மரமாபிமானம்-8

ஒரு மாலைப்பொழுது நேரத்தில் வழக்கம் போல் பறவைகள் எழுப்பிய சத்தத்தால் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான் மரநேசன். தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீரெடுத்து தன் முகம் கை கால்களை நன்கு கழுவிக்கொண்டு பின் துவாலை கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டு தேநீர் அருந்த வெளியில் கிளம்ப ஆயத்தமானான். மதிய வேளையில் தூங்கி எழுந்ததால் அவன் கண்கள் அந்தி வானம் போல் சிவந்திருந்தது.

தேநீர் கடையிருக்கும் வீதியில் நுழைந்தவுடன் மரநேசனின் பார்வை தேநீர் கடை திறந்துள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள ஆவலுடன் தேநீர் கடைமீது விழுந்தது. கடை திறந்துதான் இருந்தது. குடி போதைக்கு அடிமையானவன் சாராயக்கடைக்கு பார்த்தவுடன் அவனுக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். அதுபோன்ற ஒரு பரபரப்பு அவனை தொற்றிக்கொண்டது தேநீர் கடையைப் பார்த்தவுடன்.

கடையின் எதிரே இருபுறமும் போடப்பட்டிருந்த நான்கு நெகிழி இருக்கைகளில் நான்கு மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அதில் வலதுபுறம் அமர்ந்திருந்த ஒரு நபரும் மற்றும் இடதுபுறம் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் மிகத் தீவிரமாக நாட்டு நடப்புகளை அலசி ஆய்ந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இந்தியாவில் வங்கிகளில் உள்ள வாராக்கடன்களையும், கடன்களை திரும்பசெலுத்தாமல் ஏமாற்றும் ஒரு சில ஏமாற்றுக்காரர்களைப் பற்றி பேசும்போது அவர்களின் உணர்வுகள் அந்த தேநீர் கடையிலிருக்கும் கொதிக்கலனைவிட அதிகமாக கொதித்தது. உணர்வுகளின் கொதிநிலை உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த அச்சமயத்தில், மரநேசன் கடைமுன் வந்து நின்றான். அவன் வந்து நின்ற அதே நேரத்தில், கடைக்கு வலதுபுறத்தில் உலைவடித்துக்கொண்டிருந்த கடைக்காரனின் மனைவி, உலை வேலை முடிந்ததால் தீயை அணைக்க நீரெடுத்து அதன்மேல் ஊற்றினாள். நீரை ஊற்றியவுடன் புஸ்ஸென்ற ஓசையுடன் தீயடங்கியது. தீயடங்கியது போல், கொதித்தித்துக்கொண்டிருந்த அந்த நபர்களின் உணர்வுகளும் மரநேசனை கண்ட அடுத்த நொடியில் அடங்கிப்போய்விட்டது. உடனே அந்த இருவரும் அவசர அவசரமாக தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள். அப்போது தேநீர் கடைக்காரர் அந்த இருவரையும் பார்த்து அண்ணே......அண்ணே….! என்று அழைத்தார். உடனே இருவரும் திரும்பி கடைக்காரரைப் பார்த்து சொல்லி வைத்தார் போல் "இந்த தேநீரையும் கணக்கில் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நடையை கட்டினார்கள்.

இப்போது நெகிழி இருக்கைகளில் எதிரெதிரே உட்கார்ந்துகொண்டிருந்த மற்ற இரண்டு நபர்களில் ஒருவன் எழுந்து அவனுக்கு எதிர்புறத்தில் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான். பிறகு மரநேசன் நேராக சென்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்த அடுத்த சிலமணித்துளிகளில் தேநீர் கடைக்காரர் மரநேசனுக்கு சுட சுட தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். மரநேசன் மெதுவாக ருசித்து ருசித்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தான். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்த இரு நபர்களில் ஒருவன் தேநீர் கடைக்காரரிடம் குடிக்க சிறிது வெந்நீர் கேட்டான். கடைக்காரர் ஒரு கண்ணாடி கோப்பையில் கொதிக்கலனிலிருந்து வெந்நீர் பிடித்து அந்த நபருடன் கொடுத்தார். அதை வாங்கி சிறிது குடித்த அந்த நபர் பிறகு மீதமிருந்த வெந்நீரை அக்கம் பக்கம் பார்க்காமல் தனது இடப்புறத்தில் ஊற்றிவிட்டு பின் ஊற்றிய இடத்தைப் பார்த்தான். ஊற்றிய இடத்தைப் பார்த்த அடுத்த நொடியில் அந்த நபரின் முகத்தில் சட்டென ஒரு கலவரம் தொற்றிக்கொண்டது. அந்த நபர் ஊற்றிய வெந்நீரானது ஒரு சின்னஞ்சிறிய செடியின் மேல் விழுந்து அச்செடியின் குருத்துகள் பொசுங்கிப்போயிருந்தன. அதைப்பார்த்த அடுத்தநொடி அந்த நபரின் கலவரம் தொற்றிய முகம் மரநேசனை நோக்கி திரும்பியது. மரநேசனின் கண்கள் கலங்கிப்போயிருந்தது அக்காட்சியைக்கண்டு. மரநேசனைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த நபருக்கு அடுத்து என்ன நடக்கப்போகும் என்று தெரிந்துதான் இருக்கும். மரநேசனின் கையிலிருந்த சூடான தேநீர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபரின் முகத்தில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட மற்றொரு நபர் கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான்.

மரநேசன் தான் குடித்த தேநீருக்கு காசு கொடுத்துவிட்டு பின் சோகம் தோய்ந்த முகத்துடன் குனிந்து சாக்கடையில் இருந்த அந்த செடியை அப்படியே மண்ணோடு கையிலெடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (9-Mar-18, 11:14 am)
பார்வை : 123

மேலே