மனிதர்களை தந்த மகளிர் தினமே

மனிதர்களை தந்த மகளிர் தினமே!
கல்லாய் மண்ணாய் தோன்றிய உலகில்,
பெண்ணாய் வந்தாள் என்பதற்காக,
மாதராய் பிறக்க மாதவம் செய்தார் ,
பெண்ணே அன்று உனக்காக!
கருவைத் தாங்கி உருவங்கள் படைத்து,
இந்த உலகம் விரித்தாள் நமக்காக!
குடும்ப உறவுப் பெயர்களனைத்தும்,
கூட்டி இணைத்தாய் பொறுப்பாக,
எங்கும் எதிலும் வென்று முடித்தாய்,
ஆடவர் அணிக்கு நிகராக!
இந்த மனித வர்க்கமூலக் கணக்கில்,
என்றும் பெண்ணே வருவாள் விடையாக!
அன்று பாயும் புலியினை முறத்தால்விரட்டியே,
பெண் வீரம் தந்தாள் பரிசாக!
இன்று விண்ணை முட்டியும் வென்று காட்டினாய்
விண்வெளி வீரப் பெண்ணாக!

நேசமும் பாசமும் மூச்சாக,
அன்பே அவளது பேச்சாக,
கருணை ஒன்றே வாழ்வாக,
வாழ்ந்தாள் பூமியில் தாயாக,
அன்னை தெரசா என்னும் வடிவாக!

தன் சேயினை சேலையால்
உடல் இணைத்து,
வேகக் குதிரையில் பறந்தாள் வாளெடுத்து,
வந்த எதிரியை வீழ்த்தினாள் போர்தொடுத்து,
அவள் செயலை மனதில் நீ நிறுத்து,
வன் கொடுமை நேர்ந்தாலங்கு பயன்படுத்து!

மனிதர்களை தந்த மகளிரே – இந்த
நாளை நினைத்து மகிழ்வீரே – இனி
பெண்ணாய் பிறக்கும் சேயினை நினைத்து
பெருமை கொண்டு வாழ்வீரே

“ஓ” எங்கள் வள்ளுவனே
நீரின்றி அமையாது உலகென்றாய்,
இப்படியும் எழுதியிருக்கலாம்
பெண்ணின்றி நமக்கேது உலகென்று!











“ஓ” மகளிரே,
என் வாரிசு எனது வம்சம்
எங்கள் பரம்பரை என்பதையெல்லாம்,
நாங்கள் பெருமையாய் சொன்னபோதும்,
ஒரு பெண்ணின்றி இவையெல்லாம்
பெருமை கொள்ளுமா ?
இந்த பெருமையெல்லாம் உன்னால்
வந்த ஜனனம் தானம்மா!

இங்கே கணினி, முதல் கைபேசிவரை
ஏவுகணை முதல், இயந்திரமனிதன் வரை,
மனிதர்களாய் ஆயிரம் சாதனை
செய்த போதும், அந்த மனிதனையே,
செய்த சாதனை என்றால்,
உன்னையின்றி எதை சொல்வோம்!

ஓ மகளிரே,
மக்களையே மாய்த்த மன்னர்களின்
பட்டியலில் பெண்ணரசியின் பெயரெதுவும்,
பதிவிலில்லை, இந்த பெருமைக்கு
நிகரில்லை என பெருமை கொள்வாய்
பெண்ணினமே!

இங்கே கருத்தரிக்கும் இயந்திரங்கள்
வந்ததினால் பெருமையில்லை அது
பாலூட்டும் அன்னையரை
படைத்து விட முடியுமென்றால்?
இயந்திர மனிதர்கள்
இயங்குவது பெருமையில்லை,
தாயன்பு காட்டி அது,
தானே இயங்க தெரியுமென்றால் ?

“ஓ” இந்த உலக மகளிரே,
உன்னிலிருந்து நாங்கள் -இந்த
உலகம் கண்டதற்கும் ,வென்றதற்கும்,
நன்றியான நாளாய் இன்று
நாடே மகிழட்டும்,
மனிதர்களை தந்த மகளிர் தினமென்று!!

எழுதியவர் : தமிழ் தங்கவேல் (8-Mar-18, 6:09 pm)
சேர்த்தது : Tamil Thangavel
பார்வை : 6148

மேலே