என் காதலும்காத்திருப்பும்

ஒருபொழுதேனும்
என்னையும்,
என் காதலையும்
அவள் கண்டுகொண்டதேயில்லை...
என் காத்திருப்புக்களின்
வலியும்....சுகமும்....
அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

கன்னியவள்
கடைக்கண் பார்வைக்காக,
காத்திருந்து... காத்திருந்து....
கால் கடுத்ததுதான் மிச்சம்,
அவளின் பார்வையில்
எதுவோ இட்டுபோன எச்சம்
நான்.....

என் நேசிப்பை
அவளிடம் வாசித்துவிட
முயலும் தருணங்களில்,
காற்றை மட்டுமே உமிழும்
ஊர்க்குழாய் போலாகிறது
குரல்வளை...

அவளுக்காக
காத்திருந்த பொழுதுகளை,
கருமமே கண்ணென
கடந்திருந்தால்,
காதல் நிரம்பிய
காகிதத்தை சுமந்த
என் சட்டை பை
கொஞ்சம் காசையும் சுமந்திருக்கும்....
ஏனோ,
சில ஆண்களின் காதல் மட்டும்
பெண்களுக்கு புரிவதேயில்லை....

என் காதலின் ஆழமும்...
காத்திருப்புகளின் வலியும்....
என்றாவது ஒருநாள்,
அவளுக்கு புரியுமென்று
காத்திருந்தேன் நம்பிக்கையோடு....
அந்த நம்பிக்கையோடே
இடம்பெயர்ந்தேன்,
என் காதலை மட்டும்
சுமந்து கொண்டு.....

காத்திருப்புகளின்
கடைநிலை விளிம்புவரை,
காத்திருந்தேன்...
என் காதல்
வேறொருவனிடம் பறிபோன
சேதி கேட்கும் வரை...

இங்கே
காத்திருப்புகளும்,
மௌனங்களும்,
காதலை சொல்வதில்லை....
காதலை மட்டுமே
சுமந்து கொண்டு காத்திருக்கும்,
என்போன்ற காளைகளுக்காக
பசுக்கள் இளகுவதுமில்லை....

பனவை பாலா....

எழுதியவர் : பனவை பாலா (8-Jan-18, 2:53 pm)
பார்வை : 478

மேலே