பெண்களின் இதயத்தை வெல்லும் நகைச்சுவை மருந்து உளவியல் ஆய்வாளர்கள் தகவல்
தேன் சொட்டும் ஆசை வார்த்தைகளை மறந்து விடுங்கள்! ஒரு பெண்ணை எப்படி சிரிக்க வைக்கலாம் என்பதை சிந்தித்தால் அந்தப் பெண் உங்கள் வசம். இதனைக் கூறுவது அமெரிக்க உளவியல் நிபுணர்கள்.
இது ஏதோ சாதாரண ஆய்வல்ல, Evolutionary Psychology (பரிணாம உளவியல்) என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகும் அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை நடத்தியவர்கள் கான்சாஸ் பல்கலைக் கழகத்தின் தகவல் தொடர்பு புலப்படுத்த ஆய்வுத் துறையினர் (Communication Studies) ஆவர்.
இது ஒருவேளை அமெரிக்க பெண்களின் உளவியலாக இருக்கலாம் என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் அளித்த பதில், “அனைத்து பெண்களுக்கும் காதல் உணர்வு பொதுதானே, அதற்கான மரபான தூண்டுகோல்கள் தவிர தற்போது தன்னை அதிகம் சிரிக்க வைக்கும் ஆணை ஒரு பெண் விரும்புவது என்ற வகையும் சேர்ந்துள்ளது” என்றார்கள்.
தெரிந்த ஆண்/பெண் சந்திப்பில் நடக்கும் ஈர்ப்பு மட்டுமல்ல நகைச்சுவை என்பது, முற்றிலும் அன்னியமான ஆணும் பெண்ணும் திடீரென சந்தித்து பேசிக்கொள்ளும் போது ஒரு ஆண் எவ்வளவு முறை தனது நகைச்சுவையினால் அந்தப் பெண்ணை சிரிக்க வைக்கிறாரோ அந்தப் பெண் ‘டேட்டிங்’ ஆர்வத்தை வெளிப்படுத்தி விடுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆண் அடிக்கும் ஜோக்குகளுக்கு பெண் சிரிக்கும் தருணத்தில் லவ் ‘கிளிக்’ ஆவதை விட, இருவரும் சேர்ந்து சிரிக்கும் ஜோடியினரிடத்தில் காதல் சுலபமாக ஆட்கொள்கிறது என்கின்றனர்.
நகைச்சுவை என்பது புத்திசாலித்தனத்தின் அடையாளம் என்றே பலரும் கூறுவதை நாம் அறிந்திருப்போம், ஆனால் அது காதல் ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பது இந்த ஆய்வாளர்களின் துணிபு.
“தன்னுடன் சேர்ந்து சிரித்து மகிழும் ஒருவரைச் சந்திப்பது என்பது எதிர்கால உறவுகள் உற்சாகம் ததும்பவும், மகிழ்வுடனும் அமையும் என்பதாக உணரப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.
ஆணின் நகைச்சுவை பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிய ஒருவரையொருவர் முன் பின் அறியாத 51 கல்லூரி ஆண்/பெண் ஜோடிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டனர்.
ஜோடிகள் தனியாக ஒரு அறையில் 10 நிமிடங்கள் பேசிய பிறகு சர்வேக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வைக்கப்பட்டனர். இந்த ஆய்வில் ஏதோ ஒரு பாலினம் நகைச்சுவையை பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கருதவில்லை. ஆனாலும், ஆண் ஒருவர் அதிக முறை நகைச்சுவை உணர்வுடன் பேசும் போது, இதனால் அதிக முறை ஒரு பெண் சிரிக்கும் போதும் அந்தப் பெண் காதல் உணர்வு வயப்படுவதாக தெரிய வந்தது. ஆனால் பெண் நகைச்சுவையாக பேசுவதன் மூலம் ஆண்களை பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்பதும் இதில் தெரிய வந்துள்ளது.
இருவரும் சேர்ந்து சிரித்து மகிழும் போது ஒருவர் மீது ஒருவருக்கு ஆர்வம் ஏற்படுவதும் தெரிய வந்தது. அதாவது ஆண்களுக்கு பெண்களைக் கவர்ந்திழுக்க நகைச்சுவை ஒரு கூர்மையான உத்தியாக இருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், பகிர்ந்து கொள்ளப்பட்டு இருவரும் சேர்ந்து சிரித்து மகிழும் நகைச்சுவை உணர்வே உறவுகளை வலுப்படுத்த சிறந்ததாக இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
பிடிஐ
வாஷிங்டன்