காதலியின் கல்யாணம் =சிறுகதை

மெய்யன் நடராஜ்

பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட்டி அணிந்திருந்தான். இரவு கண்விழித்து வந்ததால் தலைமுடி அலங்கோலமாகக் கிடந்த அவன் மனது மட்டும் சுடுமணலில் விழுந்த மீனாகத் துடித்துக் கொண்டிருந்தது
. காலம் என்னும் தேவன் கையில் ஒரு அழகிய மலரை கொடுத்துவிட்டு அதனை பறித்து இன்னொருவரின் கையில் கொடுக்கப்போகும் நாழிகை நெருங்கிக் கொண்டிருந்தது .இன்னும் ஒருசில மணித்தியாலங்களில் அவள் இன்னொருத்தன் மனைவியாகப் போகிறாள். அந்தக் கொடிய கோலத்தைக் கண்ணால் காணக்கூடாது என்பதற்காகவே ஊரைவிட்டு இரவோடிரவாக இரயிலேறி ஊரிலிருந்து ஒரு தொண்ணூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அக்காவின் வீடு நோக்கி நடக்கிறான்.
தெளிந்த குளம் போன்று சலனமில்லாமல் இருந்த இதயத்துள் காதல் என்னும் கல்லைத் தூக்கிப் போடுவதற்காகவே எதிர்வீட்டுக்கு குடி வந்தாள் அவள். அவளின் குடும்பம் தாமாகவே வந்து தங்களை அறிமுகபடுத்திக்கொண்டபோதுதான் கார்த்திகாவை முதன்முதலாய் சந்தித்தான். பார்வை கிடைத்த குருடன் முதன்முதலாய் முழுநிலவைக் கண்டதுபோல் இருந்தது அந்த சந்திப்பு. வசீகரிக்கும் முகத்தில் கருத்த இரண்டு வானவில்கள் உட்கார்ந்ததுபோல் புருவம்.அதன்கீழ் பூக்களுக்கு கவரிவீசுவதாய் இமைகள். அதற்குள்ளே கயலிரண்டு நீந்தும் தடாகமாய் நயனம். கனிந்த அதரம். சிரிக்கையில் காதல் என்னும் படுகுழியில் தள்ளும் அழகாய் கன்னக்குழி என்று முகமே ஒரு அழகு புத்தகமாக, பருவத்தின் பஞ்சமில்லா விளைச்சலாய் செழித்துச் சிறந்திருந்தாள். முதல் சந்திப்பு என்பதால் அதிகம் பேசவில்லை என்றாலும் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் எதுவும் பேசியதில்லை. பேசுவதற்கு எதுவும் இருந்ததில்லை எனலாம்.
வழக்கம்போல அப்பாவுக்கு ஒத்தாசையாய் ஒரு கல்யாணத்துக்கு சென்றிருந்த வேளை அதே கல்யாணத்துக்கு வந்திருந்த கார்த்திகா தன்னுடைய மணப்பெண் தோழிக்கு ஒத்தாசையாய் இருக்க அங்கே ஒத்தாசையும் ஒத்தாசையும் ஒத்து ஆசைவைக்கப் போகும் செயலுக்கு ஒத்து ஊதியது சந்தர்ப்பம். சிலகாலம் கிணற்றில் போட்டக்கல்லாய் இருந்த இவர்களின் காதல் எப்படியோ ஒரு நாள் வைக்கோல் போருக்குள் மறைத்து வைத்த தீபோல மெல்ல புகைய ஆரம்பித்தபோது இரு குடும்பத்துக்குள்ளும்.விழுந்தது விரிசல். விஷயம் முற்றிவிடுவதற்குள் எல்லோரும் வீட்டில் இருந்த நேரமாய்ப் பார்த்து ஒருநாள் கார்த்திகாவின் அப்பாவே மகரந்தனின் வீட்டுக்கு வந்து “இங்கப் பாருங்க ஐயரே ..நான் என் பொண்ண ஒரு கௌரவமான இடத்திலே கட்டிக் கொடுக்கிறதா இருக்கேன். அது இதுன்னு ஆசை காட்டி என் பொண்ணோட மனசை மாத்தி வீணா பிரச்சினை பண்ண வைக்க வேண்டாமுன்னு சொல்லுங்க. போதும். விட்டிடச் சொல்லுங்க எதிர்த்த வீடாச்சே நாளைக்கும் நாம் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க வேண்டி இருக்கிறதாலத்தான் நேரிலே இதை சொல்லிட்டுப் போறேன் .இல்லாட்டி என்னோட நடவடிக்கை வேறாக இருக்கும்” தமிழ் சினிமா வில்லன் பாணியில் மிரட்டியும் மிரட்டாமலும் பேசிவிட்டுப் போய்விட்டார்.
அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதி, சினிமா நடிகனின் பிள்ளை சினிமா நடிகன் என்று எழுதப்படாத சட்டமாக தொடரும் குடும்பத்தொழிலாக கோயில் குருக்களின் பிள்ளை குருக்கள் என்னும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்க்கப்பட்டு சமய சம்ப்ரதாய உபநிடதங்களுக்குள் ஒன்றிப்போனவன் மகரந்தன். என்னதான் சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டவராயினும் இளமை பருவத்தில் எழுகின்ற காதல் என்னும் உணர்வானது அந்தக் கட்டுப்பாடுகளை உடைத்து எவரையும் அது தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இருட்டறைக்குள் பூட்டிவைத்த பறவையொன்று கதவை திறக்கும்போது ஏற்படும் வெளிச்சத்தின் வழியே சிறகடித்துப் போய்விடுவதுபோல் ஒருவரின் மனமென்னும் அறைக்குள் மறைந்து கிடக்கும் காதல் தன்னுடைய வெளிச்சமான எதிர்பாலை எதிர்பாராமல் காணும் சந்தர்ப்பமொன்றில் அதன்வழியே சென்று விடுகிறது. இதற்கு மகரந்தனும் விதிவிலக்கல்ல. சம்பிரதாயங்களைக் கடந்த தெய்வீக காதலில் விழுந்து இப்போது எழுந்திருக்க முடியாத நிலையில் நிற்கிறான்.
இப்படி திடீரென்று புயல்வீசுமென்று எதிர்பார்த்திருக்கவில்லை.எப்படியாவது இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்னும் தீர்மானத்தில் இருந்தான். உன்னதமான உயிரிலும் மேலான காதல் உயிர் போகும் நிலைவந்தாலும் உடைந்து போகாது. அப்படி உடைந்து போகும் நிலைவந்தால் அது உண்மையான காதல் இல்லை. என்று நிறையவே நம்பிக்கை வைத்திருந்தான், என் காதலில் நான் உறுதியாக இருக்கிறேன் .எந்த நிலை வந்தாலும் நான் அவளைக் கைப்பிடித்தே தீருவேன் என்ற அசையாத நம்பிக்கையும் உறுதியும் கொண்டிருந்தவன் இப்போது அது தகர்ந்து போக இனி என்ன செய்ய முடியும் என்ற ஆதங்கத்தோடும் சொல்ல முடியாத வேதனையோடும் ஒரு நடைபிணமாய் நடையைத் தொடர்ந்தான். கையில் இருந்த கைப்பேசி “கணீர்” செய்தி ஒலி எழுப்ப செய்தியைத் திறந்த வாசித்தான். “நீ என்மேல் வைத்தது உண்மையான காதல் என்றால் வந்துவிடு. காத்திருப்பேன்.” என்றிருந்தது. செய்தியை படித்ததும் நெஞ்சு பதைபதைத்தது,. ‘இனி என்ன செய்ய அவளை எப்படித் தேடி. எங்கே கண்டு பிடித்து எப்படிக் காப்பாற்றுவது.
எல்லாம் கை நழுவிப் போய்விட்டதே இறைவா அப்படி நான் அவளைக் காப்பாற்றாவிட்டால் என் காதல் தூய்மையில்லாது என்றாகிவிடுமே.’ மனதுக்குள் துடித்தான் . விடியற்காலை நேரம் என்பதால் வழியில் மனித நடமாட்டம் இல்லை. சாலையோர மரங்கள் இரவில் சிந்திய மலர்கள் அழகாய் உதிர்ந்து கிடந்தன சிலுசிலு காற்று ,பனித்துளி ,பறவைகளின் சிறகடிப்பு அருவிகளின் சலசலப்பு கிழக்கின் வெளுப்பு எதுவும் அவனை ஈர்க்கவில்லை. எப்படியோ அக்காவின் வீட்டுவாசல்வரை வந்துவிட்டான். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினான். அப்போதுதான் குளித்துவிட்டு தலையை ஈரத்துணியால் முடிந்திருத்த அவனின் அக்கா வைதேகி “யாரது...” என்றவாறு கதவைத்திறந்தாள். மகரந்தனைக் கண்டதும் ‘தம்பி.. என்னடா காலையிலே..’ ஒன்னுமில்லக்கா ஒரு விசயமா ராத்திரி ரயிலில் வந்தேன்.. ‘ ‘சரி சரி உள்ளே வா. கோகுல் ..கவிதா எந்திரிங்க செல்லம் மாமா வந்திருக்கான்’ என்றவாறே குழந்தைகளை எழுப்பினாள். குழந்தைகள் எழுந்ததும் வீடு கலகலப்பானது.
