கண்ட நாள் முதலாய்-பகுதி-47 -இறுதிப்பகுதி

.....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 47

மனதை அமைதிப்படுத்தி அவள் எங்கே சென்றிருப்பாள் என்று கண்ணை மூடி யோசித்தவனின் மனக்கண்ணில் அந்த இடம் மட்டுமேதான் வந்து நின்றது...அவள் இப்போதிருக்கும் மனநிலையில் நிச்சயமாக அங்குதான் சென்றிருப்பாள் என்று முடிவு செய்து கொண்டவன்,அவனிற்கு அவளை அடையாளம் காட்டிய அந்தக் கடற்கரையை நோக்கி காரைச் செலுத்தினான்....

மின்னல் வேகத்தில் கடற்கரையை வந்தடைந்தவன்...காரைப் பார்க்கிங்கில் விட்டு விட்டு அவளைத் தேடிச் சென்றான்...அவன் தேடிய அனைத்து வழிகளிலும் அவனிற்கு ஏமாற்றத்தை பரிசளித்தவள்...இம்முறை அவனை ஏமாற்றாமல் அவன் எதிர்பார்த்தது போலவே அங்குதான் இருந்தாள்..

அவளைக் கண்ட பின்புதான் அவனிற்கு போன உயிர் திரும்பி வந்தது என்றே சொல்லலாம்...ஆம் அவனது உயிரே அவள்தான் அல்லவா...அவள் அருகே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்துச் சென்றவன்,அவளிற்கு பின்னால் போய் நின்றவாறே அவளின் தோள் மீது அவனது கரத்தினை அழுத்தமாகப் பதித்துக் கொண்டான்...

அவனது ஸ்பரிசத்திலேயே அவன்தான் என்பதை உணர்ந்து கொண்டவள்,அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே அவனது கையினை விலக்கி விட்டாள்...அப்போது அன்றைய அவளின் வலியினை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது...மீண்டும் அவளைத் தொடத் துடித்த விரல்களை கஸ்டப்பட்டு தடுத்துக் கொண்டவன்...அவனிற்கே கேட்காத குரலில் அவளை அழைத்தான்...ஆனால் அவனது குரல் அவளிற்கு மட்டும் நன்றாகவே கேட்டது...

"...துளசி..."

ஏழு நாட்களின் பின் அவளை அவன் அழைக்கிறான்...இத்தனை நாட்களாய் காரணத்தைச் சொல்லாமலேயே அவளை விலக்கி வைத்தவன் இன்று வந்து அவளை அழைக்கிறான்...அதுவரை நேரமும் மணலில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவள்...அவனின் அழைப்பில் உயிர்த்தெழுந்தவளாய் அவனிற்கு முன்னால் கைகளைக் குறுக்காக கட்டியவாறே எழுந்து நின்று கொண்டாள்...

"இப்போ மட்டும் ஏன் வந்தீங்க அரவிந்தன்...??...இந்த ஏழு நாளா...நீங்க என்கூட பேச மாட்டீங்களா...என்னைப் பார்க்க மாட்டீங்களான்னு உங்க பின்னாடியே வந்திட்டு இருந்தனே அரவிந்தன்...அப்போ எல்லாம் என்னைத் தேடி வராத நீங்க...இப்போ மட்டும் ஏன் வந்தீங்க அரவிந்தன்...??"

அவனை நேருக்கு நேராகப் பார்த்து கண்கள் கலங்கி இதழ்கள் துடிக்க கேட்டுக் கொண்டிருப்பவளிடம் என்னவென்று அவன் சொல்வான்...??..நீ எனக்கு முன்பே இன்னொருத்தன் உன் வாழ்வில் இருந்திருக்கிறான் என்ற குழப்பத்தில்தான் உன்னிடமிருந்து இந்த ஒரு வார காலமாக விலகி நின்றேன்...இப்போது அந்தக் காதலும் நான்தான் என்று தெரிந்ததும் உன்னைத் தேடி வந்தேன் என்று சொல்வானா...??...

