சுட்ட பழம்

சுட்ட பழம்
உலகில் முன்னிருட்டும் வேளை. என் நித்திரை தெளிந்து எழுந்தபோது இரண்டு மணிநேரம் நித்திரைமகளின் மடியில் அமிழ்ந்த உடல், புரிதலினுடன், தர்மயுத்தம் செய்துகொண்டிருந்தது. கால்கள் இரண்டும் இறங்க வேண்டிய இடம் என அறிந்தும் சோம்பலுக்கு விலை போகித்தான் கிடந்தது. வேற்று வழிகள் இல்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். காலை எட்டிலிருந்து மாலை ஐந்து வரை உழைத்த கால்களுக்கு பயணத்தில் இந்த நிலை வந்திருப்பதில் ஐயம் ஏதும் இல்லையல்லவா!

வாஸ்து சாஸ்திர வல்லுனரான எங்கள் வாகன ஓட்டுநர் சிறிதும் பிழையின்றி கோடு போடுடிருந்தது போல் தினம் நிறுத்தும் அதே இடத்தில் வண்டியை நிறுத்தினார். தட்டுத்தடுமாறி கால்கள் அதுபோக்கில் போக அதை என் போக்கில் செலுத்துவதற்கு சிறிது நாழிகை தேவைப்பட்டது. ஒரு வழியாக மூன்று படிகளுக்கு இரண்டு பாதங்களையும் ஒப்புவத்து தட்டுத்தடுமாறி மூன்றாம் படி முடியும் வேளையில் ஒரு குதிகுதித்து இறங்கிவிட்டேன்.அதற்கு அறிகுறியாக எங்கோ சுவாச குழாயின் குபேர மூலையில் ஒளிந்திருந்ததோ ஒரு நெடுமூச்சு தன்னிச்சையாக அடித்து பிடித்து வெளியேறியது. மங்கிய வெயிலானது அன்றேனோ, கோபித்துச் சென்ற மனையாளை அழைத்து வரச் செல்லும் ஆண்பிள்ளை போல் தயங்கித் தடுமாறி செல்ல மனமின்றி சென்று கொண்டிருந்தது. (முன் அனுபவம் இல்லாததால் எடுத்துக்காட்டு உவமை பொருத்தமில்லாமல் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்).

இவ்விடம், சூரியநகரம் (சன்சிட்டி), அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதி, இரைச்சலுக்கு சற்றே பெயர் போனது. இறங்கிய கால்கள் சோம்பலை ஓரளவிற்கு விடுத்திருந்த போதிலும் சாலை கடக்க விடாமல் ஓய்வு கொடுப்பதற்காகவே ஓயாமல் வந்து கொண்டிருந்தது வாகன ஊர்திகள். என் தாயகத்தில் சொகுசுக்கு நான்கு சக்கரம் எனில், இங்கு அது அடிப்படை அத்தியாவசியங்களில் ஒன்றெனவே தெரிகிறது. தரைவழி மார்க்கத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியினால்தான் என் பயண நேரமும் அதிகரித்துள்ளது என்பதை ஊகத்தின் வழியே அறிந்து கொண்டிருந்தால் நீங்கள் அறிவாளிகள். குறுக்குப் பாதையில் நடைவழியாய் பயணித்தோமானால் இன்னும் அரை மணித்துளிகள் சேர்த்து பிடிக்கும் அவ்வளவுதான்.

முட்டியடித்து, ஒரு அதிக வேக சிறு ஓட்டமும் கைகொடுக்க சாலையை கடந்தாகிவிட்டது. ஏற்கனவே கணத்து தழுதழுத்த என் மூளை ஒரே ஒரு யோசனையை மட்டும் கோரிக்கையாக வைத்தது. சென்றவுடன் முகம் நனைத்துவிட்டு "தொபுக்க்டின்னு" கட்டிலில் விழுவதுதான் அந்த யோசனை.கால்கள் மூளையின் யோசனையை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றியது. அதன் வேகமும் அதிகரித்தது. இந்த வேகம் கடைசி வரை தொடருமானால் ஐந்து நிமிடத்துளிகளில் இலக்கடையலாம் என்றான் கணிதமேதை மூளை.

