அப்பத்தா

அப்பத்தா

டெல்லி மத்திய அலுவலகம், தன் தந்தை அனுபிய மின்னஞ்சலை பார்த்துக் கொண்டிருந்தான் பாலு என்கிற பாலசுரமணியன். தன் தந்தை எழுதிய எழுத்து நடை அழகான ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால், தகவல் தன் மனதை பாதிக்க கூடியதாக இருந்தது. மனம் நிலை கொள்ளாமல் தவித்த்து. அவரை பெற்றவளை நல்ல வசதியான காப்பகத்தில் சேர்த்திருப்பதாக பெருமையுடன் எழுதியிருந்தார். அப்பா உங்களுக்கு தெரியுமா? நான் உங்களிடம் வளர்ந்ததை விட அப்பாருவிடமும், அப்பத்தாவிடமும் தான் வளர்ந்தேன். அவர்களின் அரவணைப்பும், ஆசியும், நான் பத்தாவது படிக்கும் வரை கிடைத்து கொண்டே இருந்தது .என்னுடைய முரட்டுத்தனத்துக்கு தன் முரட்டுத்தனத்தால் பதில் சொல்வாள் அப்பத்தா.. அவ்வப்போது எனக்கும் அப்பத்தாளுக்கும் நடக்கும் சண்டையை “அப்பாரு” மூக்கையா தன் மீசையை முறுக்கி விட்டு இரசிக்கும்.
அப்பாரும் அப்பத்தாவும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், ஒரு விதத்தில் உறவு முறை கூட, இரண்டு பேர் குடும்பமும் சந்தையிலிருந்து ஆடு வாங்கி வந்து வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் “கறிக்கடை” போடுவது. அப்பத்தா அவங்கப்பாவிற்கு ஒரே பெண்ணாகையால் கல்யாணத்துக்கு முன்னால் இருந்து அவங்கப்பாவுடன் சந்தைக்கு சென்று “வகை” பார்த்து வாங்கி வந்து, அவர் வெட்டி தர ஒற்றையாளாக தோலை உறிக்க கூடியவள். நல்ல பலசாலி, அவளுக்கு கல்யாணம் ஆகுமுன் அவள் அப்பாவுக்கு எல்லாமுமாய் இருந்தாள்.அப்பா அவளை ஒரு ஆண் பிள்ளை போல் வளர்த்திருந்தார். அப்பத்தாவை அப்பாரு கல்யாணம் பண்ணியவுடன் அப்பத்தாவின் அப்பா, அப்பத்தா இல்லாததால் தொழிலையே விட்டு விட்டு மாப்பிள்ளையின் தொழிலுக்கு உதவியாக வந்து விட்டார்.
அப்பத்தா தன் தந்தைக்கு பின் கணவனுடன் தனியாக தொழில் ஆரம்பித்து விட்டாள். சந்தைக்கு செல்வது முதல் “கறிக்கடை” போடுவது, வியாபாரம் செய்வது வரை தன் கணவனுக்கு சரி சமமாக உதவி செய்தாள். பெரிய வருமானத்தை அவர்கள் சம்பாதிக்காவிட்டாலும், அவர்களுக்கு பிறந்த ஒரே பையனான அப்பா படிப்பில் படு சுட்டியாக வளர்ந்தார். அவருடைய ஆரம்ப பள்ளி ஆசிரியரே அவனது அறிவாற்றலை பற்றி அப்பாருவிடம் பெருமையாக சொல்வார். “மூக்கையா” உன் பையன் பெரிய ஆளா வருவான். நீ எப்படியாவது அவனை கண்டிப்பாக படிக்க வச்சிரு என்பார். அப்பாரு பெருமையுடன் மீசையை முறுக்கி சிரிப்பார்.
அப்பாருவின் குடும்பமும், அப்பத்தாவின் குடும்பமும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்தனர். இவர்கள் இருவரும் எந்த துன்பம் வந்தபோதிலும் தன் பையனின் படிப்பை எக் காரணத்தை கொண்டும் நிறுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போல் அப்பாவும் பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்தார். அதன் பின் அவர் அரசாங்கம் தந்த கல்வி உதவியால் அவருடைய பெயருக்கு பின்னால் பல பட்டங்கள் வந்து சேர்ந்து அவரை அரசாங்கத்தில் “பெரிய அதிகாரி” என்ற பதவிக்கு உரியவரானார். அப்போதும் அப்பாருவும், அப்பத்தாவும் தன் மகனின் உயர்வு கண்டு சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தனரே தவிர அவர்களால் மகனின் சமூக கால கூட்டத்துக்குள்ளும், பெரிய பெரிய விழாக்கள்,பாராட்டுக்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளவில்லை. காரணம் கூச்சமாகவும் இருக்கலாம். அல்லது அப்பாவும் அவர்களை இந்த உலகத்துக்கு காட்ட விருப்பமில்லாமல் இருக்கலாம். ஏனெனில் அப்பா ஊர் ஊராய் நாடு, நாடாய் அலுவலக விசயமாய் சுற்றுபவராக இருந்தார். அப்பாவின் திருமணம் கூட அவருடய இலாகவின் அமைச்சராக இருந்தவரின் உறவினர் மகளையே மணமுடித்தார். திருமணத்தின் போது கூட அமைச்சரின் ஆரவாரமே அதிகமாக இருந்ததே தவிர அப்பாரும், அப்பத்தாவும் ஒரு அறைக்குள்ளேயே இருந்தனர். இதற்கும் அவர்களின் கூச்சமே காரணமாக இருக்கலாம். அப்பவும் வருபவர்களை வரவேற்பதிலும் அவர்களை கவனிப்பதிலுமே கவனம் இருந்ததே தவிர பெற்றோரின் கூச்சத்தை போக்கி அவர்களை வெளிச்சத்துக்கு காட்ட முடியவில்லை.
திருமணம் முடிந்த உடனேயே அப்பாரும், அப்பத்தாவும் தன் கிராமம் சென்று விட்டனர். அத்ன் பின்னர் ஐந்து வருடங்கள் தன் தொழிலை தொடர்ந்து செய்தனர். ஒரு நாள் அங்கு வந்த அப்பா “அம்மா” என் பையன் உங்க கிட்ட இருக்கட்டும், உன் மருமகளுக்கு கல்கத்தாவுக்கு ட்ரன்ஸ்பர் ஆகி விட்டது. நானும் மாற்றல் வாங்கி செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் இருவருமே இருந்து தன் கிராமத்து வீட்டை தன் மகன் இருப்பதற்காக வேண்டிய வசதிகள் செய்து ஊரிலிருந்து பதினைந்து மைல் தள்ளி இருந்த நல்ல ஆங்கில கல்வி பள்ளியில் சேர்த்தார். தினமும் பள்ளி செல்ல ஒரு கார் வசதியும் செய்து கொடுத்து விட்டு அப்பாவும் அம்மாவும் கிளம்பி சென்றனர்.
அதன் பின்னர் பாலுவின் வாழ்க்கை அப்பாருவுடனும், அப்பத்தாவுடனும் சந்தோசமாக கழிந்தது. அப்பத்தா முரட்டு ஆளாக இருந்தாலும் தன் பேரன் மீது அலாதியான அன்பாய் இருந்தாள் அப்பத்தாவுக்கு கடலை மிட்டாய் என்றால் உயிர், அவன் தினமும் அப்பத்தாவின் கடலை மிட்டாயை பிடுங்கி சாப்பிட அப்பத்தா அவனுடன் சண்டை போடுவாள். அப்பாரு வழ்க்கம்போல் தன் மீசையை முறுக்கி சிரிப்பார். பள்ளி விடுமுறை நாட்களில் தாத்தாவும் பேரனும் கிராமத்துக்குள் சுற்றி சுற்றி வருவார்கள். கிராமத்து பையன்களுடன் இவன் விளையாட சென்றாலும் அவர்கள் இவன் வசதியை பார்த்து மிரண்டு போய் ஒதுங்கி கொள்வார்கள். இதை விட இவர்களின் உறவினர்கள் கூட அப்பாருவின் வீட்டை பார்த்து கூச்சப்பட்டு ஒதுங்குவார்கள்.
அப்பத்தாவுக்கு இதில் வருத்தம், என்றாலும் தானே வலியப்போய் உறவினர்களின் எல்லா விசேசங்களிலும் கலந்து கொள்வாள். அப்பாருவையும், இவனையும் கலந்து கொள்ள வைப்பாள். அவர்கள் மூவருக்கும் வருடங்கள் மகிழ்ச்சியாக ஓடியது.. தந்தையைப்போலவே அவனும் நல்ல மதிப்பெண்ணுடன் பள்ளி இறுதியில் தேறினான். அத்துடன் அவனது கிராம வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பின் அப்பா அம்மா வந்து அவனை சென்னையிலேயே ஒரு உறைவிட பள்ளியில் சேர்த்தனர். அவனுடைய கிராம வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு பின் தந்தையை போலவே மத்திய அரசாங்கத்திலேயே நல்ல பதவிக்கும் வந்து விட்டான்.அப்பாரு இறந்து விட்டார் என்பதை அவன் அப்பா தெரிவித்தும் அவனால் செல்ல முடியாத சூழ்நிலையில் சிக்கியிருந்தான்.
