செல்களின் யுத்தம் 14 கீழ் 14 --- முஹம்மத் ஸர்பான்
முதன் முறையாக நான் எழுதிய காதல் கதை
இருளும் பனியும் இரவை தன் வசப்படுத்தி வைத்திருந்தது. பூக்களுக்கு உல்லாசமான இளவேனிற் காலம். விதவையான கடல் மீன்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்திக் கொண்டிருந்தது நிலா
ரயில் ஜன்னல் கம்பிகள் வழியே பகலின் மறுபக்கத்தை கண்களால் அளந்து கொண்டிருந்தான் கவிஞன் மீரா ப்ரியன்
கருவறையில் அவன் கண்ட கனவுகள் குப்பைத் தொட்டிற்குள் தோற்றுப்போனது. முகவரியற்ற பூக்களின் வீட்டில் அனாதையாக அங்கத்துவம் வாங்கி அந்த உலகில் அவனும் சிறகடித்தான்.
பலூன்கள் மேல் ஆசைப்பட்டால் நுரை முட்டைகள் கிடைக்கும்; முட்டை மேல் பசி வந்தால் கடைந்த பருப்பாவது தொண்டைக்குள் சேரும் என்பதைப் போல இவனது வாழ்க்கையில் நினைப்பது ஒன்று நடப்பது வேறு
சுமந்த தாயின் மேல் முகம் காணாமல் அவன் வைத்த அன்பு தாய் மொழி மூலம் நிறைவேறியது.
பட்டாம் பூச்சிகளை வானம் என்பான்; பனித்துளிகளை சமுத்திரம் என்பான்; புல்லாங்குழல்களை குழந்தை என்பான்; மேகங்களை புறாக்கள் என்பான் வேறுபட்ட பார்வைகள் மூலம் தனக்குள் ஓருலகை உருவாக்கிக் கொண்டான்
மனதினுள் ஆறாத காயங்கள் குவிந்து கிடந்தாலும் கிடைத்த வாழ்க்கையை நிறைவாக மனம் விரும்பி ஏற்றுக் கொண்டான். கள்ளம் கபடமில்லாத அவனது உலகில் உணர்வுகளை காவியமாக செதுக்கிக் கொண்டான்
சினிமாவில் அவன் எழுதிய பாடல் ஒன்றுக்காய் டில்லியில் தேசிய விருதை வாங்கிய கையோடு அவன் வாழ்கின்ற அனாதை இல்லத்தை நோக்கி மீராவுக்காக திரும்பிக் கொண்டிருந்தான்.
கண்களில் கசிந்த கண்ணீர்த்துளிகளை துடைத்துக் கொண்டு கடந்த வருட நாட்குறிப்பின் இவ்வருட தொடக்கத்தினை நினைவுகளாக புரட்டத் தொடங்கினான்.
***
ஒரு வாசகியின் கடிதங்கள் இவனின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றிப் போட்டது. பாழடைந்த வீட்டில் வாழும் சிலந்திகள் போல் விமர்சனங்கள் நிறைந்த உலகில் மீராவின் கடிதங்கள் இவனை செதுக்கும் இன்னுமோர் உளியானது.
பிறந்தது முதல் இன்று வரை அவன் பட்ட காயங்கள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் அவன் வாசகி மீராவிடம் ஒரு துளியளவும் மீதமின்றி பகிர்ந்தான்; அதில் ஒரு துமியளவும் கபடமில்லை.
தபால் பெட்டியே இரு உள்ளங்களை அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் பல மாதங்களாக கடிதம் வடிவில் சுமந்தது.
மனதுக்கு பிடித்தமான கடற்கரை கூட்டத்திற்கு மத்தியிலும் இவன் இன்று தனிமையை உணருகிறான். மீராவை தேடி அறிந்தும் அறியாமலும் பயணிக்கத் தொடங்கி விட்டான்.
வழமை போல் வாரத்தின் தொடக்கம் என்பதால் மீராவின் கடிதத்திற்காய் காத்திருந்தான்.
