட்ட பொம்மையையும் வாங்கி வருவாருல்ல" எனக் கேட்ட ஷாகிதாவுக்கு மெல்லிய சோகப் புன்னைகையை மட்டுமே பரிசாகக் கொடுக்க முடிந்தது மும்தாஜுக்கு..

அவளது இதயம் எரிவதைப் போலவே, வீட்டை குளிரிலிருந்து காப்பாற்றிய தணலும் எரிந்து கொண்டிருந்தது. சட்டென குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. "ஹையா.. அப்பா வந்துட்டார்", என கத்திக்கொண்டே ஓடினாள் ஷாகிதா. ஆனால் அவரது குதிரையின் காலடிச் சத்தம் மும்தாஜுக்கு நன்றாகத் தெரியும்.

வெளியே ஓடிய ஷாகிதாவுக்கு அப்பாவின் நண்பரே தென்ப‌ட்டார். தான் மறைத்து வைத்திருந்த, ஷாகிதாவின் தந்தை அவளுக்கு கொடுத்தனுப்பிய பொம்மையை எடுத்துக் கொடுத்தார். அப்பாவை எதிர்பார்த்து சிரித்துக் கொண்டே வந்தவள், "அப்பா வரல மாமா", எனக் கேட்டவாரே, அந்த பொம்மையை வாங்காமல் வீட்டுக்குள் திரும்பிச் சென்றாள்.

வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவள் தந்தையின் கண்ணீர், மெல்லிய பனியாக அந்த வீட்டின் மீது விழுந்து கொண்டிருந்தது.

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 3:48 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 105

மேலே