இந்தக் காரணத்தினால்தான் அவளோடு அவன் பேசவில்லையென்று அறிந்தால் அவள் துடிதுடித்துப் போய்விட மாட்டாளா...??..அத்தோடே அவனை முழுதாகவே அவள் வெறுத்துவிட்டால் அதன்பின் அவனால் உயிர்வாழத்தான் முடியுமா...??அவளிற்கு எப்படித் தன்னைப் புரிய வைப்பது என்று அறியாமல் தனக்குள்ளேயே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான் அரவிந்தன்...

"என்னாச்சு அரவிந்தன்...ஏன் வாயடைச்சுப் போய் நிற்குறீங்க...??...பேசுறதுக்கு ஒன்னுமில்லையா..இல்லை என்கூட பேசவே பிடிக்கலையா...??..."

அவளது ஒவ்வொரு வார்த்தைகளுமே அவனது இதயத்தை சுக்குநூறாய் உடைத்துக் கொண்டிருந்தன..ஆனாலும் அவனால் அவளிடம் பேச முடியவில்லை.. அவனது வார்த்தைகள் அவனது தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டிருக்க உண்மையிலேயே வாயடைத்துப் போய்தான் நின்றான் அரவிந்தன்...

"ஒரு வாரத்துக்கு மட்டும்தான் என்னைத் தள்ளி வைச்சீங்களா...??...இல்லை ஒரேடியாத் தள்ளி வைச்சிடலாம்னு முடிவே பண்ணிட்டீங்களா...??..இதைக் கேட்டவளும் சரி கேட்டுக் கொண்டிருந்தவனும் சரி துடிதுடித்துப் போய்விட்டார்கள்...

அதற்கு மேலும் அரவிந்தனால் பொறுமையாக இருக்க முடியவில்லை...அவள் அருகே நெருங்கி அவளின் இதழ்களை தன் கரத்தினால் மூடிக் கொண்டவன்,

"இதுக்கு மேலயும் எதுவும் சொல்லிடாத துளசி...அது எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை...நான் எப்படி உன்னை..."என்றவனின் தொண்டை கண்ணீரில் அடைத்துக் கொள்ள அப்படியே அவளைத் தன்னுடனேயே இறுக்கிக் கொண்டான்...

தங்களை மறந்த நிலையில் ஒருவரிடத்தில் ஒருவர் சரணடைந்திருந்தவர்கள் சிறிது நேரத்திற்கு எதுவுமே பேசிக் கொள்ளவில்லை...அவனோடு ஒன்றிப் போயிருந்தவள் அதுவரையில் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தத்தையும் அவன் மார்பில் அழுது தீர்த்தாள்....

அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன்,அவள் தன்னை நிலைப்படுத்தி நிமிரும் வரை அவளை அவனது அணைப்பிலேயேதான் வைத்திருந்தான்....அவள் அவனிடமிருந்து விலகிய போதும் அவளைத் தன் கையணைப்பில் வைத்தவாறே பேச ஆரம்பித்தான் அரவிந்தன்...

"என்னை மன்னிச்சிரு துளசி...இந்த ஒருவாரமா உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டன் ல...??.??...நான் எதையும் வேணும்னு பண்ணல துளசி...மனசில இப்படியொரு குழப்பத்தை வைச்சிக்கிட்டு என்னால உன்னைப் பார்க்க கூட முடியல...இதில எங்க பேசுறது..?? ."

"என்ன குழப்பம்...??...எதுவாயிருந்தாலும் சொல்லிடுங்க அரவிந்தன்...இனியும் நமக்குள்ள எந்த இரகசியமும் வேண்டாம்..."

