இரு மௌனம்

இரு மௌனம்
==========

புது வீடு கிரகப்ரவேசத்துக்கு
என் வீட்டாளுங்க
அழைக்க மறந்தவர்களின் பட்டியலில்
அவள் இருந்திருந்தாள்
நான் போன பிற்பாடு
அந்த லிஸ்டை மறு பரிசீலனை செய்தபோதுதான்
திடுக்கிட்டுக்கொண்டேன்
எப்படி இல்லாம போனா ன்னு

அவ பேரை சேர்த்துக்கிட்டப்புறம்
நேரமில்லையே
அந்த ஊருவரைக்கும் டிராவல் பண்ணி
சொல்லணுமா
போன் பண்ணா வரமாட்டார்களா
இப்படி பட்ட வாதங்கள் எதுவுமே என் செவிகளில் பாயவில்லை
என் மனைவிகிட்டே
காரெங்கே ன்னு கேட்டேன்
ரெண்டு காரும் லோக்கல் ல இன்விடேஷன் குடுக்க போயிருப்பதாக சொன்னாள்
சரி நாளை காலை
நா பஸ்ஸுல போய்ட்டு அவங்களுக்கு சொல்லிட்டு
வந்துடறேன் ன்னு
என் மனைவியிடம் சொன்னப்போ
அவ என் கண்களைப்பார்த்து புரிந்துகொண்டாள்
அவளுக்கும் எனக்குமான
உறவின் மகத்துவத்தை

காலையில ஐந்தரை மணி உதகை பேருந்துல ஏறினப்போ
அன்னைக்கு முகுர்த்த நாள் என்பதால்
பஸ்ஸுல சீட்டு கிடைக்கலை
மேட்டுப்பாளையத்துல இறங்குறவங்க யாரேனும்
இருக்காங்களா ன்னு
கண்களை சுழலவிட்டப்படி
கூட்டத்தோடு கூட்டமா நெருக்கி நின்னுக்கிட்டேன்
இடையில தெரிஞ்சவங்க
நாலஞ்சு பேரு
நான்தானா இல்லையா என்பதைப்போல
சந்தேகத்துடன் பார்த்துக்கிட்டும்
ஜன்னல் பக்கமா திரும்பிகிட்டும் இருந்தாங்க
அவர்களைப்பார்த்து
நான் சிரித்ததும்
அடையாளம் கண்டுக்கொண்டார்கள்
மூணு பேரு உக்காருற
அந்த இருக்கையில் மூணாவது
இருந்தவர் கொஞ்சம் முன்னாடி விலக
நாலாவதாக அட்ஜஸ்ட் செய்துக்கொண்டேன்

மேட்டுப்பாளையத்தில்
கூட்டம் மேலும் அப்பியது
மலைமுகளில் மேடேறும் பேருந்து
என்னாகுமோ ன்னு யோசிக்கத் தொடங்கியபோது
எப்போ வந்தீங்க
அப்பா ஓட சாவுல பார்த்தது ன்னு
பேச்சை தொடங்கி
சில நினைவுகளுக்குள் மூழ்கடிக்கச்செய்து
மீளும்போது குன்னூர் அடைந்திருந்தோம்
நீலகிரி காத்து
கல்லாறு அடைந்ததுமே மோதக்கண்டு
என்னை உற்சாகப்படுத்திக்கொண்டாலும்
அருகிருந்தவர்களின் அளவளாவலில் சிக்கியமையால்
அதில் இலயித்திருக்கமுடியவில்லை
தனிமையில்
காரில் பயணப்படும் சுகம்
எவ்வளவு அலாதி என்று நினைப்பேன்

