சிவா மனசுல யாருமில்ல

சிவா..ஒரு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனது அப்பா ஒரு சிறு கம்பெனியில் பியூனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் குடிப்பழக்கமும் கூடவே குடித்தனம் பண்ணியது. எப்பப் பார்த்தாலும் யாரிடமாவது அதற்காகவே கடன் வாங்குவது அவருக்கு பொழுதுபோக்கு. அவனது அம்மா தான், பல வீடுகளில் பத்துபாத்திரம் தேய்த்து அவனது படிப்புச் செலவை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை.. அவன் கல்லூரியில் இருந்தான். அவன் அப்பா முன்னமே வீட்டிற்கு வந்திருந்தார். அவனது அம்மாவும் வீட்டில் இல்லை.. அப்போது கதவு தட்டப்பட்டது..

கதவைத் திறந்து பார்த்தார். வெளியே ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

"அங்கிள்.. சிவா இல்ல.."

"இல்லமா.. அவன் காலேஜுல இருந்து இன்னும் வரலையே.. ",

"ஓகே.. அங்கிள்.. வந்தா சக்தி வந்தேனு சொல்லுங்க", என்று சொல்லியவாறே கிளம்பி விட்டாள்.

ஒரு ஐந்து நிமிடம் கழிந்திருக்கும்.. மீண்டும் கதவு தட்டப்பட்டது. இப்போதும் ஒரு இளம்பெண் சிவாவைத் தேடி.. பெயர் கவிதா எனக் கூறிச் சென்றாள்..

சிறிது நேரத்திலேயே சிவாவின் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்.. சிவாவின் அப்பா புலம்ப ஆரம்பித்தார்..

"அவன காலேஜுக்கு ஒழுங்கா படிடானு அனுப்பினா.. ரெண்டு பொண்ணுங்க வந்து அவன் எங்கேனு கேட்டுட்டுப் போகுதுங்க... அவன் வந்தானா என்ன விஷயமுன்னு கேளு.. எனக்கென்னவோ நடக்கறது எதுவும் நல்லதாவே படல..", என்று பேசிக்கொண்டிருக்கும் போதே.. மீண்டும் கதவு தட்டப்பட்டது.

இப்போதும் ஒரு இளம்பெண்..

"அங்கிள்.. சிவாவ பார்க்கணும்", எனச் சொல்ல... அதிர்ச்சியுடன் இருவரும் அவளை உள்ளே கூப்பிட்டு அமரச் செய்தனர்.

"என்னமா நடக்குது.. என்ன ஒவ்வொருத்தரா மூணு பேரு அவனத் தேடி வீட்டுக்கு வந்திட்டீங்க.. எதுக்காக சிவாவத் தேடறீங்க..?

"அவன் காலேஜ் பூரா எல்லார்கிட்டையும்.. நூறு இரு நூறுன்னு கடன் வாங்கி வச்சிருக்கான்.. இன்னைக்கு காலைல திருப்பிக் கேட்டா.. சாயந்தரம் வீட்டுக்கு வாங்க.. தரேன்னு சொன்னான்.. வீட்ல இல்லையா.. சரி விடுங்க.. வந்தா மகி வந்தேனு சொல்லுங்க", என்றவாறே வேகமாக கிளம்பினாள்...

"இங்க பாருங்க.. உங்கள மாதிரியே அவனும் மாறிட்டான் போல.. என்னங்க இது பழக்கம்..? வரவுக்கு மீறி கடன் வாங்கறது"

"அவன் இப்படி ஆவான்னு நான் நினைக்கலையே.. நல்ல பையன்னு தானே இவ்வளவு நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். சே.. என்னால தானே அவன் இப்படி.. சரி.. இன்னேலயிருந்து நான் யாருக்கிட்டையும் கடன் வாங்க மாட்டேன்... ஒழுங்கா வேலைக்குப் போயி வாங்கின கடனையெல்லாம் அடச்சிடுறேன்.. குடிக்கறதால தானே கடன் வாங்கறேன்... அதையும் கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திக்க முயற்சி பண்றேன்.. சரியா..?"

"நீங்க சொன்னீங்க பாருங்க.. அதுவே போதும்", என்றவாறு ஆனந்தக் கண்ணீர் விட்டாள் சிவாவின் அம்மா..

மறுநாள் காலை சிவாவுடன் சக்தி, கவிதா, மகி ஆகியோர் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்... அவர்களது திட்டம் பலித்ததற்கு.. திட்டம் போட்டுத் தந்த சிவாவின் அம்மா.. அவர்களுடன் சிரிப்பில் கலந்து கொண்டாள்.

(முற்றும்)

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 4:34 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 162

மேலே