கண்களை போல் கண்ணாம் பூச்சி ஆடத் தெரியாத கடிதங்கள் நேரத்திற்கு வந்து சென்றது. அவன் கையில் கிடைத்தது கடிதம் மட்டுமல்ல அது மீராவின் இதயம்.
என்னை செதுக்கும் கவிஞனுக்கு வணக்கம்
உன் தமிழ் கடல் என்றால் நான் அதில் அலையாக விரும்புகிறேன். உன் கண்களை பார்க்க வேண்டும்; கொஞ்ச நேரம் மார்பில் சாய்ந்து அழ வேண்டும். முத்தம் கொடுக்க ஆசை தான்; உதடுகள் மெளனமாக உள்ள வரை உன் சம்மதங்கள் கிடைக்கும் வரை என்னை நானே கட்டிப் போடுகிறேன். அன்னை முகம் தெரியாது என்று அடிக்கடி நீ சொல்வாய். அப்போதெல்லாம் நீ அழுவதை விட அதிகம் உனக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன். என் மடியில் நீ தலை வைத்து தூங்க வேண்டும். அது மரணம் வரை தொடர்ந்திட வேண்டும். உனக்காக மட்டும் ஒரு தாலாட்டு கற்றுக் கொண்டிருக்கிறேன். இக்கடிதத்தை நீ வாசிக்கும் முன் அதனை நிறைவு செய்திருப்பேன். என் அப்பாவின் சொத்துக்கள் கோடி கோடியாய் குவிந்து கிடந்தாலும் அம்மாவின் அன்பென்றால் யாதென தெரியாத எனக்கு உன் கடிதங்கள் தான் என் கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை. நீ வாழும் இல்லத்தில் நான் ஒரு சேவகியாகிட வேண்டும்; என்னுயிரும் உடலும் ஊனும் உனக்கே சொந்தமாக வேண்டும்.
இப்படிக்கு
உந்தன் மீரா
*
அன்புள்ள மீரா
உன் பாதங்களை என் கண்ணீரால் கழுவ கடமைப்பட்டுள்ளேன். ஆருயிராக உணர்வாக எனக்குள் வந்து விடு. குப்பைத் தொட்டிற்குள் கிடந்தவனை மனப்பெட்டிற்குள் பத்திரப்படுத்தி வைத்துள்ளாய். நீ எனக்காக எழுதிய கடிதங்கள் எல்லாம் நான் வாழ்கின்ற கருவறைகள். உன் கண்களில் நான் பல தடவை கண்ணீராகி உன்னை காயப்படுத்தி விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடு. யாருமே வாங்காத இந்தப் புல்லாங்குழலை இன்று நீ குழந்தையாக ஏற்றுக் கொண்டாய். எனக்காக நீ சிந்திய சிந்துகின்ற கண்ணீர்த்துளிகள் எல்லாம் என் தொண்டைக்குள் தாய்ப்பாலாக இனிக்கிறது. என் கனவுகள் அன்று உப்புக் கல்லாய் கரைந்து போனது. என் மீராவின் அதிர்ஷ்டம் இன்று சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. உனக்கு பிடித்த ரோஜாவின் நிறத்தில் பட்டுப்புடவையும் என் பெயரை மரணம் வரை உன் காதுகளில் பாடுவதற்காய் ஒரு தோடும் முதற் சம்பளத்தில் வாங்கி வருவேன்; மறுக்காமல் ஏற்றுக்கொள் மீரா. குழந்தை போல் கண்ணீர் சிந்திக் கொண்டு உனக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
மீரா ப்ரியன்
*
மீராவின் வருகைக்காய் காத்துக் கொண்டிருந்தான். ஆயிரம் பட்டாம் பூச்சிகள் நெஞ்சுக்குள் ஒன்றாக சிறகடித்துப் பறப்பது போல இனம் புரியாத ஓர் ஆனந்தம்.
நதிகள் போல் நேரம் நேர்மையாக ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவனது தொலைபேசி சிணுங்கியது.
'வணக்கம்'
'வணக்கம் சார். D.H இல் இருந்து பேசுறோம். மீரா உங்களுக்கு என்ன வேண்டும்.'
(தொண்டைக்குள் சுவாசம் அடைத்தது. வார்த்தைகள் குறைமாத பிரசவம் போல் தடுமாறியது)
'சார்.., சார்.., மீரா... வு.. க்கு.. என்ன ..ஆ..ச்....சு'
'பதற்றப்படாமல் கேளுங்க சார். மீராவுக்கு ஒண்ணுமே ஆகலே (அவனது நெஞ்சம் கலவரத்தை கட்டுப்படுத்தினாலும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் காலால் மிறிபட்ட மண்புழு போல சிந்தனை துடித்துக் கொண்டிருந்தது.) ஆனா அவ அப்பா Accident நடந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். நீங்க உடனே இங்கே வர முடியுமா சார்.
வேகமாக ஓடிக் கொண்டிருந்த புகையிரதத்தின் எதிர்பாராத பலத்த விசில் சத்தம் மீரா ப்ரியனின் கடந்த கால மனவோட்டத்தை கட்டுப்படுத்தி நிகழ்காலத்திற்குள் கொண்டு வந்தது. இதற்கு மேல் நாட்குறிப்பினை புரட்ட அவனது கைகளுக்கும் சக்தியில்லை; மனதிற்கும் தேம்பில்லை.
***
ஒரு நாளின் பாதிக்கு மேல் இவனது பயணம் செலவு செய்தது. மாலை மங்கும் மயக்கங்களின் மாயைகளுக்குள் வானம் சிறைப்பட்டுக் கிடந்தது.
வெள்ளை நிற புறாக்களுக்கு சின்னச் சின்ன கை, கால்கள் முளைத்தது போல மழலைக் கூட்டம் துள்ளியோடியது; பருந்துகளோடு யுத்தம் நடாத்தும் காற்றாடிகளை பார்வையிழந்த முத்துக்கள் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது; சிறகுகள் வெட்டப்பட்ட பச்சைக் கிளிகள் போல இறைவன் பிழை செய்த அங்கங்கள் இருந்தும் அதனை மறந்து புன்னகைக்கும் உதடுகள் ஏதோ ஒரு சேதியை இறைவனுக்கும் சொல்லிக் கொண்டிருந்தது; அன்பை அள்ளிக் கொடுத்து முதுமையால் கரையொதுங்கிய கூட்டம் ஆல மர நிழலை தத்தெடுத்திருந்தது.
அவனது ஒவ்வொரு எட்டும் தவழ்ந்தது முதல் எழுந்து நின்றது வரை கடந்த காலத்தை நினைத்துக் கொண்ட கழிந்தது.
இல்லத்தின் உயிர் மூச்சாய் விளங்கும் கண்மணி அம்மாவின் அறையில் அவன் வாங்கிய விருதோடும் பல பைகளை சுமந்தவனாய் காத்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழிந்த பின்,
ப்ரியன், எப்போது கண்ணா வந்தாய் ( எதிர்பாராத விதமாக அவனது செவிகளுக்குள் விழுந்த வார்த்தைகளால் எதுவும் பேசாமல் எழுந்து கண்மணி அம்மாவை கட்டிக் கொண்டான். தாரை தாரையாய் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் சிதறியது )
அம்மா, நீங்க மட்டும் இல்லை என்றால் சத்தியமா நான் இந்தளவு சாதிச்சி இருக்க மாட்டேமா, அன்று நான் உங்க கண்ணுலே படாமே இருந்தா என்னே அன்றே ஒரு தெருநாய் சப்பித் துப்பி போட்டிருக்கும் மா.., ( இதற்கு மேல் அவனது வார்த்தைகளை கேட்க விரும்பாத கண்மணி அம்மாள் அவனது வாயின் மேல் கை வைத்து பற்றினாள் )
ப்ரியா.., அம்மாக்கு என்னே வாங்கிட்டு வந்தாய் ( கேட்டது தான் தாமதம் அவன் வாங்கி வந்த பையிலிருந்து கண்மணி அம்மா விரும்பும் வெள்ளை நிற புடவையொன்றை நீட்டினான். அவன் கன்னத்தில் கண்மணி அம்மாள் முத்தமிட்டாள்)
அம்மா இதுலே நம்ம இல்லத்துலே சேவை செய்றே எல்லோருக்கும் துணிமணிகள் இருக்குமா நீங்களே கொடுத்துருங்க. அப்புறம் குழந்தைகளுக்கு சில இனிப்பு வகைகள், விளையாட்டு பொருட்கள் வாங்கினேன் ( ப்ரியனின் கண்களில் தெரிந்த அன்பின் வெளிச்சத்தில் அம்மாள் மனம் நிறைந்தாள் ) அப்போது அவன் கைகளில் இன்னுமொரு பை அவனை அறியாமலேயே எடுபட்டது.