அவன் இதைச் சொன்னதும் அவனிடத்தில் அவள் எப்படி ரியாக்ட் செய்தாலும் பரவாயில்லைதான்...ஆனால் அதில் அர்ஜீனைத் தொடர்புபடுத்த அவன் விரும்பவில்லை...அது பின்நாட்களில் நான்கு பேருக்குமிடையில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும் என்பதால் அதை மட்டும் அவளிடத்திலிருந்து மறைத்தான்...

"அது...அது...பரத் ஸ்வேதாவோட கல்யாணத்தன்னைக்கு உன்னை ஒருத்தன் காதலிச்சதா யார்கிட்டயோ சொல்லிட்டு இருந்தான்...அதைக் கேட்டதிலிருந்து..நீ கூட அதனாலதான் அவனை மறக்க முடியாமத்தான் என்கிட்ட அவகாசம் கேட்டியோன்னு..."என்று அவன் முடிக்கும் முன்னமே அவனை விட்டு விலகியிருந்தவள்...அதற்கு மேலும் அவனைப் பேச விடாது கையைக் காட்டித் தடுத்திருந்தாள்...

"சோ இதனாலதான்...சேர் இந்த ஏழு நாளா என் கூடப் பேசாம இருந்தீங்க..இல்லையா...??..."

"துளசி நான் சொல்ல வாறதை முதல்ல கேளு...அதுக்கப்புறம் என்னை என்ன வேணும்னாலும் சொல்லு..."

"போதும் அரவிந்தன்...போதும் இதுக்கு மேல எதையும் சொல்லிடாதீங்க...ஒரு வகையில நீங்க சொன்னது உண்மைதான்...நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒருத்தரைக் காதலிச்சது உண்மைதான்...ஆனால் நான் உங்ககிட்ட கொஞ்ச கால இடைவெளியைக் கேட்டது அந்தக் காதலை மறக்கிறதுக்காக இல்லை..."

"நான் உங்களை மனசார என் கணவனா ஏத்துக்கனும்னு நினைச்சன்...உங்களை உங்களுக்காகவே எப்போ நான் காதலிக்க ஆரம்பிக்கிறனோ அன்னைக்குத்தான் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு நினைச்சன்...அதனாலதான் நான் அவகாசம் கேட்டனே தவிர...அந்த இன்னொருத்தனுக்காக இல்லை..."

"என்னோட வாழ்க்கையில வந்த இரண்டு பேருமே நீங்க ஒருத்தராவே இருக்கலாம்...ஆனா நான் அந்த அரவிந்தனை காதலிச்சத விட அதிகமா இந்த அரவிந்தனைக் காதலிக்குறேன்...என்னோட கணவன் அரவிந்தனைத்தான் நான் இப்போ காதலிக்குறேன்..."

"ஆனால் நீங்க என் காதலையே சந்தேகப்பட்டுட்டீங்க ல அரவிந்தன்..??..நீங்க எப்படி அப்படி நினைக்கலாம் அரவிந்தன்...??..."என்றவாறே அவனது சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கியவள்,அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கதறத் தொடங்கினாள்...

"ஒருவேளை என்னோட வாழ்க்கையில உனக்கு முதலே வேற ஒரு பொண்ணு இருந்திருக்கிறான்னு உனக்குத் தெரிய வரும் போது..நீ என்ன பண்ணியிருப்ப துளசி..??..."

"அரவிந்தன்.."என்றவாறே அவனிடத்திலிருந்து அதிர்ந்து விலகி நின்றாள்...

அவளிற்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது ஓரளவிற்குப் புரிந்தது...அப்படியொரு நிலைமை அவளிற்கு வந்திருந்தால்,நிச்சயமாக வேதனைப்பட்டிருப்பாள்தான்...அதற்காக அவனையோ அவனுடைய காதலையோ சந்தேகப்பட்டிருக்க மாட்டாளே..??