குன்னூர் சென்றதும் பேருந்து பாதிக்குமேல் காலியாகிவிட்டிருந்தது
ஜன்னல் பக்கமா உக்காந்து கதவை திறந்துட்டேன்
பழகிப்போன சில விஷயங்கள்
சலிப்புத் தட்டிவிடும்
வழக்கமான ரோடு
மரங்கள்
பழைய வீடுகள்
புதுப்பித்த சில வீடுகள் தான் என்றாலும்
அந்த காற்று
அதற்கெனவே அலைக்கழிக்க
கழுத்துவரை
தானாகவே
வளர்ந்திருந்த என் தலை முடி
இங்கு சலிப்பு ஒரு விதி விலக்குத்தான் என்பேன்
ஊட்டி நெருங்குகையில்
உறக்கம் தட்டிய இடையில் அவள் ஓர்மைக்கு வந்தாள்

வீட்ல பதினோரு அத்தைங்க
முதல் ஆறு அத்தைங்களுக்கு பிறந்த
பொண்ணுங்களும் பசங்களும்
என்னைவிட பெரியவங்க
இவ என்னோட ஏழாவது அத்தைக்கு பிறந்தவ
இவளுக்குப்பின்னாடி
ரெண்டு தம்பிங்க
ஊருக்கு விடுமுறைக்குன்னு போறப்போ எல்லாம்
இவளும் இவ தம்பிகளும் கூடி
எல்லோரும் வந்திருப்பாங்க
என்னோட தூங்க போட்டிபோடும் அத்தனைப்பேரையும்
சமாளித்து என்னருகே வந்து
உறங்குவா
சிலநேரம் நல்லா உறங்கிருப்பேன்
சிலநேரம்
உறங்கிருக்க மாட்டேன்
பக்கத்துல படுத்தவாறு
சோ சோ ன்னு மூச்சிரைத்தபடியே
என் முதுகு பக்கமா
கையால தட்டிக்கொடுப்பா
யாரேனும் விளையாட்டுக்கு
பெரியவ ஆனா
நீ யாரை கட்டிப்பன்னு கேட்டா
ஒழுகிய மூக்கோடும்
கொஞ்ச வெக்கத்தோடும் என் பக்கம் பார்த்து
கை நீட்டுவா
நா அங்கிருந்து ஓடிப்போயிடுவேன்

அவ சின்ன வயசுலயே பூப்படைஞ்சுட்டதால
அவளுக்கு மூக்குத்திப்போட்டு
விட்டிருந்தாங்க
அதுக்கு அப்பறமா
அவளை
விடுமுறையப்போ எல்லாம்
ஊருக்கு கூட்டிகிட்டு வாறதை
நிறுத்திட்டாங்க
பாட்டி இறந்த சில காலத்துக்கு அப்புறம்
அவங்களும்
ஊருக்கு வாறதை நிறுத்திட்டாங்க
அப்போ இருந்து
என்னோட விடுமுறை நாட்களை நா அவங்க வீட்டுல
கழிக்க ஆரம்பித்திருந்தேன்
நகரங்களில் வந்திருந்தாலும்
கிராமங்களில்
லேண்ட்லைன் போன் நுழையாத காலங்கள் அவை

"மிஸ் யூ" என்ற வார்த்தை எவ்வளவு வேலியபிள்
என்றுத் தெரியாமலேயே
அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தோம்
நானும் அவளும்

அதிகாலையில்
பனி நீரில் ஜொலித்தபடி
தலைத்தூக்கி எட்டிப்பார்க்கும்
மஞ்சள் நிற சூரிய காந்தியைப்போல
ஏழாவது போறப்போவே
அவ பெண்மையின் வாசம்
என்னைக் கொஞ்சம்
அடர்த்தியோடு தாக்கிய பரவசநொடிக்குள்
நானறியாதே
நான் அடைபட்டிருந்த முதல் நாள் அது

அப்பனாத்தாளுக்கு செல்லமகள்
செல்வந்தினி வேறு
ஆளாகியிருக்கிறாள்
தாவணிக்கு மாறியிருக்கிறாள்
அத்தனை ப்ரியங்களும் மாறாமல் இருக்கிறாள்
அப்போது நிகழ்த்திட முடியாத
சிறுவயது விளையாட்டுகளைச்
சொல்லி சொல்லி
அவளை
என்னிலிருந்து நான்
எப்போதும் மறக்கக்கூடாதபடி
அவளை எனக்குள் நினைவூட்டுகிறாள்

