பொங்கல் கவிதை
பொங்கல் வாழ்த்து
அலை அலையாய் எண்ணங்கள்
அலை மோதும் ஆசைகள்
பொங்கல் தின்னும் ஆசை இல்லை
புத்தாடை அணியவும் விருப்பமில்லை
தபால்காரர் வரவு பார்த்து
தவம் இருந்த நாட்கள் அவை
கண்கள் எல்லாம் வாசலிலே
கடிகார முள்ளும் அசையவில்லை
வண்ண வண்ண அட்டைகளில்
வாழ்த்து மடல்கள் வந்திடுமே
பூ போன்று விரியும் மடல்
மாலையாய் தொங்கும் மடல்
கண்ணை கவரும் மலர்களும்
கருத்தை நிறைத்த காட்சிகளும்
இயற்கை அழகின் வடிவங்களோ
சிந்தை தூண்டும் சிற்பங்களோ
சிரித்தபடி குழந்தை முதல்
சிருங்கார சினிமா நாயகன் வரை
எத்தனைஎத்தனை வகையினிலே
எல்லாரும் மகிழ்ந்து அனுப்பினரே
பொங்கல் பானை கரும்புமே
உதயம் உழவன் மாடுகளும்
எல்லா மடலிலும் இருந்தனவே
பொங்கல் சிறப்பை உணர்த்தினவே
அலைபேசி வழியாய் வாழ்த்துக்கள்
அழகாய் இன்றும் வருகின்றனவே
சுயமாய் அனுப்ப முயலாமல்
நெட்டில் சுட்டு அனுப்புகிறோம்
வாழ்த்துக்கு கூட பஞ்சமோ
எல்லா குழுவிலும் ஒரே வாழ்த்து
மாறி மாறி வருகிறதே
மாறா சலிப்பை தருகிறதே
கடனே என்று வாழ்த்துகிறோம்
கடமை என்றே வாழ்த்துகிறோம்
செலவு இல்லாமல் வாழ்த்துகிறோம்
மகிழ்ச்சி இல்லாமல் வாழ்த்துகிறோம்
மடலே மடலே வந்துவிடு
மகிழ்ச்சியை மீட்டு தந்துவிடு........