உலகம் ரொம்ப மோசம்டா, ராகவா

உலகம் ரொம்ப மோசம்டா, ராகவா
---------------------------------------------------------

அப்படி சொல்லி அனுப்பினான் சுந்தரம் என்னை.

"முடிஞ்சா ஒரு ரூபா லஞ்சம் குடுக்காம வாங்கிடு பார்க்கலாம்" என்றான்.

இதோ முக்கால் கிணறு தாண்டி விட்டேன். இப்போது காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கிறேன். மகனுக்கு பாஸ்போர்ட் விசயமாக. போலீஸ் வெரிபிகேஷ்ன் வீட்டுக்கு வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன் செய்து என்னை இங்கே வரச் சொன்னார்கள்.

அன்புடன் அழைத்து அமரச் சொன்னார் அந்த ஆய்வாளர். வாட்ட சாட்டமாக வேலைக்கு ஏற்றவாறு கம்பீரமாக இருந்தார். அப்துல் காதர் அவர் பெயர். உரத்த குரலி நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று தன் குரலைத் தாழ்த்தி "process செலவுக்கு 500 கொடுங்க. நீங்க எங்கேயும் அலைய வேண்டாம். I will take care " என்றார்.

நான் பயந்த அந்த வினாடி வந்துவிட்டது. அவர் தோற்றமும் அந்த சூழலும் என்னை ஊமையாக்கியது. கை தானாக பணத்தை எடுத்து நீட்டியது. அதை வாங்கி அவர் தன் டேபில் டிராவில் போட்டு விட்டு "ok" என்றார். நான் நன்றி சொல்லி விட்டு திரும்பினேன். மனக்கண் முன் சுந்தரம் வந்து கேலியாக சிரித்தான். நான் தயங்கி நின்றதைப் பார்த்து "என்ன சார் ஏதாவது சொல்லனுமா" என்றார். அப்போது எனக்கு ஆச்சோ தெரியவில்லை.

"சார் எனக்கு இப்படி லஞ்சம் கொடுப்பது பிடிக்கவில்லை. நீங்கள் அந்த தவறைச் செய்ய நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. அந்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள். அன்போடு நண்பனாக நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் இனிப்புகளோடு. " என்று வேகமாக பேசி முடிக்க அவர் சிவந்த முகம் மேலும் சிவந்தது. பணத்தை எடுத்து டேபில் மீது எறிந்துவிட்டு எழுந்து போய்விட்டார்.

"கொடுத்துட்டு பேசாம வர வேண்டியது தானே. என்னாச்சு இப்ப நம்ம காரியம்தான் கெட்டுப் போச்சு" இது மனைவி.

மகன் ஒன்றும் பேசவில்லை. அது ஆயிரம் வார்த்தைக்கு சமம்.

"நான் தான் சொன்னேன் இல்ல" என்றான் சுந்தரம்.

மறுநாள் காலை ஆய்வாளர் அப்துல் காதர் என் வீட்டிற்கு வந்தார்.
"ராகவன் உங்க மேல எனக்கு கோபம் இல்லை. ஒரு வகையில் மகிழ்ச்சி தான். நீங்க சரியாக இருக்கும் போது எதுக்கு லஞ்சம் கொடுக்கனும். நானும் அப்படித்தான். சரியான முறையில் தகுதி பெற்று தான் வேலைக்கு வந்தேன். ஒரு பைசா லஞ்சம் யாருக்கும் கொடுக்கவில்லை. நான் உங்க கிட்ட கேட்ட பணம் எனக்கு அல்ல. எல்லாவற்றையும் நான் சொல்ல முடியாது. என் சம்பளம் தவிர வேறு பணம் நான் செலவளிப்பதில்லை. உங்க பையன் பாஸ்போர்ட் சமயத்தில் வந்து சேரும்" என்றார்.
அரைக் கிலோ இனிப்பு வாங்கி வந்திருந்தார்.

என்னைப் போலவே கலப்பு மணம் புரிந்து கொண்டவர், வரதட்சனை தவிர்த்தவர், சுஜாதா பாலகுமாரன் படிப்பவர், கமல் படம் விரும்பிப் பார்ப்பவர்.
இப்போது நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அவர் வீட்டுக்குத் தான் போய்க் கொண்டிருக்கிறோம் நானும் என் மனைவியும், அரைக்கிலோ இனிப்போடு.

உலகம் அவ்வளவு மோசமில்லடா சுந்தரா.

------===--==
சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (16-Mar-18, 9:35 pm)
பார்வை : 146

மேலே