விடுமுறை தீரும்போதெல்லாம் பேருந்து தரிப்புவரை வந்து
பஸ்சுக்காக
காத்திருக்கும்போது
தாவணிக் கொசையில் முடிந்து வைத்திருந்த
பழைய ஐம்பது ரூபாயை
பஸ்ஸுக்கு வச்சுக்கோன்னு கொடுத்த அடுத்த நொடி
அவள் கேட்கிற முதல் கேள்வி
"மறுபடியும் எப்போ வருவ"
என்பதாகவே இருக்கும்

என் மௌனம்
கேட்கும் கேள்விகளும் இவற்றில் ஏதாவது
ஒன்றாகத்தான் இருக்கும்
"இனி அடுத்ததெப்போது சந்திக்கப்போகிறோம்"

அத்தை மகள் என்பதால்
அவளுக்கு
கடிதங்கள் எழுத தடை விதிக்கப்பட்டேன்
அனைவர் முன்னேயும்
தொட்டுப்பேசிய நிமிடங்களும்
குறுநகங்களால்
தூரிகை மீட்டிய நிமிடங்களும்
அவள்
வயதெட்டியப்பின்னால்
எங்கோ அகலே தொலைந்திருந்தது

முதல் முதலில் லேண்ட்லைன் இணைப்பு வரும்வரை
நானும் அவளும்
அடுத்தடுத்த
விடுமுறை நாட்களுக்கென எதிர்பார்த்திருந்த
காலங்கள் அவை

அடுத்த ஓரிரு
முறைக்குப்பின்னால்
சேலை உடுத்தத் தொடங்கியிருக்கிறாள்
படிப்பில் மக்குபிளாஸ்திரி
என்பதால்
பள்ளியினின்று பன்னிரெண்டாம் வகுப்பிலேயே
நிறுத்தப்பட்டிருக்கிறாள்
கொத்தமல்லிச்செடி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை
சுக்குட்டுக் கீரை என
புடவை முன்கட்டை இடுப்பில் சொருகிக்கொண்ட
சிறு விவசாயி ஆகியிருக்கிறாள்

எனக்குத் தெரியும் என்னை பேருந்திலேற்றிவிட்டு
தாய் தொலைத்த
கன்றுபோல
அவளால் ஓட முடிந்த தூரம் வரை
அப்பேருந்தின் பின்னால்
டாட்டா சொல்லியபடி ஓடிவருவாள்
ஒருக்கட்டத்தில்
மூச்சிரைக்க நின்றுவிட்டு
அழுது முகம் வாடி திரும்புவாள்

ஏதோஒரு பேரயர்விலிருந்து விழித்ததுபோல
அந்த நினைவுகளிலுருண்டு
மீளும்போது
பேருந்து சேரிங் க்ராஸ் அடைந்திருந்தது
எட்டரை மணி ஆகியும்
குளிருக்கு பஞ்சமில்லை
தோளில் போட்டிருந்த கொசுவு அங்கியை
உடுத்திவிட்டு
ஏடிசி பஸ் ஸ்டாப்பபில் இறங்க
மித வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த
பேரூந்துக்குள்ளேயே
லெகுவாக எழுந்து நடக்கலானேன்

அங்கிருந்து
அடுத்த முப்பது மைல் தூரம்
அவள் கட்டிய ஊருக்கு பயணம் செய்ய
அரசு பேருந்தோ
இல்லை மினி பஸ்ஸோ
பிடித்தாக வேண்டும்