இவ்வாறே எண்ணம் ஒருபுறம் இருக்க, வேலையில்லாமல் வந்து கொண்டிருந்த செவி,என் மூளைக்கு செய்தி ஒன்றை அனுப்பிக் கொண்டிருந்தது. என்னை யாரோ அழைப்பதாய் நிமித்தப்படுத்தியது. இரண்டாம் முறை அவ்வாறே கூறியபோது தான் செவியை நம்புகின்றவன் போல மெல்லமே திரும்பி பார்த்தேன். தினம் என்னுடன் கதைத்துக் கொண்டு வரும் தோழமைகள் சற்றே பின்தங்கியிருந்தார்கள். என் கால்கள் மூளையே ஏறிட்ட வண்ணம் நோக்க நான் சுதாரித்து நிற்கலாகினேன். ஓரிரு நாழிகை யில் என்னை அடைந்த அக்கூட்டம் "களைப்பு" எனும் பொருளை மையமாக வைத்து பேசிக்கொண்டு வருவதாகத் தோன்றியதும் என் வறண்ட இதழ்கள் சிறிது புன்னகைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

பசி, இந்த ஒரு உருவமில்லா வார்த்தைக்காக உயிர்ஜீவிகள் போராடிக் கொண்டிருந்த வேளையிலே, என் தோழமையும் அதே வார்த்தையை உபயோகப்படுத்தினார். சற்றும் யோசியாமல் அக்கூட்டம் ஒரு பானிபூரி கடையை நோக்கி படையெடுத்தது. காரணமும் இல்லாமல் இல்லை. தோழமைகள் அனைவரும் தேனிலும் இனிதான தென்னிந்தயப் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அரிசியும் அதன் துணைகளாக பலவும் கண்ட இந்த அரை நூற்றாண்டின் தலைமுறைக்கு இந்த மத்திய இந்தியாவினுடைய உணவு வகையில் ஒவ்வாமை இருப்பது இயல்புதானே! இந்த வழியில் கால் நூற்றாண்டின் முன் பிறந்த எனக்கு மட்டும் எவ்விதம் விதிவிலக்காகும். அதிலும் குறை சொல்லிக்கொண்டு வேண்டியதை சூசகமாக உண்டு வந்த என் போன்ற சோம்பல்பிள்ளைக்கு கேட்கவா வேண்டும். காரணம் இதனாலோ என்னவோ ருசி என்னும் என் பெரிய சொத்தை பத்திரமாக வீட்டிலேயே விடுத்து வருகிறேன். ருசி மனையாள் இன்றி பசிக்கணவன் எவ்வாறு முழுமை காண முடியாதோ (அனுபவம் இங்கேயும் இல்லாததால்......) அப்படித்தான் எங்கள் பசியும்.

