உசுரோடு உசுராக
கிட்டயிருக்கும் போது
கீழ்வானத்துச் சிவப்பாய்
கண்ணுரெண்டும் சிவந்திருக்கும்
கோவத்தில சிவந்திச்சானு
கொஞ்சினா
தூரதேசத்து துயரங்கள
மாளாது சொல்லிமடிவ…
செஞ்சோலப் பிஞ்சுகள
நெஞ்செல்லாம்
சுமந்திருந்த…
மண்வாசத்த மறக்காத
மக்க மனசெல்லாம்
நிறஞ்சிருந்த.
தாய்மொழிய மறந்தா
தாயமறந்திடுவன்னு
தலைமேல சத்தியஞ்செஞ்ச.
புயலுல அடிப்பட்டப்ப
புழுபுழுத்த
அரிசியைத் தந்தாங்கணு
புழுவா துடிச்ச.
புரியாத மக்ககிட்ட
சொல்லிச் சொல்லிப் புலம்பின.
உழைச்சி களைத்து
ஓடாப் போனவங்ககிட்ட
ஒரு வார்த்த பேசினாலும்
உறவோடு பேசுவ.
அம்பேத்காரையும்…
பெரியாரையும்…
பொழுதெல்லாஞ் சொல்லி
பூரித்துப் போனப்ப
பூத்தப்பூவா நாயிருப்பேன்.
உலகையே
நீ நேசிக்கிறதால
ஒன்ன நேசிக்கவே
உசுரோடு நானிருக்கேன்…