பரபரப்பான காலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு மகரந்தனிடம் வந்த வைதேகி. ‘அவர இன்னைக்கு ஒரு கல்யாணத்துக்கு நேத்தே கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அவர் இல்லாட்டி கோகுல் கவிதாவை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறத்துக்கு ரொம்பவே கஷ்டம்டா.. அதுசரி நீ எதுக்காக வந்தே..?” “ஒன்னுமில்லக்கா” “பொய் சொல்லாத” இல்லக்கா என்றவன் அதற்கு மேலும் தாங்கமாட்டாதவனாய் எல்லாவற்றையும் கொட்டினான். கேட்டவள் “நீ என்னடா லூசா .. இவ்வளவு நடந்திருக்கு எனக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கக் கூடாதா. எப்படியாவது அவங்களோட பேசி அப்பாவையும் சம்மதிக்க வைச்சிருப்பேன் .. இப்போ எல்லாமே வீண். உன்னையே நம்பிக்கிட்டிருந்த ஒரு பெண்ணை இப்படி கைகழுவிட்டு வந்திருக்கியே.. உன்னை என் தம்பின்னு சொல்லிக்க எனக்கு வெட்கமா இருக்குடா. அவள இழுத்துக்கிட்டு எங்காச்சும் ஓடிப்போயிருந்தாக்கூட சந்தோசப்பட்டிருப்பேன்.” ‘உனக்கு வந்த இந்த யோசனை எனக்கு வராம இல்லக்கா. ஊருக்கெல்லாம் முன் நின்று கல்யாணம் நடத்திவைக்கிற நம்ம குடும்பத்திலே நானே ஒரு பெண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டா ஊரு நம்மள மதிக்குமா .ஊரை விடு நாளைக்கு எப்படி அப்பா தலைநிமிர்ந்து ஊருக்குள்ள யாருக்கும் கல்யாணத்தை பண்ணி வைப்பாரு. ஐயரோட பையனே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான் சொந்த பிள்ளைக்கே ஒரு கல்யாணத்தை கட்டி வைக்க முடியாத இவரெல்லாம் மந்திரம் சொல்லி கல்யாணம் செய்து வைத்த பொண்ணு மாப்பிள்ளை வாழ்ந்த மாதிரிதான் என்று ஏளனமாக சொல்லமாட்டாங்களா.. மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கவேண்டிய நாமே பிழையான வழியிலே போனா அது நல்லா இருக்காது, அதோட நம்ம மதத்திலே இருக்கிற சாத்திர சம்பிரதாயங்களை கொன்றுவிட்டு யாருமற்ற அனாதையா ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை அக்கா” “சாத்திரம் சம்பிரதாயம் எல்லாம் மனிதன் வகுத்ததுதான். மனிதன் வகுத்ததை மனிதன் அவசியத்துக்காக மீறுவது எந்த வகையிலும் தப்பில்லை. சம்பிரதாயம் சடங்கு என்று கட்டுக்கோப்பா வாழ நினைத்த உனக்கு அந்த சம்பிரதாயங்கள் உன்னையே உயிரா நினைச்சவளை உன்னோடு சேர்த்து வைத்ததா?. என்னதான் சாத்திர சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டாலும் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து மீற வேண்டிய இடத்தில் மீறுவது ஒன்னும் தப்பில்லை. இனி பேசி என்னவாக போகுது’ வருந்தினாள் அவன் அக்கா. உரையாடலில் மூழ்கி இருந்த வேளை யாரோ அழைப்பு மணியை அழுத்த கதவைத் திறந்தனர்.
வாசலில் முன் பின் அறிமுகமில்லா இருவர் நின்றிருந்தனர். “அம்மா வணக்கம். ஐயர் இருக்காருங்களா..” அவர்களின் பேச்சில் அவசரம் தெரிந்தது.”அவரு இன்றைக்கு முகூர்த்தநாள் என்பதால் ஒரு கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க.. அந்தியிலேதாங்க வருவாரு” “ஐயையோ ..அவரும் இல்லையா. நம்பி வந்தோம் அவரை கூட்டிக்கொண்டு போகலாம் என்று... இப்போ என்ன செய்யிறது” இருவர் முகத்திலும் கவலை தோய்ந்தது. “இந்த ஊரில வேறு யாராவது ஐயர் இருக்காங்களா.? இன்றைக்கு எங்க வீட்டிலே ஒரு கல்யாணம் ஐயர் ஒருத்தரை பேசி வைத்திருந்தோம். ராத்திரி அவருக்கு ஏதோ வருத்தம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.பதினொரு மணிக்கு முகூர்த்தம். ஐயர் இல்லைங்க. யாராவது தெரிஞ்சவுங்க இருந்தா சொல்லுங்க.” கேட்டார்கள். கேட்டவர்களின் அவசியம் உணர்ந்து பரிதாபப் பட்டவளாய் ‘இங்கே இவரு ஒருத்தர்தான் இருக்கார். வேறு எங்காவது தேடிப்பருங்க. இன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால் யாரும் கிடைப்பாங்களா என்பது தெரியாது.” “எங்களுக்கு யாரையும் தெரியாது உங்களுக்கு தெரிஞ்சவுங்க யாராவது இருந்தா சொல்லுங்கம்மா பெரிய உதவியா இருக்கும்.’ அவர்களின் நிலை பரிதபமாய் இருந்தது. ஐயர் இல்லாமல் ஒரு கல்யாணம் நின்று போகக்கூடாது. யாராவது இருக்கிறாங்களா என்று தேடியதில் எவரும் கிடைக்கவில்லை. கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் உள்ளே சென்று மகரந்தனிடம் “தம்பி நீ இப்போ என்ன செய்ய போகிறாய்?” கேட்டாள். ‘அவளை பரிசம் போட்டுக் கூட்டிக்கிட்டுப் போற காட்சியை என் கண்ணால காணக்கூடாதுன்னுதான் வந்தேன். இப்போ எல்லாம் முடிஞ்சிருக்கும் மறுபடியும் இரவு இரயிலிலே ஊருக்குப் போய்விடுவேன்’ ‘அதுவரைக்கும் வீட்டிலே சும்மாதானே இருக்கப்போற ஏன் நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கக் கூடாது. பாவம் அவங்க .ஐயர் இல்லாம அவதிப்டுறாங்க. ஐயர் இல்லாமல் ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னுபோயிடக் கூடாது. அதுக்குப்பிறகு அந்த பொண்ண ராசியில்லாத பொண்ணு என்று ஒதுக்கி வைச்சுடுவாங்க .. இப்போ நீ இருக்கிற நிலையிலே உன்னோட மனசுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் போடா போய் அந்தக் கல்யாணத்தை நடத்திக் கொடு.’ இப்போ நான் இருக்கிற நிலமையில மந்திரம் கூட ஒழுங்கா வராதுக்கா’ ‘அதெல்லாம் சரியா வரும் நீ போ.’ பிடிவாதமாய் அவனை வந்தவர்களுடன் பேசி அனுப்பி வைத்தாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முடியாதவன் இன்னொரு பொண்ணுக்கு தாலியை எடுத்துக்கொடுத்து மந்திரம் சொல்லி முடித்துவைக்கும் வினோதத்தை வியந்தவளாக வீட்டிற்குள் நுழைந்து அவளுடைய அம்மாவுக்கு தொலைபேசி எடுக்கிறாள்.
