பன்னீர் பூக்கள் --- முஹம்மத் ஸர்பான்

இந்த வார மித்திரன் வாரமலர் பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய சிறுகதை


குருட்டுப் பட்டாம்பூச்சியின் தோட்டத்திற்குள் என் கண்கள் தூங்கிக் கொண்டிருந்தது. குடைக் காளான்களுக்குள் ஒரு பூந்தோட்டம் அன்றைய வசீகர மாலைப் பொழுதை ஆவலாகக் காத்திருந்தது. செவ்வாய் ஒரு பாலைவனம் என்றால் நிகழ்கால உலகை தார்ச் சாலை எனலாம்.

இன்று யாருமில்லாத காட்டிற்குள் மெழுகு வர்த்திகள் கண்ணீர் அஞ்சலிக்காய் ஏற்றப்படுகிறது; அன்று கூரைகளில்லாத குடிசைக்குள் மலை போல் குவிந்த சடலங்களை சந்திரன் தான் அடையாளம் காட்டியது.

என்னால் அலைகளோடு நீந்த முடியும்; மான்களோடு துள்ளி விளையாட இயலும்; வானவில்லை ஓவியமாய் வரைய முடியும் ஆனால் முப்பது என்புகள், முப்பது நரம்புகள் கொஞ்சம் இரத்தத் துளிகள் ஊற்றப்பட்ட என் வீட்டுக் குப்பைத் தொட்டியை மட்டும் கடந்து செல்ல முடியாது.

வாசற்கதவை தாண்டினால் நான் இன்னும் முப்பதாயிரம் குப்பைத் தொட்டிகளை கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். என் கால்களில் குத்திக் கொண்டிருக்கும் முட்கள் எல்லாம் அன்று என் நெஞ்சில் பாய்ந்த தோட்டாக்கள். கடந்த காலங்களை தேடும் பாதையில் சிலுவைகளை கண்டுபிடிக்கிறேன்.

சந்திகளில்லாத அந்தக் கல்லறைக்குள் என்னை நானே தேடிப் போகிறேன்

பட்டுப்போன நட்சத்திரங்கள் போல் ஆன்மாக்கள் சுயசரிதை எழுதிக் கொண்டிருந்தது. பறவைகளின் கூட்டிற்குள் சாம்பல் ஓநாய்கள் அதிகாரமாய் மேய்ந்து ஓய்ந்தன.

திகதிகள் குறிக்கப்படாத கலண்டரில் மரணச் சேதிகள் உலகத்து அருவிகள் போல் என் பார்வைகளில் ஓடியது. விஷப் பாம்புகளை விட கொடிய மனிதர்களால் இக் கல்லறை உருவாக்கப்பட்டுள்ளதென நான் நினைக்கிறேன்.

கைகளைக் காணவில்லை இருந்தும், காற்றாடிகள் வானத்தில் பறந்து கொண்டு தான் இருக்கிறது. இதயங்கள் சுவாசிக்கவில்லை இருந்தும், பாழடைந்த வீட்டுக்குள் பலூன்கள் சுவரோவியமாய் தொங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

மறைக்கப்பட்ட வரலாறுகளை நினைக்கும் போது சிந்து நதியின் பிணவாடைக் கறைகள் நைல் நதியில் கரையோதுங்கி நின்றது.

பூங்காற்றுக் கூட புல்லாங்குழலை வாசிக்காமல் செவ்விந்தியர்களை தேடிப் போகிறது.

பூக்காரியின் கொண்டைகள் அறுக்கப்பட்டு நூறு சிங்கங்கள் நடுவே சிக்கிய மான் போல என் கண் முன்னே கன்னியொருத்தி நரமாமிசமாய் உண்ணப்படுகிறாள்.

ஆயுதம் ஏந்தி போராட நினைத்த போது கானல் நீராய் மறைந்து போகிறாள்.