சாப்பாடு டயத்துக்கு போயி அந்த ஊருல இறங்குனேன்
இறங்கிய இடத்துல
பெரிய மரம்
கீழ நம்ம லியோகப்பாஸா வை அரெஸ்ட் பண்ணி
டெகரேட் பண்ணி வச்சிருந்தாங்க
அவ்ளோ நேரமாகியும்
பெட்ஷீட் போர்த்திக்கிட்டிருந்த
நாலஞ்சு பெருசுங்க
பஸ் வந்ததும்
ட்ரைவர் கிட்ட கொடுத்துவிட்ட காசுக்கு
குவார்ட்டர் க்காக
எட்டிப்பார்த்துச்சுங்க

யாரை கேக்கன்னு யோசிக்கிற முன்னமே
முன்னால
அசடுவழிந்த மேனிக்கு ஒருத்தர் வந்து
படகா பாஷையிலே
ஊருக்கு புதுசா
யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க
அப்படின்னு கேட்டார்

மணிகண்டன், மனைவிபேரு லதா
சோலூர் ல இருந்து
இங்க கல்யாணம் பண்ணி
வந்திருக்காங்க ன்னு சொன்னதும்
முகத்தை வலது பக்கமா திருப்புனவாறு
பழங்கதவால் பூட்டிடப்பட்ட
ஒத்தை அறையைப்பார்த்து
அதான் வீடு
வர சாயங்காலம்
அஞ்சு மணிக்கு மேலே ஆகும் ன்னு சொன்னாரு

சிறு ஏமாற்றம்
இருந்தாலும் என்ன செய்யன்னு தெரியாம
அப்படியே நிண்டேன்
ஆஹ் இதோ பைய்யன் வாறானே
டேய் மணிப்பயலே
உங்க வீட்டுக்குதாண்டா விருந்தாளு வந்திருக்கு
கூட்டிப்போ ன்னு சொன்னாரு
பின்பக்கம் திரும்பி
அவனைப்பார்த்தேன்,
அவளுடைய அதே கண்கள்
நிறம் கருத்திருந்தான்
அப்பா போல இருப்பான் போலிருக்கு என்று
அவனிடம் ஒரு மென்புன்னகை
இழையோடச் செயதேன்
பதிலுக்கு அவனும்

அவ வேலை முடிச்சுவர
வைகிட்டு அஞ்சு மணிக்குமேலே
ஆகுன்றதனால
அவளைப்பார்க்காம எப்படி போறதுன்னு
நினைச்சவன்
அவ மகன் கூட
அங்கேயே பேசிக்கிட்டு இருந்துட்டேன்
அப்பா எப்போ
வருவாருடா ன்னு கேட்டேன்
வேலைக்குப்போறாரா ன்னு கேட்டேன்
இல்ல அங்கிள்
நா உறங்குனதுக்கப்புறந்தான்
வருவாரு
கச்சேரியில சீட்டாடிக்கிட்டிருப்பாரு ன்னு சொன்னான்
எத்தனாவது படிக்கிற
எந்த ஸ்கூல் போற ன்னு கேட்டேன்
இல்ல அங்கிள் ஸ்கூல் போறது இல்லை
பேக்டரி வேலைக்குப்போறேன் அங்கிள்
தினசரி 175 ரூபா
தாரங்க அங்கிள் ன்னு சொன்னதும்
அவ நிலையை நினைச்சு
ஒரு நிமிடம் உறைந்து போயிருந்தேன்


பொழுது சாஞ்சு அஞ்சர மணி போல இருக்கும்
இருள் மூடிடுச்சு
நாப்பது கிலோ
தேயிலை மூட்டையை
கழுத்தலுங்க தலையில சுமந்துட்டு வந்து
அவ வீட்டுக்கு
அடுத்தால இருக்கிற
தேயிலை செட்டுல எடை போட்டு
சீட்டை வாங்கியவ
தலையில கட்டியிருக்கிற
துண்டை அவித்து
முகத்தை துடைச்சிகிட்டு
வீடு திறந்து கிடக்கிறதை பார்த்துட்டு
பைய்யனை
குமாரா ன்னு கூப்பிட்டா
கேட்டுப்பழக்கப்பட்ட அந்த குரல்
எவ்ளோ உடைஞ்சு
மாறி போயிட்டது

உள்ள உக்காந்திருந்தவன்
எழுந்து கொஞ்சம்
வெளிய வந்து பார்த்தேன்
அடையாளமிழந்திருந்தாள்
அருகில் வந்தவள்
கண்கள் இறுகி கண்டுகொள்ள முயற்சித்து
தோற்றுபோனவள்
யார் நீங்க
என்ன விஷயமா
வந்திருக்கீங்க ன்னு கேட்டாள்

அப்போது நிகழ்த்திட முடியாத அதே சிறுவயது விளையாட்டை
அவளிடம் சொல்லி சொல்லி
அவளுக்கு என்னை நினைவூட்டுகிறேன்
அகல விரித்த கண்களில்
பொல பொலவென
ஆழிப்பெருக்கெடுக்கத் தொடங்கிற்று
ஆனா முகமும் வாயும்
பூரிக்கிறது
கட்டிக்கிட்ட சேலை தேசீக்கு சருகு பட்டு
அழுக்காகி கிடக்கு

திருடா, இருக்கியா செத்துட்டியா
இல்ல எங்க தான் போயிட்ட
பாரீன் போயிட்ட ன்னு சொன்னாங்களே
எங்க இருக்க
எங்களை எல்லாம் நெனவு
வச்சிருக்கியா
உன்னப்பத்தி எல்லோரும் சொல்லுறத கேட்டு
என் மாமன் பையன்தான் ன்னு
சொல்லத் தோணும்
வாயெடுக்கும் முன்ன குடிகாரனை நெனச்சு
நொந்துக்குவேன்
வா, சாப்பிட்டுத்தான் போவணும் ன்னு
அடம்புடிக்கும்போது
வார்த்தைகள் என்னிடம் தடைப்பட்டுப்போகின்றன

நீ நல்லா இருக்கியா ன்னு கேட்டேன்
எனக்கென்ன
கிராமத்து பொழப்பு உனக்கு தெரியாதா என்ன
கொஞ்சம் குடிப்பாக
மத்தபடி ஒரு்குறையுமில்ல ன்னு
அவள் சொல்லும்போதும்
வார்த்தைகள் என்னிடம் தடைப்பட்டுப்போகின்றன

அடுத்திருந்த அத்தை ,மாமன்
மச்சாண்டார்
கொழுந்தன் தம்பதிகளுக்கு மட்டுமில்ல

மாமா பைய்யன்
பாரீன்ல இருக்காங்க, விசேஷத்துக்கு
கூப்பிட வந்திருக்காங்க
ன்னு
பாக்குற எல்லோருகிட்டயுமே
சொல்லிட்டே போனா
எனக்குத்தான் வார்த்தைகள் தடைப்பட்டுப்போகின்றன

எல்லாம் முடிந்து
சாப்பிட எதுவும் வேண்டாமுன்னு சொல்லிட்டு
அவ பைய்யன் கைக்கு
ரெண்டாயிரம் ரூபா நோட்டை எடுத்துக் கொடுக்கையில்
அவன்
அவளோட கண்களால் அவளைப்பார்த்தான்
அவளைப்போலவே பார்த்தான்
மாமாதான் வாங்கிக்கடா ன்னு சொன்னவள்
அவரு வந்துடுவார்
இன்னைக்கிருந்து பார்த்துட்டு போடா ன்னு சொல்லும்போதும்
எனக்கு வார்த்தைகள் தடைப்பட்டுப்போகின்றன

கெளம்பர குந்தானி
நிறைய வேலைங்க போட்டது போட்டபடி இருக்கு
போய்த்தான் எல்லாமே
தீக்கணும்
எல்லோரும் வந்துருங்க புள்ள ன்னு சொல்லவும்
எத்தனை புள்ளைங்க ன்னு
கேட்டவகிட்ட
அதுக்குள்ளே மறந்துட்டியா
ரெண்டு பேரு
ஹாஸ்பத்திரி வந்து பார்த்துட்டு போனயில்ல

