அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 1
கரோலினின் ரோலக்ஸ் கைக்கடிகாரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த கும்மிருட்டில் ரோலக்ஸ் முட்களில் இருக்கும் ரேடியத்தின் பச்சை நிறம் நன்றாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. பனி பொழிந்து உறைந்து இருந்த அந்த இரவிலும் அடுத்த வினாடியில் நடக்க இருக்கும் சில விசித்திரமான விஷயங்களை எண்ணி கரோலின் அமைதியற்றவளாகவும் பயமாகவும் இருந்ததால் அவளுடைய முகத்தில் சில வியர்வை துளிகள் இருந்தன.
தெற்கு வான்கூவர் நகரிலிருந்து சுமார் பத்து நிமிடங்கள் நகரை விட்டு பிரேசர் நதியின் பாலத்தை கடந்து ஓட்டினால் வரும் மிச்சல் தீவின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது கரோலினின் தனித்த வீடு. விளக்குகள் அணைக்கப்பட்டும் மூடிய கதவுகள் மற்றும் ஜன்னல்களால் வீடு முற்றிலும் இருண்டிருந்தது. போதாதற்கு மயான அமைதி வேறு. அவள் வாழ்க்கையின் மிக கடினமான நிமிடங்களை எதிர்நோக்கி அவளது வீட்டின் முகப்பு அறையில் ஒரு பதற்றத்துடனே உட்கார்ந்திருந்தாள். வாழ்வா சாவா என்ற முடிவு தெரியும் நாள் அவளுக்கு. அங்கே எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதை சமாளிக்க கரோலினுக்கு இருந்த ஒரே ஆதரவு ஆஷ்லே.
"ஆஷ்லே ... நீ எங்கே இருக்கிறாய்?" கரோலின் தன் தோழியான ஆஷ்லேவை மெல்ல அழைத்தாள். இருள் சூழ்ந்திருந்ததால் தேடிப்பார்ப்பது கடினம், ஆஷ்லே இருப்பதை உறுதி செய்ய குரல் எழுப்பி பார்த்துக்கொண்டாள் கரோலின். ஆஷ்லே.....வான்கூவர் நகரின் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவள். ஆனால் அவளது சொந்த ஊர் கனடாவின் மற்றொரு திசையில் இருக்கும் மாண்ட்ரீயல் என்ற ஊராகும். சிறு வயது முதல் கரோலினின் தோழி.
அஷ்லேவிடம் இருந்து பதில் இல்லை. அமைதியாய் இருந்தது வீடு.
"ஆஷ்லே ... .நீ என் குரலை கேட்கிறாயா? தயவுசெய்து என்னை தனியாக விடாதே, ஆஷ்லே, என்ன நடக்கிறது? , இருக்கிறாயா...எனக்கு பயமாக இருக்கிறது"கரோலின் குரல் அவளது பீதியை வெளிப்படுத்தியது.
"ஆஷ்லே... .." அவள் அச்சத்தை சமாளிக்க தனது குரலை உயர்த்தி அழைத்துப்பார்த்தாள்.
"ஆமாம் ... கரோலின், நான் இங்கே வாசல் கதவு அருகில் இருக்கிறேன். நீ பயப்பட வேண்டாம். தைரியமாக இரு, நான் உன்னுடன் இருப்பேன். மேலும், எந்த நிலைமையிலும் நீ உணர்ச்சிவசப்படாதே. உனது ஒவ்வொரு தாமதிக்கும் நொடியும் உன் வாழ்க்கையை மோசமாக திசை திருப்பலாம். உன் வாழ்க்கையை மட்டும் அல்ல .... என் வாழ்க்கையும் தான். மனதில் வைத்துக்கொள் "ஆஷ்லே கரோலினை எச்சரித்தாள்.
"நான் உனது வார்த்தைகளை ஒத்துக்கொள்கிறேன் ஆஷ்லே, ஆனால் திட்டத்தை மாற்ற இயலாதா?" கரோலின் ஆஷ்லேவை கேட்டாள்.
"நீ என்ன சொல்கிறாய், நன்றாக யோசித்து தான் பேசுகிறாயா...முட்டாள் தனமாக எதுவும் யோசிக்காதே. நீ உனது வாழ்க்கையின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறக்காதே. உன் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த முடிவை ஆய்வு செய்ய இது நேரம் இல்லை, ஒரு RCMP யாக (ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ்) சொல்கிறேன், இது கனடாவின் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பதற்கான எனது கடமை, அது மட்டுமல்ல, நீ என் தோழி, சிக்கலான பொழுதுகளில் உன்னை தனிப்பட்ட முறையில் காக்க வேண்டியதும் எனது கடமை "ஆஷ்லே கரோலின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி புரியவைத்தாள்.
