முதுமொழிக் காஞ்சி 37

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. 7

- துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.

பதவுரை:

கொண்டு - ஒருவரை ஒருவர் நட்பாகக்கொண்டு,

கண்மாறல் - பின்பு அவரிடத்துக் கண்ணோட்டம் ஒழிதல்,

கொடுமையின் - அவருக்குக் கொடுமை செய்தலின், துவ்வாது - நீங்கி யொழியாது.

கண்ணோட்டம் - தன்னோடு பழகினவரைக் கண்டால் அவர் கூறியவற்றை மறுக்கமாட்டாமை: இஃது அவர்மேல் கண் சென்றவழி நிகழ்வதாகலின் அப்பெயர் பெற்றது: தாட்சண்ணியம்.

ஒருவனோடு சிநேகம் பண்ணிப் பின்பு அவனிடம் தாட்சண்ணியம் காட்டாதவர் அவனுக்குக் கொடுமை செய்தவரன்றி வேறாகார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-18, 5:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே