நிழல்களை நோக்கி
தேகம் சிறுத்த அந்த சாலையில்
வேகத்தின் விரல் பிடித்தாலும் ஊர்ந்தபடி,
சாரை சாரையாய்
நகரும் வாகனங்கள்..! - அவை
விட்டும் விடாமலும் வைத்த
குறுகிய நடை பாதயில்,
தட்டுத் தடுமாறி செல்கிறாள்
உரு நடுங்கிய அந்த மூதாட்டி!
தளர்ந்த தன் நடைக்கு
தடிகொண்டும்,
கண்கூசும் வெயிலுக்கு
புறங்கை மடை கொண்டும்,
நின்று, நின்று திரும்பி, அவள்
செலவிட்ட வார்த்தைகள் ஏதும்
செவிகள் எதிலும்
செல்லாமல் போனதோ..!
தன்னுலகம் தாண்ட இயலா
தழு தழுத்த அவள் குரலின்
தேடல் தான் என்னவோ..?
தன் பயணத்திற்கு ஏதெனும் உதவியோ..,
தாளாத அவள் பசிக்கு உணவோ…, இல்லை
குறைந்த பட்சம் ஒரு பேச்சுத் துணையோ.!
நின்று கேட்கத்தான்
நேரமில்லை யாருக்கும்!
நிஜங்களை ஓரங்கட்டி
நிழல்களை நோக்கி நகரும்
நம் வாழ்க்கைப் பயணத்தில்..!