"நானும் ஏற்றுக் கொள்கிறேன் ஆஷ்லே, ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ...." கரோலின் கருத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், "முட்டாள்.... நீ முட்டாள்தனமாக எதுவும் பேசுவதற்குள் நான் உனக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறேன், நீ அலெக்சின் மீது அனுதாபம் காட்டுகிறாயா? கடந்த காலத்தை பற்றி யோசித்துப்பார், ஒன்று அல்லது இரண்டு அல்ல, எட்டு, விஷயத்தின் தீவிரத்தை கற்பனை செய்து பார், இப்போது இருக்கும் சந்தர்ப்பம் ஒன்று, அதை நீ செய்யலாம் அல்லது நான் செய்வேன், புரிகிறதா? " சத்தமாக கத்தி மிரட்டல் தோரணையில் கூறினாள் ஆஷ்லே.
"நீ இதைச் செய்வது தான் நல்லது ஆஷ்லே, ஏனென்றால் கடந்த காலத்தில் எந்தவித அசாதாரணமும் எனக்கு அலெக்ஸ் தந்தது இல்லை, மேலும் அவன் என்னை உயிராய் நினைக்கிறான், என்னை அவ்வளவு காதலிக்கிறான், நானும் தான், உங்கள் விசாரணைகள் இருக்கட்டும், ஏன்...அவன் மரணிப்பது தான் உங்களின் தீர்ப்பாக இருக்கட்டும், அதை நான் ஏன் செய்யவேண்டும், நாம் கடந்து வந்த மோசமான சூழ்நிலைகளின் உச்சநிலையை நீ அறிந்தவள். ஆனாலும் ஒரு கொடூரமான காரியத்தை செய்ய என்னை வலியுறுத்துவது தவறென்றே நினைக்கிறேன், அலெக்ஸ் என் காதலன் என்பதை அறிந்தும் நீ இவ்வாறு செய்ய சொல்வது என் காதலுக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா ஆஷ்லே?"கரோலின் அவளுடைய உணர்ச்சிகளை விளக்க எத்தனித்தாள்.
"முட்டாள்தனமாக பேசாதே, இது உனக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம், அவன் இப்போது உன்னை காதலிக்கிறானா என்பதே சந்தேகம் தானே, அவன் உன்னை கொலை செய்ய போகிறான், இப்போது உனக்கு ஒரே வழி தான், ஒன்று நீ வாழ வேண்டும் என்றால் அவன் மரணிக்க வேண்டும், இல்லை என்றால் அவன் உன்னை கொல்வான், உன்னை கொன்றதோடு நிறுத்துவான் என்று எண்ணுகிறாயா, அந்த ரத்த வெறி பிடித்த காட்டேரி பல உயிர்களை குடிக்க போகிறான். அதற்கு முன் இத்தகைய கொடியவனின் முடிவைக் நாம் காண்பதற்கான நேரம். உன்னால் முடியாவிட்டால் விடு, நான் பார்த்துக்கொள்கிறேன், ஆனால் இந்த உலகம் உன் மரணத்தை ஒரு கொலைகாரனின் காதலியின் மரணமாகவே பார்க்கும்." ஆஷ்லே இந்த உண்மைகளை கரோலினுக்கு விளக்கினாள்.
ஆனால் கரோலின் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை.
"நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் அலெக்ஸை கொல்ல மாட்டேன், என் மனம் அவனை கொல்ல விடாது." கரோலின் தனது முடிவை விளக்கினாள்.
"ஏய், நீயோ அல்லது நானோ...யார் செய்தாலும் இறுதி நிதர்சனம் என்பது அவனது மரணம் தானே. நீ அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டாயா." ஆஷ்லே கோபத்தீயை கக்கினாள்.
"நான் புரிந்துகொள்கிறேன், எனக்கு தெரியும், இன்று என் அலெக்ஸ் பாவிகளின் இந்த உலகத்திலிருந்து மரணிக்கப்போகிறான் என்று. ஆனால் அந்த பாவச்செயலை எனது கைகளால் செய்து அந்த குற்ற உணர்ச்சியால் என் வாழ்நாள் முழுவதிலும் என் மனசாட்சியின் முன்பு குற்றவாளியாக நான் கூனிக்குறுகி நின்று ஒரு அற்ப பிறவியாய் தனது சுயநலத்திற்காக தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஒரு உயிரை கொல்ல மாட்டேன்." கரோலின் கண்ணீர் சிந்தினாள்.
"ஓ, அது சரி, அப்படியாயின் நான் அதை செய்வேன். ஆனால் ஒன்று புரிந்துக்கொள். உனது இந்த முடிவால் அதை நான் செய்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், உனக்கு பதிலாக அவன் இங்கே வரும்போது நான் அவனை தாக்க வேண்டிய தருணம் என்றால், அந்த இடத்தில் நீ இருக்கும்போது அவன் சற்றே தடுமாற வாய்ப்பிருக்கிறது. அந்த சில நொடி தாமதத்தை பயன்படுத்தித்தான் அவனை சூழ்ச்சியாக கொல்ல முடியும், அந்த இடத்தில உன்னை தவிர வேறு யார் இருந்தாலும் அவனை தடுமாற வைக்கவோ திசை திருப்பவோ முடியாது. கண்டிப்பாக நான் சுதாரித்து அவனை தாக்குவதற்குள் அவன் என்னை தாக்க நேரிடும். ஒரு கொலைகாரனுக்காக உன்னை காப்பாற்ற துடிக்கும் உனது தோழியை கூட நீ இழக்க தயார் ஆகிவிட்டாயா. அப்படியாயின் எனது முடிவா இல்லை அவனது முடிவா என்று பார்த்துக்கொள்கிறேன். உன்னுடைய தோழி ஆஷ்லேக்கு ஏதாவது நடந்தால், நீ என்ன செய்வாய்? யாருக்கு தெரியும், அவனது இலக்கில் நானும் இருக்கலாம். நான் உன்னுடன் இருக்கிறேன் என்று அவன் அறிந்தாலே அவன் என்னைக் கொன்றுவிடுவான். அதனால்தான் நான் செய்வதை விட நீ செய்வதே பாதுகாப்பு என்று கருதுகிறேன்." என்றாள் ஆஷ்லே.