"நானும் உன்னையும் உன் காதலையும் சந்தேகப்படல துளசி...எனக்கு முன்னாடியே உன் மனசில இன்னொருத்தன் இருந்திருக்கிறான்னு தெரிஞ்சப்போ ரொம்பக் கஸ்டமா இருந்திச்சு...அந்த வேதனையை மனசில வைச்சுக்கிட்டு உன் கூட சகஜமா என்னால பேச முடியலையே தவிர உன்னோட காதலை நான் எப்பவுமே சந்தேகப்பட்டதில்லை..."

"என்னால உன்னைவிட்டு எத்தனை நாளைக்கு விலகியிருக்க முடியும் சொல்லு...??...இப்போ உன் டயரியைப் படிச்சப்போதான் உன்னோட அந்தக் காதல் கூட நான்தான்னு தெரிஞ்சுக்கிட்டேன்...ஆனால் அந்த உண்மையை நான் தெரிஞ்சுக்கலைன்னாலும் நான் உன்னைத் தேடி வந்திருப்பேன்..."

"ஏன்னா...ஏன்னா நான் உன்னைக் காதலிக்குறேன் துளசி...என்னைக்கு உன்னை முதன் முதலா பார்த்தேனோ அந்த நிமிசத்திலிருந்து இந்த நிமிசம் வரைக்கும் நான் உன் மேல வைச்ச காதல் கொஞ்சம் கூடக் குறைஞ்சதில்லை....இனியும் குறையப் போறதுமில்லை...."

"போதும் துளசி....ஒருத்தரை ஒருத்தர் மனசுக்குள்ளேயே காதலிச்சுகிட்டு இதுநாள் வரைக்கும் விலகியிருந்ததே போதும்...இதுக்குமேலையும் என்னால காத்திட்டிருக்க முடியாது...என்னோட வாழ்க்கை முழுதுக்கும் நீ வேணும் துளசி...என்னை ஏத்துப்பியா...??..."என்று கைகள் இரண்டையும் விரித்து ஏக்கத்தோடு கேட்பவனிடம் இல்லையென்ற பதிலையா அவள் சொல்வாள்...கலங்கிய விழிகளோடு அவனையே சிறிது நேரம் பார்த்தவள்,ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்...

இத்தனை நாட்களாக மனதிற்குள்ளேயே அவரவர் காதலோடு போராடிக் கொண்டிருந்தவர்கள்...,இன்று அவர்களின் காதல் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் ஒருவரோடு ஒருவர் அடைக்கலமாகிக் கொண்டார்கள்...அவன் அணைப்பிலேயே தன்னை மறந்து நின்றவள் திடீர் ஞானம் பெற்றவளாய்,

"நீங்க ஏன் அன்னைக்கு பீச்சில நடந்த எதையும் என்கிட்ட முன்னாடியே சொல்லல...??...நான்தான் உங்களைப் பார்க்கல...நீங்க என்னைப் பார்த்தீங்கதானே...??..."

"ஏன்டி கேட்கமாட்ட...முதல்நாளே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னுதான் நினைச்சிட்டிருந்தன்...ஆனால் நீதான் பெரிய கதையையே சொல்லி எனக்கு நெஞ்சு வலியையே வர வைச்சிட்டியே...பிறகு எப்படிச் சொல்லுறதாம்...??..."

"சரி அதுக்கப்புறமாச்சும் சொல்லியிருக்கலாம்தானே...??..."

"எப்பிடிடீ சொல்லுறது...??...நீ என்னைப் பிடிச்சுப்போய் கல்யாணம் பண்ணியிருந்தாலும் பரவாயில...நீதான் அப்பாக்காகத்தான் சம்மதிச்சேன்...அம்மாக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு முதல் நாளே விலாவரியா சொல்லிட்டியே...அதுக்கப்புறமும் உன்னைக் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எப்படிச் சொல்லுறது...??..."

