தன் பெண்டு தன் பிள்ளை
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன் !
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !
கன்னலடா என் சிற்றூர் என் போனுள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம் !
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல் !
ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க
வாயடியும், கையடியும் வளரச் செய்வார்
மாம் பிஞ்சின் உள்ளத்தின் விளைவும் கண்டோம் !
தூய உள்ளம் அன்புள்ளம் சமத்துவ உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ‘ ஒன்றே ‘ எனும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே !