கொண்டாடப்படும் தினங்கள்

நாட்காட்டியில் தினமும் ஒரு தாளை நாம் கிழிக்கும்போது, கடந்த பல வீணான நாட்களை மீண்டும் நாம் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை, வரும் நாட்களைப் பற்றித்தான் அதிகமாக அக்கரை எடுத்துக் கொள்கிறோம்.
“உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்”
என்று நான்கு வரிகளில் மிக அழகாக ‘இறைவன் நமக்களித்த வாழ்நாள்’ என்றும், நித்தமதை வீணே கழிக்கிறோமே!........என்று சொல்லி வருந்துகிறார் பட்டிணத்தடிகள். ஆக வருகின்ற எல்லா நாட்களையும் நல்ல நாட்களாகப் பாவித்து, நற்செயல்களைப் புரியவேண்டுமென்பதை மிக அழகாக நமக்குப் புரியவைத்தார்..
==============================================================
கொண்டாடப்படும் தினங்கள்..!
========================
நாட்களிலே நல்லதுகெட்டதெது என்பதொரு கேள்வியே.?
..........நாட்களைத்துமே கொண்டாட வேண்டிய நற்தினங்களே.!
நாட்காட்டியில் நாளொன்றின் தாளைநாம் கிழிக்கும்போது..
..........நம்வாழ்வில் நாளொன்று கழிவதைநாம் அறியவேண்டும்.!
ஆட்டம்காணா வாழ்வமைய ஆன்றோர் வகுத்துவைத்த..
..........இருங்கலையதைக் கற்றுத்தேற அரும்பாடு படவேண்டும்.!
கோட்பாடுடன் குறிக்கோளையும் நாம் கொண்டுவிட்டால்..
..........கோள்கள் கொடுக்கும் கொடுமைகூட விலகிவழிவிடும்.!
வளைந்தாலும் நெளிந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்..
..........நாளைசெய்வோம் எனவொரு எண்ணம் எழவேண்டாம்.!
இளைஞனே நற்செயலைத் திட்டமிடு! அச்செயலில்..
..........இறங்கியபின் நாட்டமுடன் நல்கியதை முடிக்கப்பழகு.!
முளைக்கும் விதைக்கு மண்ணைப்பிளக்கும் வீரியமுண்டு..
..........மூளையில் உருவாகும் சிந்தனைக்குமொரு சக்தியுமுண்டு.!
களைகளும் தடைகளும் தடங்கலின்றி தழைத்துவருமாம்..
..........தாங்கியதை எதிர்ப்பின் எல்லாதினமும் கொண்டாட்டமே.!
ஒருதினத்தில் இல்லையெனில் மறுதினத்தில் வந்துவிடும்..
..........ஓர்விழாவும் பண்டிகையும்!...உலகமுழுதுமிது இயற்கை.!
உருவமிலா நிலையிலவன் உலகத்தில் நிறைந்திருப்பான்..
..........உருகும் பக்தர்கள் இறைஞ்சவெங்கும் இரைந்திருப்பான்.!
அருட்கொடை யோனவன் ஆசிபெற அண்டத்திலுள்ள..
..........ஆலயமுழுதும் அரங்கேறும் அன்றாடம் கொண்டாட்டம்.!
இருளகற்றி வாழ்வில் வெளிச்சம்பெறும் வரம்வேண்ட..
..........இறைவனைக் கொண்டாடும் தினத்திற்கே பஞ்சமில்லை.!
கொண்டாட வேண்டியநல் வாழ்வையும் இழந்துவிட்டு..
..........திண்டாடும் மாந்தர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.!
தண்டச்சோறு தின்றுவிட்டு திண்ணைக்கதை பேசியே..
..........தினமொரு நாளைவீணே கழித்தவர்கள் இருக்கிறார்கள்.!
துண்டறிக்கை விடும்சினிமா அரசியலின் பின்னலைந்து..
..........தொலைத்ததைத் திரும்பப்பெற நினைப்பவரும் உண்டு.!
கண்டறிந்து கேட்டறிந்து கற்றறிவுபெறு தற்கிவர்கள்-நம்..
..........தண்டமிழிழைக் கொண்டாட வேண்டும் தினமுமதை.!
============================================================
நன்றி:: தினமணி வெளியீடு::25-12-௧௭
நன்றி:: கூகிள் இமேஜ்.