கழுகுப் பார்வைக்குள் சிரியா

(கலவர பூமியில் ஒரு கருவறைக் குழந்தையின் கதறல்கள்)

நான் வசிப்பது
என் தாயின்
கருவறையிலா?
அல்லது
கல்லறையிலா?

கருவறைக் கூடெங்கும்
கந்தகப் புகையின் வாசம்!
உயிர்போகும் வலியில்லை
உயிரெடுக்கும்
வலிகள்தான் எனக்குள்!

தாயின்
சிரிப்புச் சத்தமில்லை...
நான் கேட்பதெல்லாம்
வெடிகுண்டுகளின் ஓசையும்
உறவு பிரிந்த மக்களின்
அழுகுரல்களும்தான்!

கருவறை வாசம் தீண்டிய
என் நாசித் துவாரங்களில்
இப்போது...
ரத்தத்தின் வாடையையும்
பிணங்களின் நாற்றத்தையும்
மாண்டுபோன
மனிதத்தின் எச்சங்களாய்
சுவாசிக்கிறேன்!

கழுகும் கம்யூனிசமும்
நடத்தும் வல்லாதிக்கத்தில்
என் பிஞ்சுக்கரம் பிடித்து
கூட்டிப்போகும்
பூந்தளிர்களின் உடல்களும்
கல்லறைக்கு கடத்தப்படுகின்றன!

இதோ..!
காய்ந்து வறண்டுபோன
தொப்புள்கொடியில்
உணர்கிறேன்
என் தாயின்
சுவாசத் திணறல்கள்!

கடைசிக் காற்றைக்
கிரகித்துக் கொண்டிருக்கிறேன்
ஏதோ ஒரு குரல்...

குண்டுகளின் முழக்கத்திற்குள்
ஐ.நா பேசுகிறது!
என்னவென்று கேட்போம்...

ஏய் சிரிய தேசமே!
நீ சிலுவை சுமக்கும் நாடல்ல..,
உன்னைப் பரிவாய் பார்க்க...

அங்கு நடப்பதும்
மனித உரிமை புரட்சியல்ல
அதன் மீறல்களைப் பேச!
நடப்பதோ...
திரை மறைவில்
கச்சா எண்ணெய்க்கான
யுத்தம்...!!!
ஈராக்கின் நிலை
புரிந்திருக்கும் உனக்கு!

பொம்மையாட்சிற்குள்
உமது வளங்களை
கொள்ளையடிக்கும் வரை...
கசடுகளாய் அகற்றப்படுவார்கள்
உனது தேச மக்கள்!
பொறுத்துக்கொள்!!!!
அனைத்தும் முடிந்ததும்
பேச வருகிறோம்!!!!!!



குறிப்பு: வல்லரசுகளின் கோரப்பிடிகள் வளைகுடா நாடுகளின் கழுத்தை முறிப்பதேன். தீவிரவாதிகளாய் சித்தரிக்கப்படுவதேன். யோசித்துப்பார்.., உலக அரசியல் புரியும்.

எழுதியவர் : யாழ்வேந்தன் (26-Feb-18, 6:13 pm)
பார்வை : 244

மேலே