பானிபூரி கடையை நெருங்கிவிட்டோம். மோகனம் என் தேசத்தில் சேலைகளையும், தாவணிகளையும் சுற்றி கொண்டு வருவதாய் இத்தனை காலமும் புலப்பட்டது. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் இப்படித்தான் செல்லப்பேராண்டி என்று ஏளனமாய் யாரோ சிரிப்பது போன்று கேட்டது. முதிய பிராந்தியத்து குரல்கள். அநேகமாக என் முப்பாட்டனும், கொள்ளுப்பாட்டியும் உலக்கில் பாக்கை கொட்டும் வேளை என்று ஊகத்தில் கண்டு கொண்டே ன். சேலையும், தாவணியும், கண்டால் வியக்கும் இந்த மோகனங்களை கண்டறியாமல் நிற்கும் பரிதாப நிலையை எண்ணுவதற்கும் பொருள் உள்ளது. செய்து வைத்த சிலைகள், எதிர் கண்ட பெண்கள். இதை இப்படியே எழுதினால் என்குல பெண்களை வர்ணித்த இவ்வுள்ளம் மிஞ்சி விடுமோ, என்னை நோக்கி அழகாய் சீவிவைத்த வெளக்கமாறுகள் வருமோ என்ற அச்சத்தினால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கண்பார்வை வர்ணித்தலின் பக்கத்து வீடாக இருக்க வேண்டும். அதையும் வலு கொண்டு இழுத்து பானி பூரி மேலே செலுத்த வேண்டியதாயிற்று. பசிக்கணவன் அதற்கு உதவிபுரிந்தான். வேண்டியதை கேட்க வேண்டும். ஆனால், நான் நாணம் கொண்டவன்போல் தயங்கி நின்றதன் பொருள் மொழியின் வடிவத்தில் இருந்தது. திறு திறு என்று விழித்து கொண்டிருக்கும் வேளையில் சரளமாய் மொழித்தெரிந்தவர் எனக்கும் சேர்த்து முறையிட்டார். கண்முன்னே கண்ட ஐந்து சாடிகளிலும் இருப்பதென்ன என்பதை ஆவலின்பெயரில் அறிந்துகொள்ள விரும்பினேன். சீரகம், புளி, மிளகு, பூண்டு, இன்னொன்று ஞாபகம் தொலைத்து விட்டது. என் புத்தி அப்போதுதான் நான் அன்று காலை வைத்த ரசமதை ஞாபகத்திற்குக்கொண்டு வந்தது. என்னுடைய கேள்வி இந்த நடையில்தான் இருந்தது "இது எல்லாத்தையும் போட்டு வச்சாதான அது நம்ம ஊரு ரசம்" என்று பதிலுக்கு காத்திராமல் வாய்திறந்து சிரிப்பில் அமிழ்ந்தது. காரணம், என் மூதாதையர் அறிவாளிகள்தான் என்பதற்கு ஆதாரம் கண்ட கர்வமாய்கூட இருக்கலாம். இச்சமயம் "கேட்டீங்கள்ள" என்ற தோரணையான குரல் முன்பிருந்த இடத்திலேயே வந்தது. அநேகமாக முப்பாட்டன் தான் சிக்கியிருப்பார் என்பது ஊகம். கையில் தொண்ணைகள் தந்த போது சிரிப்பு நின்றுவிட்டது.

இன்னொரு அழகிய நிமிடத்தை அப்பொழுதுதான் காண நேர்ந்தது. எனக்கு தொண்ணை கொடுத்த கைகள் பிஞ்சு பிராயம் படைத்த ஒரு சிறுவனுடையது என்பதை காணலாகினேன். மிச்சம் தொற்றிக்கொண்டிருந்த புன்னகையும் கொள்ளைப்புறம் வழியாக யாரோ துரத்துவது போலத்தான் இருந்தது. உயரம் அதிகரிக்க அவனுக்கு முக்காலி துணை நின்றது. ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு கரண்டி (சற்று வளைத்து, நெலித்து பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் இருந்தது). ரசம் எடுத்து பூரியில் ஊற்ற தகுந்தவாறு அதன் அடிப்பகுதியில் துளை ஒன்று இடப்பட்டிருந்தது. "புவி ஈர்ப்பு விசை" இக்குழந்தை கற்றுக்கொள்ளுமா என என் மூளையின் ஐயத்தை நான் கண்டுகொள்ளாமலில்லை. மொத்தம் ஏழு பேர், இரு சிலைகளையும் சேர்த்து, தொண்ணைகளுடன் காத்துக்கொண்டிருந்தோம்.

அகன்ற வாய் கொண்ட பாத்திரத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மசியலில் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருந்தார் அச்சிறுவர். உருளைக்கிழங்கு, என் சிறு வயதிலிருந்தே இரண்டு ரூபாய் கூறு அல்லது ஐந்து ரூபாய் கூறு என கொஞ்சமாக நேசிக்கப்பட்ட காய்களுள் ஒன்று. இங்கு உணவியலில், உருளைக்கிழங்கு அன்றாட பதவி வகித்து வந்தது. உருளை மலைகளை இங்கு அதிகமாகவே நீங்கள் வந்தீர்களானால் பார்க்க நேரிடும். கதைக்கு வருவோம். உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக வெங்காயம், கொத்தமல்லி பின் பெயர் தெரியாத மசாலா இடம்பெற நேர்ந்தது. பிஞ்சுக் கைகள் அதன் சக்தி முழுவதையும் உபயோகப்படுத்தி பிசைந்து. ஓரிரு நாழிகைகளின் முடிவில் எந்த பொருள் எங்கே என்று கண்டுபிடியுங்கள் என்ற தோரணைக்கேற்ப நன்றாக பிசைந்துவிட்டு கைகளை சுத்தம் செய்துகொண்டார் அச்சிறுவர்.

