ஜோதிடம் பலிக்குமா குட்டிக்கதை

விதியை மதியால் வெல்லலாம். இதற்கு ஒரு நல்ல கதை உண்டு.



திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-



தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்



பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

நாயன்மார்களும் — குறிப்பாக அப்பர் சம்பந்தர், சுந்தரர்—, மேலும் மாணிக்கவாசகரும், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களும் இறையருளால் தீய வினைகள் பொடிபடும், தீயினில் தூசாகும் என்று பாடினர். மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளும் அப்படியே மொழிகின்றன.



ஒரு ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தான்; எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. எல்லையில்லாத வறுமையில் வாடினான். எல்லோரும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடனைப் பார்க்கும்படி யோஜனை கூறினர். அவனும் அதற்குச் சம்மதித்தான்.



பக்கத்து ஊர் ஜோதிடனைப் போய்ப் பார்த்தான். அவன் ஏழையின் ஜாதகத்தைப் பார்த்தவுடன் முகத்தில் ஈயாடவில்லை’ -ஒரே திகில்; ஆயினும் அதை வெளிக்காட்டாமல் அந்த ஏழையைப் பார்த்து ”முடிந்தால்” நாளைக்கு வந்து பாருங்கள் என்றான்.

அவனும் கட்டாயம் வருகிறேன் என்று செப்பிச் சென்றான்; ஜோதிடனுக்கோ மனதுக்குள் ஒரே நகைப்பு! ஏனெனில் ஜாதகப்படி அந்த ஏழையின் வாழ்வு முடிந்துவிட்டது; அவன் எந்த நேரமும் இறக்க நேரிடும். மறுநாள் அவன் வரவே முடியாது என்பது ஜோதிடத்தில் தெரிந்த உண்மை.



அந்த ஏழை வீட்டுக்குத் திரும்புகையில் பேய் மழை கொட்டியது. அவன் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். மழை நிற்கவே இல்லை. அவன் ஏழையானாலும் ஒரு பக்தன். ஆகவே அவன் மனத் திரையில் பல காட்சிகள் ஓடின. அட டா ! நான் பாழடைந்த கோவிலில் அல்லவா நிற்கிறேன். கடவுளுக்கும் இவ்வளவு கஷ்டமா? நாளை நான் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவேன். எனக்கு மட்டும் பரிசு விழுந்தால், முதலில் இந்தக் கோவில் மண்டபத்தைப் புதுப்பிப்பேன்; பின்னர் தமிழ்நாட்டிலேயே உயர்ந்த ராஜ கோபுரம் கட்டுவேன்; சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போல பொற்கூரை போட்டு தங்க கோவில் ஆக்குவேன்; அதற்கும் பின் பணம் மிச்சம் இருந்தால் என்னைப் போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வேன் என்று எண்ணிக் கொண்டே போனான். மழையும் நின்றது. வீட்டுக்குச் சென்றான்.



மறு நாள் பொழுது புலர்ந்தது; ஆவலோடு ஜோதிடர் வீட்டுக்குச் சென்றான்; ஜோதிடருக்கு முன்னை விட திகில்!! வந்தவன் நேற்று வந்த ஏழையா? அல்லது அவனது ஆவியா? என்று.



ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அமரச் சொன்னார். பின்னர் அந்த ஏழைதான் வந்திருக்கிறான், அவனது ஆவி அல்ல என்று பேச்சைத் துவக்கினான்; மனதுக்குள் ‘இவன் நேற்றே இறந்திருக்க வேண்டுமே ! எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்’ என்று வியப்பு.





ஜோதிடர்– ஏழை சம்பாஷணை



தம்பி; நேற்று நீ வீட்டிற்குச் சென்றது முதல் இன்று வரை நடந்ததைச் சொல் என்றான் ஜோதிடன்.



ஏழை:-

நான் வீடு திரும்பியபோது பேய் மழை கொட்டியது. ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கிவிட்டு வீடு திரும்பினேன்.





ஜோதிடன்:–

அது என்ன கட்டிடம்?



பாழடைந்த கோவில்



ஓ அங்கே யாராவது சாது சந்யாசியைப் பார்த்தாயா?



இல்லை என்னைத் தவிர அங்கு ஒரு ஈ எறும்பு கூட இல்லை.



அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே! வேறு ஏதாவது நடந்ததா? ஏதேனும் அற்புதம் ஆச்சர்யம்……



இல்லவே, இல்லை.



பின்னர் எப்ப டிப் பொழுதைக் கழித்தாய்?



ஓ அதுவா? நான் ஒரு மனக் கோவில் கட்டினேன்- என்று சொல்லி முழு எண்ணக் க் கோர்வையயும் சித்தரித்தான்.



ஜோதிடரின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் ஒரு துளி விடாமல் அப்படியே தான் எண்ணியவற்றை நுவன்றான்.



ஜோதிடருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அப்பனே, உனது ஜாதகப்படி நேற்றே நீ இறந்திருக்க வேண்டும். அதனால்தான் “முடிந்தால்” நாளைக்கு வா என்றேன். நீ வந்தது பெரிய அதிசயம்தான். உன்னைப் போலவே பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோவில் கட்டி இறைவனைக் கண்டார். நீயும் மனம், மொழி, மெய் (மனோ, வாக், காயம்) என்று த்ரிகரண சுத்தியுடன் எண்ணியதால் இறைவன் உன்னையும் மார்க்கண்டேயன் போல என்றும் 16 வயது என்று சொல்லிவிட்டார். இனிமேல் உனக்கு நல்ல காலம்தான் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

அவனும் சுக போக வாழ்வு அடைந்தான்



எண்ணத்துக்கே இவ்வளவு நல்ல பலன் என்றால் நல்ல செயலுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்!!



சுபம்–


London Swaminathan Tamil & Vedas
Share this:

எழுதியவர் : (17-Mar-18, 3:06 am)
பார்வை : 136

மேலே