எங்கடா ஓடுறதுக்கே நேரஞ்சரியா இருக்கு
எதை நினைவுல வைக்க
ஆனா நீ மட்டும் எப்போவும் இருக்க ன்னு சொல்லி
நெருஞ்சி முள்ளைப் பாய்ச்சும்போதும்
எனக்கு வார்த்தைகள் தடைப்பட்டுப்போகின்றன

இருட்டிப்போச்சு
கடைசி பஸ்ஸு ல உதகை போயி சேர்ந்தால் தான்
இனி கோயமுத்தூருக்கு பஸ்

அவ பிறந்த ஊரைப்போல
இங்க
அவ வீட்டுக்கும் பேருந்து தரப்புக்கும்
அதிக தொலைவுகள் இல்லை
அப்படி இருந்தாலாவது
அவள் என்னோடு ஏதாவது மனம் திறந்திருப்பாள் போல்
அதற்கான வாய்ப்பில்லாமல்
அருகிலுள்ள தெருபோல்
அவளும் நானும் ஏதும் பேசாத படி
ஆட்கூட்டத்துடன்
அடுத்தே வீற்றிருந்தது
அவள் கட்டிச்சென்ற ஊரின் பேருந்து தரிப்பும்

பக்கத்தில் பக்கத்தில் இருந்தும்
ஏதும் பேசாமல்
நின்றிருந்தோம்
அவள் குறும்புத்தனங்கள் மறைந்துவிட்டனவா
இல்லை
சூழ்நிலையை பார்க்கிறாளா
என குழம்பிக்கொண்டிருந்த போதே
பேருந்தொன்று
புகைக்கக்கியப்படி
ஹெட்லைட் வெளிச்சத்துடன்
மேடேறி வந்துகொண்டிருந்தது
இன்னும் இரண்டு நிமிடமோ
இல்லை அதற்கு முன்போ
அந்த பேருந்து என்னை நெருங்கிவிடலாம்
அவள் என்னைப்பார்க்கிறாள்
நானும் பார்க்கிறேன்
இருவருக்கும் வார்த்தைகள் தடைப்பட்டுப்போனது

பஸ் வந்ததும்
ஏனோ கால்கள் முன்னே போகவில்லை
ஏதாவது சொல்லுவாள்
என்று பார்த்தேன்
அவள் நிலையைப்பார்த்து
காசுபணம் கொடுத்துவிடும் திமிரனாகிவிட விரும்பவில்லை
அவளும் ஏதும் சொல்லவில்லை
சரி குந்தானி
போட்டுமா ன்னு சொன்னப்போ

அழுக்கு படிந்த சேலையின்
முந்தானே கொசையில கட்டிவச்சிருந்த
ஒரு பழைய
ஐம்பது ரூவாய எடுத்து
பஸ்ஸுக்கு வச்சுக்கோன்னு கொடுத்தப்போ

என்னென்னமோ படிச்சுட்டேன்னு
நினைச்சு
சந்தோஷப்பட்டேன்
இந்த வயசுலேயே நிறைய சம்பாதிச்சுட்டேன்
சாதிச்சுட்டேன்னு
கர்வப்பட்டுக்கிட்டேன்
ஆனா எல்லாமே அந்த ஒரு செகண்ட் ல
சுக்குநூறாகி
சொல்லவந்த
மிச்ச வார்த்தைகள் எல்லாம்
எனக்கு அதோட மொத்தமா தடைப்பட்டுப்போச்சு

என்னைப்பற்றிய
கொலை நினைவிலும் கூட அவ வாழ்ந்திடுவா
என்னாலதான் தெரியல

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (25-Jan-18, 9:19 pm)
Tanglish : iru mounam
பார்வை : 346

மேலே