முதல் நின்றவர் தொண்ணையை நீட்டுமாறு அச்சிறுவரிடம் இருந்து சமிக்ஞை வந்தது. அதற்கு அக்கையும் இசைந்தது. மனித கூட்டத்தின் நாகரீக மாற்றத்தில் பிறர் சொல்லாமலே நாமாக நம்மை ஒழுங்குபடுத்தும் முறையில் வரிசையில் கடைபிடித்தலும் ஒன்று. இப்போது அந்த வரிசைதான்,இரண்டு சிலைகளையும் சேர்த்து. மூன்றாம் நபர் முக்கியமானவர். அது நான்தான். பெருவிரல் அக்குட்டிப் பூரியை துளையிடும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாயிரம் ஆயுதங்களை கொண்டு போர் செய்து சுதந்ததிரமாக்கினாலும் அந்நேரம் அப்பெருவிரல் ஆயுதம் சற்றே முக்கியம் வாய்ந்ததாகவே தோன்றியது. காரணம் பசிக்கணவன். அச்சிறுவர் இதற்குள் மூன்றாம் முறைக்கு வந்துவிட்டார். ஆனால் என் எண்ணங்கள் சிறிதும் அறிந்திராத அச்சிறுவரது வாழ்க்கைக்குள் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தது.
அச்சிறுவர், பத்து பிராயத்தை சமீபத்தில் தான் கடந்திருப்பார். கலைந்த முடி, பால் போன்ற முகம்(உவமையில் சேர்த்து கொள்ள வேண்டாம்) , கசங்கின மேல்சட்டை அதன் துணைக்கு ஒரு கால்சட்டை என இந்திய துணைக்கண்டத்தின் நடுத்தர குழந்தைகளுக்கு உரிய அத்துனை சாராம்சமும் பொருந்தியிருந்தது. இரு புருவங்களும் நெறித்து கண்பார்வை விலகலின்றி தொழிலில் ஈடுபட்டிருந்தவர் குறைந்தது ஒரு வருட அனுபவமாவது பெற்றிருக்க கூடும் என்பது போல் விவாதத்திற்கு மனது ஆயத்தமாகியிருந்தது. ஆனால் சிரிப்பு அவரிடம் இருந்ததா என்பதை நான் உற்றுநோக்கியும் கவனித்தறிய முடியவில்லை. இரவுச் சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்கானது போல, இச்சிறுவர்க்கும் ஒரு இனிப்பு கடையின் முன் தன் வண்டியை நிறுத்திக் கொள்ள இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

சூரிய நகரம், ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பொட்டல் காடுகளாய் கிடந்த புறநகர்ப்பகுதி. இன்றைய தினம் அதுவும் ஒரு நகரம்தான் என்று சொல்லப்படும் அளவிற்கு பொறியியல் அழகாக செதுக்கியிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் குறைந்தது பத்து தடுப்புகள், ஒவ்வொரு தடுப்பிலும் ஏறக்குறைய இருபது வீடுகள், இரண்டு படுக்கை அறை மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்புகள் எண்ணிக்கையில் அதிகம். இது போல ஏறக்குறைய பத்து அடுக்குமாடி குடியிருப்புகள் அப்பகுதியை சூழ்ந்திருந்ததன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் குடியிருப்புகளின் எண்ணிக்கையை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். இது தவிர விற்பனைக் கூடங்களும் எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தன. அதுவும் இன்றைய பன்னாட்டு வியாபார உலகத்தில் அவைகளின் வளர்ச்சி சற்று மிதமிஞ்சியே காணப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு இனிப்பு பலகாரக் கடையின் முன்புதான் அச்சிறுவர் க்கும் இடம் கிடைத்திருந்தது.ஒரு நான்கு சக்கர தள்ளுவண்டி அதனுள் கொஞ்சம் குட்டிப்பூரிகள், பூரணத்திற்கு உபயோகப்படும் பொருள்கள், குப்பைத்தொட்டி மற்றும் தொண்ணைகள் அததற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது . பச்சி, போண்டா, வடை என் தென்னழகி மக்களின் கூட்டத்தைக் கூட்டுமெனில், இவ்விடம் இந்த பானிபூரி யின் அடிமையாகவே(சிலர் அன்புக்கு அடிமை என்று சொல்லுதல் போல்) இருந்தது. மாலை வேளை பசியதனை போக்கும் ஒரு அன்னக்கூடமாகவே விளங்கியது. ஆகையினாலேதான் இந்த அன்னக்கூடங்களில் மாலைச் சூரியன் மறையும் வேளைக்கெல்லாம் கூட்டம் வரத் தொடங்குகிறது. குறைந்தபட்சம் நானறிந்த வரை மூவராவது கூடுவது வழக்கம். அப்படியானால் அந்த பிஞ்சுக்கைகள், இரவு பத்து மணியை நெருங்கிப்பிடிக்கும் வரையிலோ அல்லது குட்டிப்பூரிகள், பூரணமோ குறைந்தபட்சம் தொண்ணையோ தீரும் வரை உழைத்தாக வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