கல்யாண மண்டபம் கலையிழந்து கிடந்தது. இப்படி ஒரு சம்பவம் நிகழுமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் மணப்பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரோடு மல்லுக்கட்டினார். பெண்ணை பெற்றவரல்லவா. முகூர்த்த நேரத்தில் கல்யாணம் நின்றுவிட்டால் அது பெண்ணின் வாழ்வை பாதிக்கும் என்ற பயம். சொந்த ஊரில் என்றால் ஒரு ஐயர் கிடைக்கவில்லை என்றால் தெரிந்த வேறு ஐயர் எவரையாவது பிடித்து இந்நேரம் ஏற்பாடு பண்ணியிருப்பார். இது கொழும்பு. இங்கு ஐயர்மார்கள் எவரையும் அவர் பெரிதாய் தெரிந்து வைத்திருக்கவில்லை.இருந்தும் தெரிந்த ஒரு சிலரிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் எனினும் முடிவு பூச்சியம். போதாததிற்கு இன்று இந்தத் தை மாதத்தின் கடைசி முகூர்த்தநாள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள எல்லா ஐயர்மாறும் ஒப்பந்தமான கல்யாணங்களுக்கு சென்று விட்டிருந்தார்கள். அவர்களின் சீடர்கள் கூட கிடைக்கவில்லை. முகூர்த்தக் காலங்களில் மண்டபம் ஒழுங்கு செய்த கையோடு ஐயர்மாருக்கும் முற்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தபின்னரே பத்திரிகை அடிக்கத் தொடங்குகிறார்கள். ஒரு ஐயருக்கு கல்யாண நேரத்தில் மந்திரம் ஓதி கல்யாணம் நடத்தி வைக்க ஏற்படும் செலவு கல்யாண செலவில் நான்கில் ஒரு பங்கு என்றான இக்காலத்தில் அவசரத்திற்கு ஐயர் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. இப்போது என்ன செய்வது என்ற தவிப்பில் இருந்த எல்லோருக்கும் இன்னும் அரைமணித்தியாலத்தில் ஐயரோடு வந்துவிடுவோம் என்ற தொலைபேசி செய்தி பாலை வார்க்க மண்டபம் பரபரப்பானது.
மிகவும் சிறியதாக இருந்த அந்த மண்டபம் மாப்பிள்ளைக்கு ஆடம்பரம் பிடிக்காது என்ற காரணத்தால் அலங்காரம் எதுவும் இல்லை. சிறியதாய் மாவிலை தோரணம் ஆங்காங்கே காற்றூதி நிரப்பப்பட்ட வண்ண பலூன்கள். மண்டபத்திற்கு ஏற்ப சிறிய மணவறை என்று மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பெண் வீட்டில் இருந்து சிலரும், மாப்பிள்ளை வீட்டிலிருந்து சிலரும் அதிலும் மாப்பிள்ளை வீட்டின் சார்பாக வெகுசிலரும் மட்டுமே கூடியிருந்தனர். வெளிநாட்டு மாப்பிள்ளை. கல்யாணம் முடிந்ததும் கையோடு பெண்ணை வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்வதாக ஒப்பந்தம். கூடியிருந்த இளசுகள் மேளவாத்தியகாரர்களுக்கு ஆணையிட நாயனம் ஒரு சினிமா பாடலை இசைக்கத் தொடங்கியது. அதற்குள் ஐயரைக் கூட்டிவந்த கார் மண்டப வாசலில் கிரீச்சிட்டு நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய ஐயர் நேராக மண்டப ஒதுக்கறையில் நுழைந்து தனது பொருட்களை வைத்துவிட்டு அவசர குளியலொன்று இட்டு மணவறையை நோக்கி ஓடினார். அப்போதும் நேரம் முகூர்த்தத்திற்கு நிறையவே இருந்தது. மணவறை மேடையில் காலடி எடுத்துவைக்க முற்பட்டவரை “தம்பி...” என்று அதட்டலான அதேநேரம் எங்கேயோ கேட்டுப் பழகிய குரலால் யாரோ அழைக்கத் திரும்பிப் பார்த்தார். எதிரில் கார்த்திகாவின் அப்பா நின்றிருந்தார். கண்களில் நெருப்புக் கனக்க அழைத்தவரைக் கண்டதும் ஒருகணம் அதிர்ந்தார் ஐயர். அவரைப் பார்த்ததுமே இது யாருடையக் கல்யாணம் எனபதும் அவர் எதற்காக அழைக்கிறார் என்பதும் சொல்லாமல் புரிந்தது