"அதான் உனக்காகவே என்னைப் பிடிச்சதுக்கப்புறம்...உனக்கும் என் மேல காதல் வந்ததுக்கப்புறம் எல்லாத்தையும் சொல்லிக்கலாம்னு சொல்லாமலேயே விட்டுட்டேன்..."

"ஆனா இப்போ பார்த்தியா...நாம எங்க ஒருத்தர் மேல ஒருத்தர் காதல்ல விழுந்தோமோ அங்கேயே நம்ம காதலைச் சொல்லி ஒன்னாகிட்டோம்...இந்தக் கடலுக்கும் நமக்கும் ஏதோ பந்தம் இருக்கு போல..."

"உண்மைதான்.."அவன் சொன்னதை ஆத்மார்த்தமாகவே ஒத்துக் கொண்டாள் துளசி...

"ஹேய் அப்புறம் உனக்கொரு குட் நியூஸ்...அர்ஜீனும் பவியும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்குறாங்களாம்...உன்கிட்டயும் சொல்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க..."

"அட அதனாலதான் அன்னைக்கு ஸ்வியோட கல்யாணத்தில ஒரு மார்க்கமாவே இருந்தாளா அவ...??தன்னோட விசயம்னு ஏதோ சொல்ல வந்தாள்...அப்புறம் நம்ம விசயம் கதைச்சதில அதைக் கேட்காமலேயே விட்டுட்டேன்..."

"நல்லவேளை பவியாச்சும் உன்னை மாதிரி இல்லாம அவளோட காதலை உடனேயே சொன்னாளே...இல்லைன்னா அர்ஜீன்பாடும் என் நிலைமை மாதிரி அதோகதியாகியிருக்கும்..."என்று துளசியை வம்புக்கிழுத்தான் அரவிந்தன்..

"ஏன் இதை இப்படிக் கூடச் சொல்லலாமே...அர்ஜீன் உங்களை மாதிரி இல்லாம உடனேயே அவரோட காதலை சொல்லிட்டார்னு..."என்று அவளும் பதிலுக்குப் பதில் கொடுத்தாள்...

"அது...அது.."என்று அவன் அசடு வழியவும் அதைப் பார்த்து நன்றாகச் சிரித்தவள்,

"வழியுது...துடைச்சுக்கோங்க சேர்.."

"உன்னை.."என்றவாறு அவன் அவளைத் துரத்த ஆரம்பிக்கவும்...அவன் கைகளிற்கு அகப்படமால் துள்ளி ஓடியவள்...கீழே கிடந்த கல்லில் தடுக்கி விழப் பார்த்தாள்...ஆனால் அதற்கு முன்னதாகவே அவனது கரங்கள் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தன...

அன்றைய நாளின் நினைவில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைக்க...அளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

"இன்னைக்காச்சும் என்னை நல்லாப் பார்த்துக்கோடி..."என்று குறும்பாகச் சொன்னான்...அவளும் அதே குறும்போடே,

"என்னைக்குமே மறக்காத மாதிரி பார்த்தாச்சு...போதுமா??.."என்றவள் அவன் அணைப்பினில் விருப்பத்தோடு புகுந்து கொண்டாள்...அவளை இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டவன்...அவளின் காதோரமாய் குனிந்து இரகசியம் பேசினான்...

"ஹேய் பொண்டாட்டி என்னைப் பிடிச்சிருக்காடி...??..."எப்போதும் அவனது இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாது தப்பித்துக் கொள்பவள்...இன்று அவன் அணைப்பில் இருந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குடா புருசா..."என்றவாறே அவனை இன்னும் அழுத்தமாய் கட்டிக் கொண்டாள்...அவளது பதிலில் மனம் நிறைந்தவன் காதலோடு அவளை அவனோடு சேர்த்து தழுவிக் கொண்டான்....

"...விழிகள் நீயாக
மொழிகள் நானாக
காதல் நாமானோம்
கண்ட நாள் முதலாய்..."

சில வருடங்களிற்குப் பின்பு...