அஹிம்சையான புத்தகங்களை கண்கள் காண்கிறது. கைகளால் பற்றினால் சாம்பலாய் நிறைகிறது. அடிக்கடி ஒரு சேலை என்னை நெருங்கி வருகிறது.

யுத்தத்தால் பைத்தியமான பெண்ணை நினைவுபடுத்துகின்றது. சுதந்திரம் என்ற புல்லை அதிகாரமெனும் ஆடுகள் மேய்ந்த மயானத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

பொழுது சாய்ந்த பின் அக்கறையாய் கணவனை தேடிச் சென்றவள் விலை மாதுவாய் விற்கப்பட்டாள். சின்னச் சின்ன வாழ்வாதாரம் தேடி அலைந்தவர்கள் காரணமேயின்றி நெருப்புக்குள் தூக்கி வீசப்பட்டார்கள்.

உண்மையை எழுதியவர்கள் கரச் சேதத்தால் பாராட்டப்பட்டார்கள். பள்ளிக்கூடம் கூட குட்டிக் கல்லறையானது. கடந்த காலம் ஒரு கண்ணாடி போன்றது.

அதில், நினைவுகள் கற்களாய் வீசப்பட்டு உடைக்கப்படுகிறது. என் இமைகள் கணநேரமாய் சிமிட்டவில்லை. அணைந்து போகும் வேகத்தில் எரிந்து கொண்டிருக்கும் டயருக்குள் அங்கம் சிதைந்த மார்பகத்தில் வாய் வைத்து பசியாறிய குழந்தையும் வாளினால் துண்டு துண்டாய் வெட்டப்படுகிறது.

என்னுயிருக்குள் எரிமலை வெடித்ததைப் போல என் சிந்தை என் கழுத்தை நெறிக்கின்றது. சட்டென்று கவசம் அணிந்த போர் வீரன் போல ஓர் ஆமை கண்களில் பட மண்டியிட்டுக் கொள்கிறேன்

என் நெஞ்சுக்குள் சுவாசங்கள் இரட்டிப்பாக தொண்டைக்குள் தாகமும் கடலளவானது. மண்ணுக்குள் உக்கிப் போனதாய் நான் நினைத்த என் நண்பன் தண்ணீர் போத்தலோடு அருகில் வந்தான். அவன் கைகளிலிருந்து அதனை நான் பற்ற முடியவில்லை. கண்ணீர் சிந்தி அழுதேன். என் கண்ணீர் தரையில் விழுந்து துமிகளாக சிதறும் முன் என் மனைவி அதனை தாங்கிக் கொண்டாள்.

பல வருடங்களுக்கு பின் அவளை இன்று நான் காண்கிறேன். என் ஆன்மா எங்கும் காதல் உதிரமாய் ஓடுவதை உணர்ந்தேன்.

நிலா போன்ற அவள் முகம் சிலந்தி வலைகள் போல் உருமாறி இருந்தது. அவள் இடுப்புக்கு கீழுள்ள பாகங்கள் முற்றாக அழிந்திருந்தது. ஒற்றைப் பார்வையில் ஜடமான நான் நினைவு வந்து அவளை கட்டியணைக்க முயலும் முன் அவள் மறைந்து விட்டாள்.

நான்கு திசைகளாய் என் கண்கள் தேடலை புயல் வேகத்தில் தொடர்ந்தது. வடக்கில் என்னை விட்டுப் பிரிந்த என் வலக் கரத்தினை கண்டு கொண்டேன்.

அது கிழக்கில் தன் நண்பனான இடது கரத்தினை பார்த்து அன்பாய் சிரித்தது. "பன்னீர் பூக்கள்" போல் நான் கரைந்து போனேன். மீளமுடியாத பல சோகங்களுக்கு ஈழக்கரை விடைகள் தந்தாலும் தேவதையாய் பிறந்த என் கைக்குழந்தையின் முகத்தை மட்டும் இன்று வரை கண்டுபிடிக்க

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Feb-18, 11:22 am)
பார்வை : 246

மேலே