ஐயராக வந்திருக்கும் மகரந்தனுக்கு. அருகில் சென்றான். ‘கொஞ்சம் அந்தப்பக்கமா வாரீங்களா’ கேட்டவாறு சற்று ஒதுக்குப்புறமான இடத்திற்குக் கூட்டிச் சென்றார். ‘நான் சுற்றி வளைத்துப் பேச வரல. ஊரிலே வைத்து இந்தக் கல்யாணத்தை நடத்தினா ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்றுதான் இவ்வளவு தூரத்திலே கொண்டு வந்து வச்சிருக்கேன். இங்கேயும் வந்துட்டீங்க. உங்க திட்டம் எனக்கு நல்லாவே தெரியும். இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உயிரோட ஊர் போய் சேரமாட்டீங்க’ என்றவாறு இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் காட்டினார். ‘நான் அந்த நோக்கத்தோடு வரல உங்க பொண்ணோட கல்யாணத்தை நேரிலே காணக்கூடாதுன்னுதான் ஊரைவிட்டு எங்க அக்கா வீட்டுக்குக் போனேன். அங்கிருந்து மாப்பிள்ளை வீட்டார்தான் என்னை இங்கே கூட்டி வந்தாங்க. இங்கே வந்து இந்த நிமிசம் உங்களை காணும்வரை இது உங்க பெண்ணோட கல்யாணம் என்று எனக்குத் தெரியாது .தெரிஞ்சிருந்தா நிச்சயம் வந்திருக்க மாட்டேன்.’ ‘எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை மனசு மாறி ஏதாச்சும் நடந்தா..” ஏதோ சொல்லப்போனவரை இடைமறித்து ‘பயப்படாதீங்கஇந்தக் கல்யாணத்தில் நல்ல முறையில் நடத்திக் கொடுப்பேன்’ உறுதியளித்தவாறு மறுபடியும் மணவறை பக்கமாக நடந்தான். ‘கடவுளே இது என்ன கொடுமை. காதலிச்சவள் வேறொருவன் மனைவியாக நானே தாலி எடுத்துக் கொடுப்பதா?. முழு மனதோடு எப்படி இந்தக் கல்யாணத்தை முடித்துக் கொடுப்பேன்?’ போன்ற பலப்பல
கேள்விகளுடன் வேலையைத் தொடங்கினான்.
கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து முதலில் மாப்பிள்ளையை அழைத்து மந்திரம் ஓதி தாம்பூலத்தில் வைக்கப்பட்ட ஆடை அணிகலன்களை உடுத்திவரும்படி பணித்துவிட்டு பெண்ணை அழைத்துவரும்படிக் கூறினார். பரிசப் பட்டுடுத்தி பளபளக்கும் நகையணிந்து. பாதி மலர்ந்த பூக்களில் தொடுத்த சரமணிந்து பாதி மரணித்தவள்போல் மணவறைக்கு நடந்துவந்தாள் கார்த்திகா.. இதுவரையில் அவன் எப்படியும் வந்துவிடுவான் தன்னை எப்படியும் அழைத்துச் செல்வான் என்ற எதிர்பார்ப்பைத் தொலைத்தவளாய் கண்ணீரை வெளியில் கொட்ட முடியாமல் இன்னும் சற்று நேரத்தில் எவனுக்கோ மனைவியாகப் போகிறேனே என்ற பெருந்துயரைச் சுமந்தவளாய் நடைப்பிணம்போல் நடந்துவந்து மணவறையில் அமர்ந்தாள். ஐயர் வளர்த்த ஹோமப்புகை அவள் மனதைப்போல புகைந்தது. அது கண்களுக்குள் புகுந்து கண்ணீரை வரவழைத்தது கண்ணீரைத் துடைத்துவிட்டு கடைசியாய் ஒருமுறை மண்டப வாயிலை நோக்கினாள். அவன் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. “இந்தாம்மா இதை கையிலே கட்டிக் கொள்ளுங்க’ என்ற ஐயரின் குரலில் திடுக்கிட்டவளாய் ஐயரைப் பார்த்தவள் ஆனந்தக்கண்ணீர் விட்டாள். “எப்படி வந்தான்” யோசித்தவள் “எப்படியாவது வந்தானே அதுபோதும்” என்றவாறு அமைதியானாள். ஆனால் இவனே மந்திரம் ஓதி இவனே எப்படி தாலியைக் கட்டுவான். சம்பிரதாயத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா .இல்லை வேறு ஏற்பாட்டோடு வந்திருக்கிறானோ தெரியாது. என்னவானாலும் சரி அவனது முடிவுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளணும் என்ற தீர்மானத்துக்கு வந்தாள்.
