நட்டநடு வானில் - குமரி
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து எனக்கு முன்னும் பின்னுமாக இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
"எந்த எல்லைக்கு செல்கிறீர்கள்..?"
"ஆக்ராவுக்கு .."
"நிரந்தரமாக அங்கதான் பணியா..?"
"இல்லை.. அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும்.."
பெரும்பாலும் இளைஞர்கள். இறுதிகட்ட பயிற்சியை முடிக்க செல்கிறார்கள்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..
"மதிய உணவு தயார். தேவையானவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்."
உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்..
"ஏன்...சாப்பாடு வாங்கலையா?"
"இல்லை..வேண்டாம்.. விமானத்தில் விலை அதிகம்..நம்மால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. இன்னும் இரண்டு மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் .. விலை குறைவாக இருக்கும்."
"ஓ.. அப்படியா... சரி..சரி.. டெல்லி போயிட்டு சாப்பிடலாம்."
இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது... பணமில்லை என்பதால் பசியோடு பயணிக்கிறார்கள்.
நான் உடனே சீட்டைவிட்டு எழுந்து விமானத்தின் பின்புறம் சென்று..
விமான பணிப்பெண்ணிடம்..
"மேடம் ராணுவ உடையிலிருக்கும் பதினைந்து பேருக்கும் உணவு கொடுங்க.."
அதற்கான பணத்தை கேட்டு கொடுத்தேன்.
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. "இது ராணுவத்தில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேரும்." என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தினார்..
"நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்... நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500.." என்று என்னிடம் கொடுத்தார்..
நான் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை..
கைகளை கழுவிவிட்டு என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான பைலட் என்னை நோக்கி வந்து என் கைகளை பிடித்து குலுக்கினார்..
"இது ஒரு மிகப்பெரிய கருணை செயல்.. மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானத்தை ஓட்டுவதில் நான் பெருமை படுகிறேன்.. யூ ஆர் கிரேட்." என்று சொல்லி சென்றார்.
அதற்குள் மற்றபயணிகள் விசயம் அறிந்து எல்லோரும் சேந்து கைதட்டினார்கள்..
முன்னால் இருந்த ஒரு இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் டெல்லி வந்து நின்றது..நான் இறங்கினேன்..
எல்லோரும் என்னை பெருமையாக புன்னகைத்து சென்றார்கள்..
இறங்கியவர்களில் பலர் என் சட்டை பையில் சில நோட்டுக்களை திணித்தனர்...
நான் இறங்கி நடந்தேன்.. பரிசோதனைமுடிந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்..
அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்..
என் கையில் நான் செலவழித்த பணத்தை விட இருமடங்கு அதிக பணம்..
ஒரு தூண்டுதல் பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்..
"போகும் வழியில் நன்றாக சாப்பிடுங்கள்.. மீதியை திரும்பி வரும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள்..கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.." அவர்களிடம் ஒப்படைத்து நான் புறப்பட்டபோது ஒரு வீரர் எனக்கு சல்யூட் செய்ய நானும் பதிலுக்கு உணர்ச்சியோடு சல்யூட் செய்து புறப்பட்டேன்.
காரில் ஏறி அமர்ந்து பயணத்தில் யோசித்தேன்...
இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து கொண்டு..தன்னுடைய உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை இரவுபகலாக
பாதுகாக்கிறார்கள்.. இவர்களுக்காக நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி அவர்களை தெய்வங்களாக்கி பூஜிப்பதுடன் அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது.. கட்டவுட்டில் பாலூற்றி பூஜிப்பது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கின்ற காட்சி ஒருபுறம்...
மறுபுறம் கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்க போலிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் சமூகம்.. ஓட்டு போட்ட மக்களை மதத்தாலும் மொழியாலும் ஏமாற்றும் அரசியல்வாதிகள்.. ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்..
சாமானிய மக்களின் பணத்தை கோடிகணக்கில் கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு ஓடும் கார்பரேட்டுகள்...!
இவர்களின் நடுவே இந்த இராணுவ வீரர்களை நினைத்து பார்த்தேன்...
எம் தேசத்து இளைஞர்களே..
நம் தேச நலன் காக்க கேளிக்கைவிட்டு வெளியே வாருங்கள்..!
"ஜெய் ஹிந்த்"