பெருமூச்சுடன் பாலு தன் பழைய நினைவுகளில் இருந்து மீண்டான். தன் “மேலாளரை” காண உள் அறைக்கு சென்றான்.
அன்னை இல்லம் அன்று பரபரப்புடன் காணப்பட்டது. அன்று உதவி கலெக்டர் அன்னை இல்லத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் அதன் நிர்வாகி ஒரு வித எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். உதவி கலெக்டர் அலுவலகம் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து உதவி கலெக்டர் இறங்கி வந்து நிர்வாகியிடம் கை குலுக்கி என் பெயர் பால சுப்ரமனியன், நான் உதவி கலெக்டராக உள்ளேன். இங்கே எனது பாட்டி “செல்லாயம்மள்” தங்கி உள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றார்.
நிர்வாகி ஒரு நிமிடம் யோசித்து ஓ செல்லாயி பாட்டியா வாங்க கூட்டிட்டு போறேன் என்று அழைத்து சென்றார். ஒரு கட்டிலின் ஓரத்தில் பாலுவின் அப்பத்தா உட்கார்ந்திருந்தார். அவருடைய முரட்டு உடல் காணாமல் போயிருந்தது. உடல் சுருங்கியிருந்தது, முகத்தில் வரி வரியாய் கோடுகள் அவள் அனுபவத்தை பறை சாற்றியன. பார்வை நேர் கோட்டில் இருந்தது.
நிர்வாகி அவர் அருகில் வந்து பாட்டி இவர் யாரென்று தெரிகிறதா? கூறிக்கொண்டே பாலுவை நோக்கி கையை காட்டினார். பாட்டி கண்ணை சுருக்கி பாலுவை பார்த்துக்கொண்டே இருந்தார். நிர்வாகி சூழ்நிலையை உணர்ந்து வெளியேறினார்.
பாலு தன் அப்பத்தாவை அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பின் சூட்டில் அப்பத்தாவின் கண்ணில் நீர்த்துளிகள் பாலுவின் கையில் உருண்டு விழுந்தன. அப்பத்தா தன்னை தெரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்த பாலு தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து பிரித்து அப்பத்தாவின் கையில் அழுத்தினான். அப்பத்தா கையை விரித்து பார்த்தவள் முகம் பிரகாசமானது. “கடலை மிட்டாய்” தன் பொக்கை வாயை திறந்து வாய் விட்டு சிரித்தாள். அவனுடைய பழைய அப்பத்தாவை பார்க்க முடிந்தது. இந்த கடலை மிட்டாய்க்காகத்தான் பாட்டிக்கும் பேரனுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும். தாத்தனுக்கு அது ஒரு வேடிக்கையாக இருக்கும்.
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த பாலு நிர்வாகியின் அருகில் வந்து ஐயா எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். நான் என் அப்பத்தாவிற்காகத்தான் டெல்லியிலிருந்து மாற்றல் வாங்கி இங்கு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு இடத்தில் பணி இருக்காது. அலைந்து கொண்டிருப்பேன். என் அப்பத்தாவை நான் தினமும் வேலைக்கு செல்லும்போதும், வேலையை விட்டு வரும்போதும் பார்த்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். என் அப்பத்தா இருக்கும் வரை நான் தமிழ்நாட்டுக்குள்தான் இருப்பேன். எங்கே இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக பார்க்க வந்து விடுவேன். அதர்ற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். கண் கலங்க வேண்டினான். நிர்வாகி அவனுடைய ஏக்கத்தை புரிந்து கொண்டு தாரளமாக வாருங்கள், ஆனல் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு விண்ணப்பத்தை இப்பொழுதே எழுதி கொடுத்துவிடுங்கள்.
இப்பொழுதே கொடுக்கிறேன் என்று பாலு நிவாகியுடன் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தான்..

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Dec-17, 11:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 223

மேலே