சிரியாவின் அழுகையே நீ அழிந்து போ

அழிவை விதைத்த
அறிவியலே
நீ அழிந்து போ !

பூவுக்கும்,புதருக்கும்
வித்தியாசம் அறியா விதியே
நீ அழிந்து போ !

அணுவால் உருவான
இரக்கமற்ற அணுவே
நீ அழிந்து போ !

ஆசை பிஞ்சுகளின் மேல்
அமிலம் வீசியவனே
நீ அழிந்து போ !

உதவிக் கோரிய கரத்திடம்
உடலைக் கோரிய கயமையே
நீ அழிந்து போ !

மாண்டுவிட்டாலென்றறியாது
மார்பில் பருகும் மழலையை
மாய்க்க துடிக்கும் மடமையே
நீ அழிந்து போ !

தேநீர் கையில் பட்டாலே
தேம்பி தேம்பி ஊ ஊ வென
ஓராயிரமுறை உச்சரிக்கும்
குரலை நெரித்தவனே
நீ அழிந்து போ !

ஒற்றைத் தேச முழக்கத்தில்
ஒன்றுகூடிய முதலாளி வர்க்கமே
நீ அழிந்து போ !

சுவாசத்தை கொல்லும்
உணர்வில்லா சுவாசமே
நீ அழிந்து போ !

அரசு மரியாதையில் அடக்கமானது
அனுமதியில்லா குண்டு முழக்கத்தில்
சிரியாவின் மொட்டுகள் !

பாலைவன தேசத்தில்
போரிட இடமில்லையா ?
இல்லை ! இல்லை !!
வேறுப் பிரிவென்பதால்
விட்டுவைக்க மனமில்லையா ?

கொல்வதுதான் கொள்கையா ?
மனிதநேயம் இல்லையா ?
விறகு இல்லாமல் வேவதுவும்
சிறகு முளைக்காதுக் கருகுவதும்
இயற்கையின் நியதியா ?

வல்லரசு வர்க்கத்திடம்
சிக்கித் தவிக்குது சிரியா !
அணுஆயுத போட்டியில்
சீரழிக்க நினைப்பதுதான் சரியா ?

சீறிவருது சிதைக்குமென தெரியா
சிசுகள் சிதைந்த தருணத்தில்
சிலையும் வரவில்லை
சிலுவையும் தடுக்கவில்லை
உருவமில்லாதவனும்
உறங்கிவிட்டான் போலும் !!

அழிந்து போ
நீ அழிந்து போ !
சிரியாவின் அழுகையே !
நீ அழிந்து போ !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (5-Mar-18, 2:40 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 67

மேலே