“பாரதிதாசன் எந்நாளோ என்று கூறி அவர் காண விரும்புவைகள் இக்காலச்சூழலில் நிறைவேறுமா ஆராய்ந்து விவரிக்க”

“பாரதிதாசன் எந்நாளோ என்று கூறி அவர் காண விரும்புவைகள் இக்காலச்சூழலில் நிறைவேறுமா ஆராய்ந்து விவரிக்க.”

பாரதியின் சிஷ்யனாக வளர்ந்து பாரதி போலவே தொலைநோக்குச் சிந்தனையுடனும் செயல்பட்டவர் பாரதிதாசன். இவர் சமுதாயத் சீர்த்திருத்தவாதி என்று பரவலாக புனையப்படுகிறார். இவர் இயற்றிய எந்நாளோ என்ற கவிதை அவர் காண விரும்புவைகளைச் சித்தரிக்கிறது. தமிழர்கள் என்றென்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதே அவர் ஆசை. இவ்வையகம் போற்றக்கூடியவர்களாக தமிழர்கள் திகழ வேண்டும் என்பதே அவரின் அவா. இவரின் வேட்கை என்னவென்று அவரின் கவிதையின் மூலம் விவரிக்கிறார். ஒவ்வொரு தமிழனும் உலகமே போற்றும் வகையில் எவ்வாறு திகழ வேண்டும் என்று பகர்கிறார். தமிழ்நாடும் வையகம் போற்று அளவு வளர வேண்டும் என்கிறார். அதனைச் சற்று விரிவாக ஆராய்வோம்.

தமிழர்கள் அனைவரும் மேன்மையான கல்விக்கற்று, அரிய கலைஞானத்தோடு திகழ வேண்டும். அவர்கள் இமயமலை போல் உயர்ந்து திகழ வேண்டும் என்கிறார். இது நடப்பது எந்நாளோ என்கிறார். இன்றோ கல்வியையும் ஞானத்தையும் கூவி விற்கின்றனர். படிப்பதற்கு அத்தியாவசியமாக இக்காலச்சூழல் அமைந்துள்ளது. கல்வி இலவசமாகக்கப்பட்டும், மக்கள் தனியார் பள்ளிகளுக்கு பணம் கட்டி பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். போட்டித்தன்மைமிக்க சூழலால், கல்லூரிகளில் இடங்களுக்கு இலஞ்சம் வாங்குகின்றனர். இவ்வாறு இருந்தால், பணக்காரர்களே கல்விக்கற்று உயர்ந்த நிலையை அடைவார்கள். பணமில்லாதவர்களால் முன்னேற இயலாத நிலை என்றும் உண்டாகும். வாழ்வில் உயர அடிப்படை தேவையான கல்வியை ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் வழங்கினால், அவர்கள் விண்ணை தொடுவதில் இயமில்லை.

சித்திரங்கள், நூல்கள், காவியங்கள் என்று கலைஞானத்தில் தமிழர்கள் மேலோங்கி நிற்பது எந்நாளோ என பாரதிதாசன் வினவுகிறார். நூல்களை படைத்து, அவற்றைப் புதுமையான கருவூலங்கள் என உலகம் போற்றுவதை தான் காண காத்திருக்கிறார். இன்று பல்வேறு எழுத்தாளர்கள் உருவடுத்துள்ளனர். இருப்பினும் வள்ளுவர், பாரதி என பழையக் கதையையே பாடிக்கொண்டிருக்கிறோம். தமிழர்களின் கதைகள் உலக கண்களுக்கு விருந்தாக அமையாதா? ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் சுமார் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்ன ஒரு சாதனை. அதோடு அவர் எழுதியுள்ள மூன்றாம் உலகப் போர் என்ற நாவ‍லுக்கு அமெரிக்கன் டாலர் பத்தாயிரம் கிடைத்தது. இருப்பினும் இவரைப் போல கருத்தாழம் மிக்க கதைகளை உலகிற்கு இன்னும் பலர் படைக்க வேண்டும். நாம் உலகிற்குத் தெரிய இதுவே முதற்படி என்கிறார் பாரதிதாசன்.

இலக்கியத்தின் மற்றொரு அங்கமான கவிதைகளும் புவிக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார். கவிதைகள் தரத்தில் மேம்பட்டு உலகமே அன்னாந்து பார்க்கும் வகையில் கவிதைகளை இயற்ற வேண்டும் என்கிறார். பாரதி மற்றும் வள்ளுவர் இயற்றிவையையே உலகம் பேசுகிறது. சங்க கால கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களெல்லாம் அக்காலத்தார். இந்த நூற்றாண்டில் இது போன்ற சாதனைகள் இன்னும் பிறக்கவில்லை என்கிறார் பாரதிதாசன். எழுத்துத் துறையில் பணியாற்றும் அனைவரும் படைப்புகளை அள்ளித் தருகின்றனர். ஆனால், கணியனின் கவிதை போல போற்றப்படுகின்றதா? இல்லையே. கவிதை, நூல் என்று இலக்கிய அமுதங்கள் இக்காலத்து மக்களிடையே வரவேற்பை காண தவறுகிறது. இவையே, நம்முடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக திகழ்கிறது
“நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே”
என்று மற்றோரு கவிதையில் குறிப்பிடுகிறார். நம்முடைய தாய்மொழியாம் தமிழ் வளமுடன் இருந்தால் தமிழர் வாழ்வும் வளம் பெறும். தமிழ் நலிந்து போனால் தமிழர் தம் வாழ்வும் நலிந்து போகும் எனக் கூறும் பாரதிதாசன் தமிழர்தம் வாழ்வின் அடிப்படை தமிழே எனத் தெளிவு படுத்துகின்றார். இதனை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, உலகம் போற்றும் கவிதைகளைப் படைக்க முனைவோம்.