பொருளாதாரம் வளர்ந்த மக்கள் சூழல் இவ்விடம். ஏறக்குறைய என வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஏழையும், நடுத்தரமும் இவர்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்களையும் இதில் குறிப்பிடுவதில் கடமைப்பட்டிருக்கிறேன். சிறார்களும், காளையர்களும், கன்னியர்களும், பெரியவர்களும் அந்த பொருளாதார சூழலை சுட்டிக்காட்டுவது போலவே நடந்துகொண்டார்கள். ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒருபயனும் இல்லை என்பதை அறிந்திருந்தே அன்று அதில் இறங்கியிருந்தேன். அச்சிறுவரோடு என் சிறு பிராயத்தின் நிகழ்வுகள் தான் அந்த ஒப்பிட்டுப் பார்த்தல். மாலை மங்கும் நேரம் அதாவது மணி ஆறு என்பது, ஏதேனும் மண் குவியலிலோ அல்லது வீட்டுத் திண்ணைகளிலோ, மற்றவரைத் தோற்கடிப்பதற்காகவோ அல்லது நான் சூராதிசூரன் என்று காட்டுவதற்காகவோ பற்பல பொய்காலும், வித்தைகளையும் விளையாட்டுகளிலும் செலுத்திக்கொண்டிருந்த காலம். படிப்பு, அதனால் விளையும் உழக்கு, இன்றேதும் இல்லியே என்பது போன்ற பொய்களை, பொய்யே பேசத் தெரியாது என்பதன் பாவனையில் பேசக் கற்றுக் கொண்டிருந்த காலம்.வீட்டில் பெரியவர்களிடம், சில நாட்கள் கொடுத்த வேலையை செய்யாததற்கும், சில நாட்கள் சரியாய் செய்யாததற்கும், சில நாட்களில் எதற்கென்றே தெரியாமலும் அடி, உதை என வாங்கிக் கொண்டிருந்த காலம். அநேகமாக அடி வாங்காத நாட்கள் இல்லை என்பது கணிதமேதையின் கணக்கு. இத்தனைக்கும் தெம்பு தருவது போல பிடித்த உணவை சண்டையிட்டு வாங்கி உண்டு, வீட்டுப்பாடத்தின் வழியாக நித்திராதேவி மடிதேடின காலம் அது.

நடுத்தரம் என்பது இருவருக்கும் ஒற்றுமையாய் விளங்குமா? யோசிக்க முற்படப்போவதில்லை.. ஆனால் ஒப்பிடுகையில் சற்று தொண்டை வறண்டு விடுவதாகத்தான் தோன்றுகிறது. பல இல்லையெனினும் அந்த மூன்று மணித்துளிக்குள் என்னிடம் சொல்வதற்கும், அதை நினைந்து தனிப்புன்னகை புரிவதற்கும் சில மாயை கல்வெட்டுகள் இருக்கின்றன. இப்படி சொல்வதற்கும் நினைப்பதற்கும் அவரிடமும் சில நிகழ்வுகள் இருக்க வேண்டுமென்பது நினைவெனினும் உறுதியாய் சொல்வதற்கில்லை. "வறுமை", இதற்கு பல அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறிய வண்ணம் இருக்க, இது போன்ற நிகழ்வுகள் அதையெல்லாம் புலப்படுத்துகின்றன. இதிலும் இச்சிறுவரை வைத்தா அச்சொல்லை அன்று எனக்குப் புலப்படுத்த வேண்டும்? இவ்வாறு சுற்றம் சில கேள்வி துளிகளாக மாறிக்கொண்டிருந்தது.