அதே கடற்கரையில் அரவிந்தனும் துளசியும் அருகருகே அமர்ந்திருந்தவாறே மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த ஆராதனாவையும்,ஆராத்தியாவையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள்...அவர்களோடு குழந்தைகளாகவே மாறி விளையாடிக் கொண்டிருந்த மொத்தக் குடும்பத்தையும் பார்க்கும் போது இருவர் மனங்களுமே சந்தோசத்தில் நிறைந்து கொண்டது...

ஆராதனாவும்,ஆராத்தியாவும் அரவிந்தன் துளசிக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள்...இப்போது இருவருக்குமே மூன்று வயதாகின்றது...ஆராத்தியா அரவிந்தனது ஜாடையிலும் ஆராதனா துளசியின் ஜாடையிலும் இருந்து வைத்ததில்,அரவிந்தனுக்கு ஆராதனாவும் துளசிக்கு ஆராத்தியாவும் செல்லமாகிப் போனார்கள்...

"ஏன் துளசி என்னை மாதிரியே ஒரு குட்டிப் பையன் நம்ம குடும்பத்தில இருந்தா எப்படியிருக்கும்...??..."

"ம்ம்....ஒரு அரவிந்தனையே இந்த உலகம் தாங்காதாம்...இதில இன்னொரு அரவிந்தன் வேறயா...??என்னால ஒரு அரவிந்தனைத்தான் சமாளிக்க முடியும்.."

"அடிப்பாவி...அப்போ நான் உனக்கு தொல்லைன்னு சொல்லுறியா...??..."

"அதை என் வாயால வேற சொல்லனுமா...?உங்களுக்கே அது இத்தனை வருசத்தில தெரிஞ்சிருக்கனுமே மிஸ்டர் அரவிந்தன்...??.."

"எங்க இதை நம்ம பொண்ணுங்க முன்னாடி சொல்லு பார்க்கலாம்...??..."

"என்னடி முழிக்கிற...நம்ம பொண்ணுங்க எப்பவுமே என் பக்கம்தான்...அதனாலதான் சொல்றேன் உன் சப்போர்ட்டுக்கின்னு ஒரு குட்டி அரவிந்தன் வேண்டாமா...??.."

"அடப்பாவி...எங்க சுத்தி எங்க வாறான் பாரு...கெட்டிக்காரன்தான்..."

"ம்ம்...அதான் என் பக்கத்துக்கு என்னோட புருசன் மிஸ்டர் அரவிந்தன் இருக்காரே...அப்புறம் எனக்கென்ன கவலை..."என்றவாறே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் துளசி...

என்றும் போல் அன்றும் அவளது அந்த உரிமையான காதலில் அவளிடத்தில் மயங்கினான் அவன்..

"ம்ம்...இப்படிப் பேசிப் பேசியே என்னை மயக்குடி..."

"எங்க நான்தான் இங்க மயங்கிப் போயிருக்கேன்..."அவளது பதில் அவனது உணர்வுகளைத் தட்டியெழுப்ப...

"ஹேய் துளசி...இதை இங்க வந்துதான் நீ சொல்லனுமாடி...??.."

"வேற எங்க வந்து சொல்லனுமாம்...??.."

"அது உனக்குத் தெரியாது பாரு..."

"தெரியாதே..."என்று அவள் புருவத்தை உயர்த்தவும்...அவள் நெற்றியோடு முட்டிக் கொண்டவன்..அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக..

"ம்ம்...வீட்டுக்கு வா...தெரியாத எல்லாத்தையும் தெரிய வைச்சிடுறேன்..."என்றவாறே அவள் தலையோடு தலை சாய்த்துக் கொண்டான்....அவன் சொன்ன செய்தியில் வெட்கம் அவளை ஒட்டிக் கொள்ள அவனுடனேயே ஒன்றிக் கொண்டாள் அவள்....

