சொர்க்கம்

வந்துப் பாருமய்யா எங்க கிராமத்து அழக...


பொத்தல் குடுசக்குள்ள
பிரியாத உறவிருக்கும்...
கத்த நோட்டுக்குள்ள
காதலுந்தான் ஏதய்யா!

ஓடதண்ணி குடிச்சிருந்தா
அமுதத்த மறந்திருப்ப...
தெணங்கஞ்சி ருசிச்சிருந்தா
உஞ்சொத்தையே கொடுத்திருப்ப!

வெளஞ்ச நாத்துக்குள்ள
வெவசாயி உசுரிருக்கும்...
வெங்காயம் கடிச்சுக்க
பழையகஞ்சி காத்திருக்கும்!

ஏசிகாத்துக்கு நாங்க
ஏங்கி நின்னதில்ல...
பச்சையோல தென்னக்குள்ள
தென்றலும்வர மறந்ததில்ல!

பள்ளாங்குழிக்குள்ள
பொண்ணோட மனசிருக்கும்...
பச்சகுதுர தாண்டுறதுல
பசங்களோட பொழுதிருக்கும்!

கொழந்தைக்கு சோறூட்ட
வான்மகளும் காத்துநிப்பா...
இருட்டுக்கு தொணையாத்தான்
மின்மினியும் வந்துநிக்கும்!

இயற்கத் தந்த கொடக்குள்ள
எங்க கிராம அழகிருக்கு...
செயற்க செஞ்ச நகருக்குள்ள
நோவு மட்டும் மிஞ்சியிருக்கு!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (5-Mar-18, 6:26 pm)
பார்வை : 3140

மேலே