நான் அனுபவித்துதான் குழந்தைப் பருவம்?
இச்சிறுவரின் உழைப்பு தான் குழந்தைப் பருவமா?
பணம், இதன் மதிப்பு இவருக்கு தெரிந்திருக்குமா?
வீட்டின் பொருளாதாரம் எண்ணி உழைக்கிறாரா?

அப்படியென்றால் இவர்கள் நடுத்தரம் என்று தவறாக புரிந்து கொணுடிருப்பதாக மனது எச்சரித்தது.
கல்விக்காகவா? இந்த வினா கடைசியாக வர நோக்கம் அதன்மேல் இருந்த அவநம்பிக்கைதானோ தெரியாது.

இவ்வாறு பெருமூளையும், சிறுமூளையும் இணைந்து மனதிடம் இத்துனை கேள்விகளை அடுக்கியிருந்தன.

சிலைகளின் முன்னால் சற்றே தடுமாறி நின்றுகொண்டிருப்பினும், மனது அவைகளின் கேள்விகளில் ஒன்றிரண்டுக்கு விடை எடுத்தெரிய ஆயத்தமாக இருப்பது போலவே தோன்றியது. ஆனால், மற்றுமொரு கேள்வியை அந்நேரம் கேட்டுவிடும் என்பதை மனது எதிர்பார்க்கவில்லை. அக்கேள்வி,

இவர்களை கூலிக்கு வைத்து வைத்து வேலை வாங்குகிறார்களா?

இக்கேள்வியை மூளை கேட்டதற்கும் தகுந்த காரணம் உள்ளது. இவ்விடம் வந்த ஆரம்ப நாட்களில் இது போல செய்திகளை கேட்க நேர்ந்தது. ஆனால் செவி வழிச் செய்திதான், இருப்பினும் நம்புவதற்கு உரித்தாக இருந்ததாகவே எண்ணினேன். குழந்தைகளை கூட்டமாக சேர்த்து தன் வியாபார நோக்கத்திற்காக சில முதலாளி வர்க்கம் இதிலீடுபடுவார்கள் என முன்னமே கேள்விப்பட்டதுண்டு.மீண்டும் கணிதமேதை தன் பணியை தொடங்கியிருந்தான்.
இக்குழந்தைகள் நாளுக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள்?
எவ்வளவு இவர்களுக்கு கிடைக்கும்? கிடைக்குமா?

புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லாததால் மனது பதிலுக்கு முற்படவில்லை.
கடைசியாக உற்றுநோக்கலின் நிமித்தமாக ஒரு கேள்வி எழுந்தது.
இவர்கள் யார்?
மனதிடம் ஆயிரம் பதில்கள் இருந்தன. அவர்களாய் இருக்கலாம், இவர்களாய் இருக்கலாம் என்று, ஆனால் ஒன்றும் நிரூபிக்க முடியாத பதில்கள்.மீண்டும் கேள்வி எழலாம் என்பதை அறிந்து கொண்டது போல் பதிலை மனது மறைத்துக்கொண்டது. அவசியம் காரணமாக, இதை எனக்கு இச்செய்தி சொன்ன தோழமையிடம் கேட்டகளாயிற்று.
இவர்கள் யாராய் இருக்கக்கூடும்?
தெரியாது என்ற பதிலைக் தவிர வேறு வார்த்தைகள் வெளிவரவில்லை.