அம்மா.., இது .வந்து..., ( என்று இழுத்துக் கொண்டிருந்தான் )
மீராவுக்குத் தானே!
கண்களின் கலக்கத்தில் புன்னகைத்த படி,
ஆமாமா, இது மீராவுக்காக வாங்கினேன். அவளுக்கு நான் வாக்கு கொடுத்த அந்த ரோஜா நிற பட்டுப்புடவையும் என் சக்திக்கு முடிந்தளவு ஒரு தோடும் இன்று தான் வாங்க முடிந்தது
ப்ரியா.., நீ போன பின் அவ ஒழுங்காவே சாப்புடலே! உடனே நீ மீராவே போய் பாரு
துடிதுடித்த நெஞ்சோடு மீராவின் அறையை நோக்கி ஓட்டமும் நடையும் கலந்த வேகத்தில் நகர்ந்தான்.
மூவெட்டு ( 3x8=24 ) வயதில் மீரா குழந்தை போன்ற மனநிலைக்கு அந்த விபத்தின் மூலம் தள்ளப்பட்டாள். அதுமட்டுமின்றி வயிற்றில் பலமாக அடி பட்டதன் காரணத்தால் அவளது கர்ப்பப்பையும் அறுவைச் சிகிச்சை மூலம் ஆயுதங்கள் கொண்டு அகற்றப்பட்டது.
காலம் இவனை மட்டும் சோதனை மேல் சோதனையாய் காயப்படுத்திக் கொண்ட இருந்தது.
மீராவின் அறைக்குள் அவனுக்கு முன் அவன் இதயம் வந்து குடியேறிக் கொண்டது. அவள் ரசித்த மாலை இன்று இருளுக்குள் அவளை கட்டிப் போட்டிருந்தது. ப்ரியனின் கண்கள் ப்ரியமாய் மீராவை தேடியது. ஒரு மூளைக்குள் அவள் ஒளிந்திருப்பதை கண்டு பிடித்தது. அறையின் மின்குமிழ்களை போட்டான். தேவதை போல் மீரா ஒளிர்ந்தாள்.
சரியாக உண்ணாமல் அவள் முகம் வாடியிருந்தது; கூந்தல் நதிகள் சிக்கடிச்சி போய் இருந்தது; இரு தினங்கள் இருளுக்குள் ஒளிந்திருந்த அவளது கண்கள் ஒளியைக் கண்டு சில நொடிகள் இடைவிடாமல் சிமிட்டிக் கொண்டிருந்தது.
சோர்ந்து போன மீராவை பார்த்து அவன் மனம் மெழுகைப் போல் உருகியது.
மீராவின் அருகில் அமர்ந்த போது அவளது உதடுகள் வழியே துர்நாற்றம் வீசியது. அவனில்லாத அந்த இரு நாட்களும் குளிக்காத அவளை குழந்தை போல நீராட்ட ஆயத்தமானான்.