அவனோ எதுவும் நடவாததுபோல் யாரோ ஒருவருடைய திருமணத்தை நடத்துவதுபோல் முறைப்படி மந்திரம் ஓதி கூரைச் சேலையுடன் கூடிய மணப்பெண் அலங்கார தாம்பூலத்தைப் பெண் தோழியின் கையில் கொடுத்து சீக்கிரம் உடுத்திவரச் சொல்லிவிட்டு அடுத்த ஏற்பாடுகளைக் கவனித்தான். நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் ஆடைமாற்றிக் கொண்டு மணவறையில் வந்தமர்ந்தார்கள். இருவரையும் வைத்து வேதங்கள் ஓதிமுடித்து பெண்ணின் தாய் தந்தையையும் மாப்பிள்ளையின் தாய் தந்தையையும் வைத்து கன்னிகாதானம் என்னும் தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கையும் செய்து முடித்தான். இன்னும் தாலி கட்டவேண்டியதுதான் பாக்கி. அப்படி இப்படி என்று முகூர்த்த நேரம் கூடிவிட்டது. மந்திரங்கள் ஓதிய மாங்கல்யத்தை ஒரு தட்டில் வைத்து அருகில் சபையினரின் ஆசீர்வாதத்திற்காக அனுப்பியதும் கூடி இருந்தவர்கள் கையில் தாலி கட்டும் வேளை மணமக்கள் மேனியில் தூவுவதற்கான அட்சதையை வழங்கத் தொடங்கியும் விட்டபோது மெல்ல தலை சுற்றுவதுபோல் இருந்தது

மகரந்தனுக்கு. வெளியில் காட்டிக் கொள்ளாமல் கல்யாணத்தின் பிரதான நிகழ்வான தாலி கட்டும் நிகழ்விற்கு ஓதும் மந்திரமான மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!' என்ற சம்ஸ்கிருத வாசகம். தமிழில் "மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' என்பதைச் சொல்லி தன்னுடைய காதலையும் தாரைவார்த்துக் கொடுக்கும் பெருந்துயரத்திற்கு மிக மிக அருகில் வந்துவிட்டான். அதற்குள் சபையைச் சுற்றிவந்த மாங்கல்யத் தட்டு கைக்கு வந்து சேர்ந்தது. எல்லோரும் தாலிகட்டும் அந்த இனிய நிகழ்வை காண அருகில் வந்து குவிந்து விட்டார்கள். புகைப்படப் பிடிப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் அவரவர் கடமையில் துரிதமாக செயல்படத் தொடங்கி விட்டார்கள். அதற்குள் மிக மிக அவதானமாக ஏதேனும் பிசகு நடந்துவிடக் கூடாது என்ற பயத்தில் மகரந்தனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டார்பெண்ணின் தந்தை. ‘திக் திக்’ மன நிலையில் கார்த்திகா இவன் என்ன செய்யப்போகிறான் என்பதை அறியாமல் பீதியில் உறைந்திருந்தாள். இனி எதுவும் நடக்கப் போவதில்லை என்பது உறுதியானபோது இறுதியில் மாங்கல்யத்தைக் கையில் எடுத்து மாங்கல்யம் தந்துனானே ..என்று மந்திரம் ஓதி ‘கெட்டி மேளம் கெட்டிமேளம்’ என்று குரல்கொடுத்தவாறு மாங்கல்யத்தை மாப்பிள்ளையின் கையில் கொடுக்க நீட்டினான். அப்போது உண்மையிலேயே இவன் தாலியை மாப்பிள்ளையின் கொடுக்க முற்பட்டதும் அதிர்ந்து போனாள் கார்த்திகா.
பயமும் அதிர்ச்சியும் கொண்டு கார்த்திகா செய்வதறியாது இருக்க, தாலியைக் கட்ட எதுவாக. பெண்ணின் பக்கம் திரும்பிய மாப்பிள்ளை சற்று குனிந்தபோது அந்த சம்பவம் நிகழ்ந்தது.
முன் தலையில் வழுக்கை விழுந்து விட்டதால் அதை மறைக்க அணிந்திருந்த ‘விக்’ கழன்று தரையில் விழுந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் கூட்டத்தில் ஒரு சலனம். மாப்பிள்ளை வழுக்கை என்று எல்லோரும் சிரிக்க ,தாலியை வாங்க மறுத்து அவசரமாய் ‘விக்’ ஐ எடுத்து தலையில் மாட்ட எத்தனித்தபோதுதான் மகரந்தன் மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்தான். அவரை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்க சற்று உற்று நோக்கினான். அது.. அது.. அவனேதான். ஒருசில மாதத்திற்கு முன்பு பக்கத்து ஊரொன்றில் வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கூட்டிச்சென்று பெண்ணிடம் இருந்து சொத்து, பணம், நகை எல்லாம் பிடுங்கிக்கொண்டு பெண்ணை அம்போவென்று விட்டுவிட்டு தலைமறைவான அதே ஆள். அந்தக் கல்யாணத்திற்கு மகரந்தனின் அப்பா ஐயாராக செல்ல உதவிக்கு மகரந்தன் சென்றிருந்தான். நன்றாக உறுதி செய்து கொண்டவன். “இனி இவனை விடக்கூடாது” தீர்மானித்தவனாய் அருகில் நின்றிருந்த கார்த்திகாவின் அப்பா இடையில் சொருகியிருந்த கூர்மையான கத்தியை உருவி மாப்பிள்ளையின் கழுத்தில் வைத்துப் பிடித்தவனாய் ‘டேய் நீ ஊருக்கு ஒரு கல்யாணம் செய்து பணம் கொள்ளையடிக்கிறவன் தானேடா.. யாராச்சும் போலீசுக்கு தகவல் கொடுங்க’ கத்தினான். அதற்குள் அங்கு கூடியிருந்த போலி மாப்பிள்ளைக் குடும்பத்தினர் தப்பித்து ஓடமுற்பட கூடியிருந்த ஒருசில இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துக் கட்டிப்போட்டு தாமதமாய் வந்த போலிஸ் கையில் ஒப்படைத்தனர்.