இவ்வித கேள்விகளுக்குப் பதில் காண்பதைக் காட்டிலும் ஒருநிலைப்படுத்தி பசியுடன் போராடுவதே மேல் எனத் தெரிந்தது. பத்து ரூபாய்க்கு ஐந்து குட்டிப்பூரிகள்,ஐந்து வகையான ரசமும் கிடைக்கும். வரி தொடர்பான அறிகுறிகள் தென்படவில்லை. எங்கள் நாட்டின் சில்லரை வணிகத்தின் பேரில் வரியை விதித்தாலும், அவ்வணிகம் வாடிக்கையாளனுக்கு அதை வடிகட்டியே தருவதற்கு உதாரணம் இது. நமக்கு தேவைப்பட்டால் ஐந்து பூரிக்கும் ஒரே வகையான ரசம் கூட பரிமாறப்படும். உணவுப் பழக்கத்திற்கு புதிது என்பதால் ஐந்து வகையான ரசத்தையும் ருசி பார்த்து முடித்திருந்தேன். சிலைகளும் அவ்வண்ணமே செய்திருந்தன.இந்திய உணவியலிலும், வியாபார சந்தைகளிலும் தொற்றிக் கொண்டு, காலங்காலமாக, கலாச்சாரமாக மாறிப் போன நிகழ்வுதான் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. முக்கியமாக பன்னாட்டு வியாபாரச் சந்தையினால் அழிக்க முடியாத கலாச்சாரம். வியாபாரிக்கும், நுகர்வோனுக்கும் உள்ள கலாச்சாரம். கிராமிலோ, ஒரு பழம், காய்களோ எப்படியிருப்பினும் அளவீடுகளில் கொடுக்கும் பணத்திற்கு அதிகமாக நுகர்வோன் பையில் பொருள் இருக்கும். சில்லரை வணிகத்தில் இது மேம்பட்டே காணப்படுவது நிதர்சனமான உண்மை.

அப்படித்தான் ஆறாவதாக ஒரு குட்டிப்பூரி முறை நோக்கி வந்து கொண்டிருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால், அக்குட்டிப்பூரி பசிக்கு இரையான பின்புதான் கலாச்சாரங்கள் யோசனைக்கு தட்டுப்பட்டது.

இச்சமயம்,பசிக்கணவன் முழுமை அடையவில்லை. ஆனாலும் திருப்தியடைந்திருந்தான். தோழமைகளுக்குள் ஒருவர், குறிப்பாக முதலில் நின்றவர், பணம் எடுத்துக் கொடுத்தார். அம்முகத்தில் சிரிப்பை எதிர்பார்த்திருந்தேன். சிறுவர் வெளிக்கொணரவில்லை. பணத்திற்காக சிரிப்பவர்களும், அதற்காக வளைந்து கொடுப்பவர்களும் இன்றைய தினங்களில் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் வியாபார சந்தைகளில் இடம்பெறும் சிரிப்புகளுக்குள் அவ்வாறு கிடையாது எனக் கருதுகிறேன். அதை வியாபார யுக்தியிலும் நான் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. அங்கு ஒரு அமைதி நிலவும் தன்னிச்சை இயல்பு என்பதை தவிர எனக்கு சரியாக சொல்லவும் தெரியவில்லை. ஆனால், இச்சிறுவரை, என்னால் இரண்டிலும் சேர்த்துக் கொள்ள முடியவில்லை.பக்குவப் பிராயம் அடையாமல் இருப்பது காரணமாய் இருக்கலாம் என்பது ஊகம்.

மிச்சப்பணத்தை எடுப்பதிலும் கொடுப்பதிலும் இருந்த கால அளவு இரண்டு மாத்திரையிலிருந்து ஒரு விநாடி அளவுகளுக்குள் தான் அடங்கியிருக்க வேண்டும் என்பது கணிதமேதையின் கணக்கீடு. நூறு ரூபாயிலிருந்து ஐந்து நபர்களுக்கு ஐம்பது என மீதிப்பணம் ஐம்பது ரூபாய் அவ்வளவு சீக்கிரம் தோழமை கைக்கு வந்தது. இது இயற்கை அறிவாக இல்லாமல் கணிதக்கல்வி அறிவாகவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய அந்நேர ஆசை.