அடுத்ததாக, உலகத்தில் உள்ள தொழில்கள் அனைத்தும் ஒரே ஆலையில் இருக்க வேண்டும். அவை இயங்கும் சப்தம் தரணி எங்கும் பரவ வேண்டும் என்கிறார். ஊழல் மிகுந்த தமிழ்நாட்டில், மக்கள் அன்றாட தேவைகளுக்கே அல்லாடுகின்றனர். இதனால், மக்கள் அரசாங்கத்தோடு நல்லுறவு கொள்வதில்லை. இதனாலேயே நம் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு முதலாளிகள் பட்டாடைகளில் பிறர் உழைப்பை உறிஞ்சும் கயமைத் தனத்துடனும் தங்கள் பிழைப்பை ஓட்டுகின்றனர். பாட்டாளிகளோ, அழுக்குத் துணியில் திரிகின்றனர். இவ்வஞ்சகம் தீரும் வரை, தொழில்கள் மேன்மை அடையாது. ஆகையால், பாரதிதாசனின் கனவு எந்நாள் நிறைவேறும் என்று சிந்தித்தல் அவசியம்.

போர்க்கலை கற்று தமிழர்கள் கம்பீரத்துடன் புவியில் உலா வர வேண்டும். அவர்களின் போர் வித்தைகளை கண்டு உலக நாடுகள் கதிகலங்க வேண்டும் என்கிறார். இன்று உலகையே கலக்9குவது இஸ்ரேலின் இராணுவமே. அவர்கள் திறன் மிக்கவர்களாக மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி உள்ளவையாக அவர்களிடம் உள்ளது. தமிழ்நாட்டிலோ மின்சாரத்திற்கு வழியில்லாமல் உள்ளனர். அரசு தன் கடமையை சரிவர செய்யாத விளைவே தமிழர்கள் உயர முடியாத காரணம். தமிழரகளை மட்டம் தட்டி பேசியே உலகம் இருந்துள்ளது. தமிழர்களைக் கண்டு அஞ்சும் நாள், எந்நாளோ?

தமிழர்களை அனைவரும் ஒன்றிணைந்து வீரம் மிக்கவர்களாக செயலாற்றி ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்கிறார். தமிழர்களிடம் தீங்கு செய்ய எண்ணாத உணர்வு பிறரிடம் பிறக்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன். இன்று தமிழர்கள் ஜல்லிக்காட்டு பிரச்சினைக்காக ஒன்று கூடி தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு பதிலடி கொடுத்தனர். இடியே விழுந்த்தாலும் வீரத்துடன் ஒற்றுமையாக செயல்பட்டனர். இதனைக் கண்ட அந்நியர்கள் துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிவிட்டனர். இது போன்று என்றுமே தமிழர்கள் திகழ வேண்டும்.

பிறதேசத்தார் தமிழர்கள் அனைத்திலும் சிறந்து விளங்கி செறுக்கோடு வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள வேண்டும். அதனால் குற்றங்கள் அதிகரித்து, அவர்களின் முதுகெலும்பை உடைக்க தமிழர்கள் வர வேண்டும் என்கிறார் பாரதிதாசன். இன்று பல தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர். சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கும் விஷ்வனாதன் ஆனந்த் முதல் நாசாவின் தலைமை விஞானியின் மெய்யா மெய்யப்பன் வரை நல்ல பதவியில் உள்ளனர். இவர்களைக் கண்டு பொறாமை கொண்டுள்ள வெள்ளையெர்கள், இவர்களைப் போலவே உயர முனைகின்றனர். ஆனால், தமிழ்ர்களுக்கு பிரச்சினை என்று வரும்போது அனைவரும் தெறித்து ஓடிவிடுகின்றனர். பிறதேசத்தார் தன்னைவிட மேலானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையோடு மக்கள் உள்ளனர். இந்நிலை மாறி, தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.