ஒவ்வொரு போண்டாவாக அவள் காலி செய்வதையே நாடியில் கையை வைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்...

"கண்ணு வைக்காதடா..."

"ஆமா அப்படியே வைச்சிட்டாலும்...ஏன்டி ஏதோ முக்கியமான விசயம் சொல்லனும்னு என்னைக் கூட்டிட்டு வந்திட்டு இப்படி போண்டா போண்டாவா வாங்கி முழுங்கிட்டு இருக்கியே இது உனக்கே நல்லாயிருக்கா...??..."

"அதுவும் இந்த பீச்சில வைச்சுத்தான் சொல்வேன்னு ஒத்தக்கால்ல வேற நின்ன...இப்போ சொல்றியா...இல்லை நான் கிளம்பட்டுமா...??..."

"ஏன்டா இப்படி அவசரப்படுற...??...ஒரு கொஞ்ச நேரம் உன்னால பொறுமையா இருக்க முடியாதா...??..."

"காலையில இருந்து ஒரு மனுசன் எவ்வளவு நேரத்துக்குத்தான் பொறுமையா இருக்கிறது...?மதியமே ஆகப் போகுது...இனி என்ன லன்ஞ்சையும் முடிச்சிட்டு சொல்லப்போறியா...??..."

"எப்படிடா கண்டு பிடிச்ச..??.."

"என்கிட்ட அடிதான்டி வாங்கப் போற..."

"என்னடா ஓவரா மிரட்டுற...அப்புறம் நம்ம பையன்கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோ..."

"நம்ம பையனா...??...நமக்குத்தான் பிள்ளையே இல்லையேடி...??.."

"ம்ம்...இன்னும் பத்து மாசத்தில வந்திடுவான்..."

"எப்படிக் குதிச்சு வரப்போறானா...??.."என்று அவளைக் கேலி செய்ய வாய் திறந்தவன் அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்து கொண்டவனாய்...

"ஹேய் பவி...உண்மையாவாடி...??.."என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான் அர்ஜீன்...

"ம்ம்..."என்று வெட்கத்தோடு தலையசைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்...

"ரொம்ப சந்தோசமா இருக்குடி...நான்...நான் அப்பா ஆகப் போறனா...??.."அவனுக்கு சந்தோசத்தில் வார்த்தைகளிற்குப் பதில் கண்ணீர்தான் வந்தது...அவளை அப்படியே தூக்கிச் சுற்றியவன்,அவள் முகமெங்கும் முத்திரைகளைப் பதித்துக் கொண்டான்...

"ஆமா அது எப்படி நீ பையன்னு சொல்லலாம்...பொண்ணாக் கூட இருக்கலாம் ல..??.."

"இல்லை பையன்தான்...எனக்கு குட்டி அர்ஜீன்தான் வேணும்..."

"இல்லை இல்லை பொண்ணுதான்...எனக்கு குட்டிப் பவிதான் வேணும்..."

"சரி உனக்கும் வேணாம்...எனக்கும் வேணாம்...முதல்ல உன்னை மாதிரியே ஒரு பையன்...அப்புறமா என்னை மாதிரியே ஒரு பொண்ணு...என்ன ஓகேயா...??

"எனக்கு டபுள் ஓகேடி..."என்றவாறே அவளை அணைத்துக் கொண்டான்...அவளும் அதே மகிழ்ச்சியோடே அவனுள் புகுந்து கொண்டாள்...

பல காதல்களை வளர்க்க தூணாக நிற்கும் அந்தக் கடல்...அந்த நான்கு உள்ளங்களையும் இணைத்து வைத்த மகிழ்ச்சியோடு அவர்களை வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டது...நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெற்றுக் கொள்வோம்...

இனி எல்லாம் வசந்தமே....

எழுதியவர் : அன்புடன் சகி (14-Feb-18, 7:07 am)
பார்வை : 813

மேலே