இவனை காணும் முன் இந்நிலமைக்கு ஆளானவள் இறைவனின் விதிகள் ஒரு பக்கத்தை அடைத்தாலும் மறு பக்கத்தால் அணைப்பது போல இவனின் வார்த்தைகளுக்கு அன்று முதல் இன்று வரை அன்னையின் அணைப்புக்குள் அடங்கும் சேயை போல கட்டுப்பட்டாள்.
மீராவின் ஆடைகளை குளியலுக்கு ஏற்றமாதிரி ப்ரியன் சரி செய்து கொண்டிருந்தான். மீராவின் நிர்வாணம் கூட ப்ரியன் அவனையே அவன் பார்ப்பது போல தூய்மையான உணர்வாக மாறியது.
பின், அவளது பற்களை துலக்கி விட்டு அவளது குறும்புகளை ரசித்த வண்ணம் குளிப்பாட்டி விட்டான்.
அவன் வாங்கி வந்த சேலையை மீராவிற்கு உடுத்தி காதுகளில் தோடுகளை மாட்டி விட்டான். கண்களை அங்குமிங்கும் புரட்டிக் கொண்டிருந்த மீராவின் அழகில் நிலை குனிந்து போனான்.
காரணமே இல்லாமல் அவன் கண்களின் ஓரம் கண்ணீரின் வெளிப்பாடு. அது அன்பின் மொழிபெயர்ப்பு.
நிலா வெளிப்படும் நேரம் பூக்கள் மத்தியில் அமைந்த இருக்கைகள் நோக்கி ‘தந்தையின் கால்கள் மேல் குழந்தையின் கால்கள் வைத்து நடை பழக்குவதைப் போல’ தனக்குள் மீராவை இணைத்து இருக்கையில் அமர்த்தினான் ப்ரியன்.
'குட்டிமா ஆ காட்டுடா.., டேய் ஒரு வாய் ஒரே ஒரு வாய்..,'
மீராவிடம் அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான். சில நேரம் உண்பாள்; பல தடவைகள் புறக்கணிப்பாள். இவளது விளையாட்டு ப்ரியனுக்கு மட்டும் பழக்கப்பட்ட கண்ணாம் பூச்சி ஆட்டம்.
உதட்டை தாண்டி ஒட்டியிருந்த பருக்கைகளை சுத்தம் செய்து தண்ணீரை புகட்டிய பின் மீராவின் இதழ்களை தன் சட்டையால் துடைத்து விட்டான்.
மீரா அவனது தோளில் வழமை போல் தலை சாய்ந்து கொண்டாள்.
தன்னைச் சுற்றி நடப்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத மீராவின் செயல்கள் இறைவன் போட்ட புதிராகவே அவன் நெஞ்சம் உணர்ந்தது,
மீராவின் தலையோடு பட்டும் படாமலும் தலை சாய்ந்து கொண்டான்.
சாய்ந்த படி ‘செல்களின் யுத்தம் 14 கீழ் 14’ என்ற கவிதை தொகுப்பின் இறுதிப் பாகத்தை நிறைவு செய்த பின் தூங்கி விட்டாளோ என்று மீராவை உற்றுப் பார்த்தான். இன்று நேரம் கடந்தும் விழித்துக் கொண்ட அவள் ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டிருந்தாள்.
ப்ரியன் அவள் நெற்றியின் மேல் முத்தமிட்டான்.
தோளில் சாய்ந்த படியே அவள் தூங்கி விட்டால் மலர்களை போல அவனே அவளை கையில் ஏந்திக் கொள்வான்.
மீராவின் உதடுகளை தாண்டி எச்சில் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. வழமை போல் தன் கைகளால் அதனை துடைக்க முயன்ற போது அவன் மடியில் இருந்த பேனா தரையில் விழுந்தது.
பேனாவை உதிர்ந்தும் வாடாத பூக்கள் தாங்கிப் பிடித்தது.