இந்நேரமெல்லாம் மங்கிய வெயிலை இருள்தேவி ஏறக்குறைய துரத்தியடித்திருந்தாள். என் எண்ணங்களையும், சிலைகளின் மேல் உள்ள அயரா நோக்குதலையும் கலைக்கும் வண்ணமாகவே, காற்றைக் கிழித்துக்கொண்டு, புழுதியில் வாரிக் கொண்டு வந்து நின்றது ஒரு இருசக்கர வாகனம். "டிவிஎஸ் அப்பாசே ஆர்டிஆர் 160" அதன் இயந்திரம் முழு சக்தியிலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். என் அருகில் பத்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. அரைநாழிகை புயல் ஓய்ந்தது போல் எனக்கு மட்டும் தோன்றியிருக்குமோ என்னமோ. உயர் பொருளாதாரத்தின் அங்கீகாரம் வாகனத்துக்கும், வந்திருக்கும் இளைஞனுக்கும் கிடைத்திருந்தது. ஒரு நாழிகை முடிவில், இரு பெண்கள் அதன் பின்அமர்க்கையில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே சிலைகள் வாயசைத்து உண்பதில் கவிதை வரிகள் புலப்படாமல் அகப்பட்டு கிடந்த என் மனது, இப்போது பின்அமர்க்கையில் ஏறிய பெண்கள் சிலைகள்தான் என்றவுடனே எப்படி தாங்கும். இங்கே அழுக்காறுக்கு இடமில்லை. இல்லை. இல்லை. இல்லை. கடைக்கண்ணிலிருந்து அடுத்த நாழிகையில் மறைந்திருந்தார்கள்.

அதே நாழிகை என் பெயரால் ஆன ஒலியை காற்று எடுத்து வந்து என் காதுக்குள் திணித்துக் கொண்டிருந்தது. என்னை தோழமைகள் அழைத்த திசையில் ஒருவாறு தேற்றிக்கொண்டு நடக்கலாகினேன். மீண்டும் அக்கடை என் கடைக்கண்ணில் விழுந்தது. அச்சிறுவர் அடுத்த முறைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.விதியோ,மதியோ இவ்வுழைப்புக்கு அர்த்தம் தேடித் தரட்டும் என்ற மனநிலை ஒருபக்கம் இருந்தது. என் குறிப்பேட்டில் நான்கு வரிகள் எழுதிக்கொண்டேன், யாருக்கும் பயனில்லை எனத் தெரிந்தும்.

அன்றிலிருந்து பானிபூரி, பசி என்ற சொற்கலெல்லாம் புழக்கத்திற்கு வரும் போது அக்கடையை சுட்டிக்காட்டுவதில் என் கைகள் ஈடுபட்டிருந்தன.தவறான ஊக்கமா, இல்லை சரியா கைகளுக்கு யோசிக்க தெரியவில்லை. கணிதமேதையோ அது பற்றி எச்செய்தியும் அனுப்புவதில்லை என்று முடிவுகட்டிவிட்டான் போலும். சில தினங்களுக்கு முன்னால் நடைபாதை அமைப்புப் பணி நடைபெற்று கொண்டிருந்தது. கடைகள் அகற்றப்பட்டிருந்தன. ஆனந்தமும் இல்லை, அறுவருப்பும் இல்லை. சில நாட்களுக்குப் பின் எதேச்சையாக என் அடுக்குமாடி குடியிருப்பின் கீழேயே ஒரு கடை முளைத்திருப்பதை கண்டேன். அந்தச் சிறுவர்தான். சில நாட்கள் வேறு சுவைகளை வெவ்வேறு இடங்களுக்கு சென்று பழக்கப்பட்ட நாவிற்கு கால்கள் தூரம் பற்றி எடுத்துரைக்க தயாராகி நின்றது. கணிதமேதை இப்போதும் அமைதியில்தான் இருந்தான்.

"சுட்ட பழம்", சிறு பிராயம் என்பதன் பொருளிற்கு என் அகராதி கொடுத்துக்கொண்டிருந்த விளக்கத்தில் அவர் இல்லாமல், மேற்படியில் இருந்ததுதான் இத்தலைப்பிற்கு காரணம் என்பது என் வாதம்.

'சுட்ட பழம் ருசிக்கட்டும்'

(கார்த்திக் நகுல்)
முற்றும்.....

எழுதியவர் : கார்த்திக் (30-Dec-17, 11:27 am)
Tanglish : sutta pazham
பார்வை : 350

மேலே