இரண்டு நிமிட மௌனம் இருவரிடம்.
கரோலின் பேசினாள், "சரி, ஆஷ்லே, நான் செய்கிறேன், உனக்காக. எனக்கு இரண்டு நிமிடங்கள் கொடு, நான் என்னை தயார் படுத்திக்கொள்கிறேன்."
"சியர்ஸ், இது தான் நல்ல முடிவு, மிகவும் முக்கியமான விஷயம், எனது துப்பாக்கியை நான் மறந்து எனது காரில் வைத்துவிட்டு வந்திருக்கிறேன், மேலும் எனது கார் வீடு வாசலில் நின்றால் அவனுக்கு சந்தேகம் வருமே என்று மிகத்தொலைவில் நிறுத்திவிட்டு நம்பர் பிளேட் எல்லாம் மாற்றி மூடிவைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதனால் இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கத்தி தான். உன் மனதில் இதை நிறுத்திக்கொள். நீ எந்த விளக்குகளையும் போடக்கூடாது. அவன் சுதாரிக்கும் அளவுக்கு நேரம் கொடுக்கக்கூடாது, மிக முக்கியமாக நீ மிக வேகமாக செயல்பட வேண்டும். உன் மனதில் அவன் உன் காதலனாக தோன்றக்கூடாது. அவன் மேல் துளி கூட இரக்கம் காட்டக்கூடாது. அவன் ஒரு கொலைகாரனாக மட்டுமே தான் பார்க்கவேண்டும். அவனை தாக்கும்போது எந்த ஒரு உதவி தேவை என்றால் இங்கே வா என்று மட்டும் என்னை அழை, நான் மறைந்திருக்கும் இடத்திலிருந்து உடனே உன்னோடு சேர்ந்து தாக்குகிறேன்."ஆஷ்லே திட்டத்தை விளக்கினாள்.
மெல்ல தட்டுத்தடுமாறி கரோலின் அருகே வந்து தனது கையில் இருக்கும் இரண்டு கத்திகளில் ஒன்றை அவள் கையில் கொடுத்தாள் ஆஷ்லே.
"கவனமாக இரு கரோலின், எந்த ஒரு நிலையிலும் பயந்து விடாதே. நான் அந்த படிகளின் கீழே ஒளிந்துகொள்கிறேன்," ஆஷ்லே தைரியம் கூறினாள்.
அந்நேரம் கதவு மிக வேகமாக தட்டப்படவே, கரோலின் பயந்து, "ஆஷ்லே ... நான் நினைக்கிறேன், இது அலெக்ஸ்" என்றாள்.
"இருக்கலாம், நீ தயாராக இருந்துகொள். உன் செயல்கள் வேகமாக இருக்கட்டும். கதவைத் திறக்கிறாய், உன் எல்லா சக்தியுடனும் துரிதமாக அவனை கத்தியால் தாக்குகிறாய். எந்த உதவி தேவைப்பட்டாலும், 'வா' என்று சத்தமிடு."ஆஷ்லே கரோலினை எச்சரித்து படிக்கட்டின் கீழ் ஒளிந்துகொண்டாள்.
கரோலின் தனது நெற்றியில் வியர்வை துளிகளை துடைத்தபடியே தொடர்ந்து தட்டப்படும் கதவை திறக்க மெல்ல கதவருகே நகர்ந்தாள் கரோலின்.
வெளியே நிற்கும் நபரை பார்க்க உதவும் சிறு கண்ணாடி லென்ஸ் பொருத்தப்பட்ட துளை வழியாக பார்த்தாள் கரோலின். ஆம், அது அலெக்ஸ் தான். அவன் கையிலும் கத்தி வைத்திருந்தான். பயம் கரோலினை ஆட்க்கொண்டது. "ஆஷ்லே சொன்னது சரி தான், அவன் எண்ணெயோ அல்லது அஷ்லேவையோ கொல்வதற்கு முன் அவனை நான் கொன்றுவிட வேண்டும், எனக்காக இல்லை என்றாலும் பலபேரின் பாதுகாப்பிற்காக நான் இதை செய்தே தான் ஆகா வேண்டும்" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கரோலின் ஒரு கையில் இருக்கும் கத்தியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு மறுகையால் கதவை திறக்கும் கைப்பிடியை பிடித்தாள்.
பகுதி 1 முடிந்தது.
திகில் தொடரும்.