உலகின் நடைமுறைகளை அறிந்து, அவன் காட்டும் வழியிலே இப்புவி செயல்பட வேண்டும். அத்தமிழர் ஆட்டும் சுட்டு விரலுக்கு ஏற்ப உலகம் நடக்க வேண்டும் என்கிறார். உலகையே கலக்கும் ‘கூகூல்’(Google) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒரு தமிழன். ‘மைக்ரோஸாஃப்ட்’(Microsoft) நிறுவனத்தின் துணை அதிபர் சோமசேகர். இருவரும் தமிழன் தான். உயர் பதவிகளை மட்டுமல்லாமல் உலகையே கையில் போட்டுக் கொள்ளக்கூடிய ஆற்றல் அவர்களிடம் உள்ளது. சிங்கப்பூரை இரண்டு தவணை காலம் ஆண்ட திரு. எஸ். ஆர். நாதன் அவர்கள் ஆட்டும் சுட்டு விரலாலே சிங்கை அபிவிருத்தி அடைந்தது. ஆனால், உலகையே தலைமை தாங்க தமிழர்கள் வர எந்நாள் ஆகும் என்று சிந்திக்க வேண்டும். நம்மிடம் உள்ள தமிழ் நாட்டையே நம்மால் ஆள முடியவில்லை. இந்த பாரே நம்மிடம் இருந்தால் அதன் கதி என்னாகும். நாமே, ஒன்பது கட்சி, ஆயிரம் சாதி என்று பிரிந்து இருக்கையில், நம் நாட்டை எப்படி ஆள்வது. வட நாட்டிலே நம் பேச்சு எடுபடவில்லை, பிறகு என்ன உலகம் சுட்டு விரல் வேறு. ஆனானப்பட்ட அமெரிக்காவைப் போல், தமிழ்நாடு என்று ஆகும். சிந்தியுங்கள்.

விண்ணுக்கு செல்லக்கூடிய வாகனம். உலகத்தையே மயக்கும் இசை. ஆயுதங்களை உருவாக்கி பகைவர்களை ஒழிக்க வேண்டும். எண்ணிலடங்கா தமிழர்கள் உருவாக்கிட்டனர். இவையெல்லாம் நடப்பது எந்நாளோ. இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் உலகத்தையே தன் இசையால் கட்டிப் போட்டார். ஆஸ்கார் விருதுகளை பெற்று உலகப் பார்வைக்கு இதமாக திகழ்ந்தார். இவரைப் போல, மேலை நாட்டாரின் மனதை கௌவியது ‘ஹிப் ஹாப்’ தமிழா. இவர்கள் இயற்றும் இசையும் உலகின் பல்வேறு பகுதிகளில் எதிரொலிக்கிறது. இசை மட்டும் போதுமா? தமிழர்கள் புதிய ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் உருண்டோட வேண்டும்? நம்மால் முடியாதா. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நம்பிக்கையை ஆக்கத்திற்கு மூலத்தனம். இதனை தமிழர்கள் உணர வேண்டும். அதற்கு சிறந்த முன் மாதிரி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜே அப்துல் கலாம் அவர்கள். மேலைநாட்டினரிடம் இருந்த அணுசக்தி பற்றிய அறிவு பகிர்ந்துகொள்ளப்படாததால், தன் சொந்த முயற்ச்சியால் அல்லும் பகலும் உழைத்து, நாட்டிற்காக தன் பங்கை ஆற்றினார். தன் வீட்டிலே ஒளிக்கூட இல்லாமல் வளர்ந்து இந்தியாவுக்கே ஒளி வீசியவர். இவரைப் போல அனைவரும் திகழ முனைய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி இருவரும் சமநிலை அடைந்துள்ளனர். தமிழர்கள் தன் பழக்க வழக்கங்களை மாற்றி வருவதாலே வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்று குடும்ப வறுமையைப் போக்கி தமிழர்கள் உயர்கின்றனர். இந்நிலை இன்னும் பரவலாக காணப்படாத நிலையாக உள்ளது. எனவே, தமிழர்கள் தங்கள் சிந்தனைகளை மாற்றியமைத்து பெண்களை ஆண்களுக்கு நிகராக காண வேண்டும். உலகம் போற்றும் குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’(Pepsi)யின் தலைமை நிர்வாகியாக(CEO) இந்திரா நூயி திகழ்கிறார். ஒரு பெண்ணாக இருந்து சாதித்தவை போற்றத்தக்கது. எனவே, பெண்களும் தரம் குறைந்தவர்கள் அல்ல என தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகையால், பாரதிதாசன் கண்ட கனவுகள் எந்நாள் நிறைவேறும் என்று தமிழர்கள் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிந்தனைகளே நம்மை செயல்படுத்த தூண்டும். ‘நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆவாய்’ என்று பகவத் கீதை கூறுகிறது. எனவே, தமிழர்கள் உலகம் போற்றும் வகையில் திகழ வேண்டும் என்று உயர்வான எண்ணத்துடனே செயல்பட வேண்டும். இதனைத்தான் நம் வள்ளுவரும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று மொழிந்துள்ளார். நம்மை இழிவாக காணாத வகையில், தமிழர்கள் அரும் பெரும் சாதனைகளை மண்ணிலும் விண்ணிலும் படைக்க வேண்டும். இக்கட்டுரையை எழுதிய தமிழனாக கூறுகிறேன் பாரதிதாசனின் கனவுகளுக்கு நான் விதிவிலக்கல்ல.

எழுதியவர் : கட்டுரையாசிரியர்: அ முஹம் (15-Feb-18, 6:54 pm)
சேர்த்தது : மாதிஹ்2000
பார்வை : 8818

மேலே