கல்யாணம் நின்றுவிட்டது. கார்த்திகா ஆனந்தம் கொண்டாள். அதே வேளை பெண்ணோட கல்யாணம் மணமேடையில் வைத்து நின்று விட்டதை எண்ணி கார்த்திகாவின் அம்மா ஒப்பாரி வைத்தார். செய்வதறியாது நின்றிருந்த கார்த்திகாவின் அப்பாவிடம் சென்று ‘உங்க பெண்ணை எனக்கு கட்டிக் கொடுக்காவிட்டால் பரவாயில்லை. நான் கூட்டிட்டுப் போயிடுவேனோன்னு இந்தமாதிரி அவசர முடிவெடுக்காதீங்க. ‘கூறிவிட்டு நடையைக்கட்டத் தொடங்கியவனை இடைமறித்த கார்த்திகாவின் தாய். ‘தம்பி நடந்தது நடந்திரிச்சு. மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நடக்காம போனா அவளை யாரும் கட்டிக்க மாட்டாங்க’ ‘அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும். இது உங்க குடும்ப விவகாரம் இதிலே நான் தலையிட முடியாதுங்க.. காதல்ங்கிறது வேணுமின்னா அவசரமா வரலாம் .கல்யாணம் என்பது அப்படி இல்லீங்க பொண்ணு ஒருத்தனை விரும்பிவிட்டால் விரும்பினவன் நல்லவனா இருந்தாலும் பரவாயில்லை காதல் கூடாதுன்னு எவன் தலையிலேயாவது அவசர அவசரமா கட்டிவைக்கப் பார்த்தா முடிவு இந்த மாதிரிதான் இருக்கும்’ பேசிவிட்டு திரும்பிப் போக எத்தனித்தவனை ‘தம்பி கொஞ்சம் நில்லுங்க..’ நிறுத்தினார் கார்த்திகாவின் அப்பா. ‘ஏற்கனவே மரம் ஏறிவிழுந்தவனாய் இருக்கிறேன். எங்க மேல மாடு மிதிச்சதா வார்த்தைகளை அள்ளிக் கொட்டாதீங்க.. வயசிலே மூத்தவன் கேட்கிறேன் ‘’ என்று வார்த்தைகளை விழுங்க.. ‘ஐயா நான் நீங்க என் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுப் போனதாலே உங்கப் பொண்ண திரும்பிப் பார்க்காம விட்டுட்டேன் என்று நினைக்காதீங்க ..நான் நினைச்சிருந்தா எப்பவோ உங்க பொண்ணை இழுத்துக்கிட்டுப் போய் தாலி கட்டியிருப்பேன். ஆனா அது என் நோக்கமல்ல. பெத்தவங்க சம்மதத்தோட உற்றார் உறவுகள் கூடி நிற்க சம்பிரதாய முறைப்படி கல்யாணம் செய்யணும் என்கிறதுதான் என்னோட நோக்கம். நான் பெத்தவங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டவன்.என்ன பெத்து வளர்த்து ஆளாக்கிய என்னுடைய அம்மா அப்பா இல்லாமல் எனக்கு கல்யாணம் நடக்காது.நீங்க என்னோட பேசுறதுக்கு பதில் என்னோட அப்பாவிடம் பேசுங்க.. அயலூரில் முறிந்துபோன இந்தக் கல்யாணம் சொந்த ஊரில் சுற்றம் சூழ நடக்கும்..,; கூறிவிட்டு திரும்பிப் பாராமல் நடக்கும் அவனை எல்லோரும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Feb-18, 1:41 am)
பார்வை : 1011

மேலே