சின்னஞ்சிறியவர்களின் காதல் படங்கள்

திரைப்பட இயக்குநர்கள் வெவ்வேறு வகையான கதைகளை இயக்குவதற்கு ஆர்வம் கொண்டிருப்பார்கள். நம் இயக்குநர்களே கதைகளை எழுதுவதால் அக்கதைகளின் வகைகளும் வெவ்வேறாக இருக்கும். நகைச்சுவைக்கதை, குடும்பக்கதை, காதல்கதை, சமூகக்கதை என்று அவற்றின் பெரிய பட்டியல் இருக்கிறது. திரைப்படப் பண்டிதர்களின் பேச்சு மொழியைக் கூர்ந்து பார்த்தோமானால் சில தெளிவுகள் கிடைக்கும். ஒருவர் அரும்பாடுபட்டு அளவில்லாத பொருட்செலவில் ஒரு படத்தை எடுத்து முடித்தால் "ஏதோ திருடன் போலீஸ் படமாமே...," என்று எளிதாய்ச் சொல்வார்கள் அவர்கள். "இடைவேளை வரைக்குமான ஒரு கதையை வெச்சிக்கிட்டு முழுப் படத்தை எடுத்திருக்கான்...," என்பார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் உரையாடியதில் எனக்குச் சில செய்திகள் கிடைத்தன. "திரைப்படப் போக்குகளை மாற்றியமைக்கும் படங்கள் என்றால் அவை சின்னஞ்சிறுசுகளின் காதல் படங்களே," என்று ஒருவர் சொன்னார். பள்ளி அல்லது கல்லூரி மாணாக்கர்களின் காதலைச் சொல்லும் படங்கள் அதுவரை நகர்ந்த திரைப்படப் போக்கினைப் புரட்டிப் போடுமளவுக்குத் திடீர் வெற்றி பெறுகின்றன. கறுப்பு வெள்ளைக் காலங்களில் எடுக்கப்பட்ட படங்களை விட்டுவிடுவோம். பன்னிறப் படங்கள் நிலைபெறத் தொடங்கிய பிறகான கதைப்போக்குகளைக் கருதினால் அன்னார் கூறுவது உண்மையே என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.



கல்லூரிக் காதல் வகைமையில் முதற்பெரு வெற்றிப்படம் ஒருதலை ராகம். அந்தப் படத்தில் மாணவர்களாக நடித்தவர்கள் சற்றே முதிர்ந்த அகவைத் தோற்றத்தினராக இருந்தவர்கள். அப்போதைய மணிவிளிம்புக் காலுடைகள் (பெல்பாட்டம் பேண்ட்) அவர்கள் தோற்றத்தை அகவை கூட்டிக் காண்பித்திருக்கலாம். கல்லூரி மாணவியாய் நடிக்கும் நடிகை புடைவையையோ, பாவாடை தாவணியையோ அணிந்தால் போதும், அகவை மாறுபாடு தெரியாது. ஒருதலை ராகத்தில் காட்டப்பட்ட கல்லூரிக் காட்சிகள் சிறப்பாக இருந்தன. தமிழகத்தின் உள்ளார்ந்த நகரமொன்றிலிருந்த கலைக்கல்லூரியின் அப்போதைய நிலவரம் அது. எழுபதுகளின் இறுதியிலிருந்து தமிழகத்தின் சிறு நகரங்களில் கல்லூரிகள் தோன்றத் தொடங்கின. எம்ஜிஆர் ஆட்சியில் மாநிலமெங்கும் கலைக்கல்லூரிகளும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளும் பரவலாக எழும்பின. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர். மகனோ மகளோ கல்லூரிக்குச் செல்வது அன்றைய குடும்பத்தின் பெருமை. அப்போதைய குடிவாழ்வுச் சூழலோடு ஒத்துப்போகும் கதைப்படமாக 'ஒருதலை ராகம்' வெளியானதும் அது எல்லார்க்கும் பிடித்துப் போனது. படம் வரலாற்று வெற்றி பெற்றது. இங்கே எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்லூரிப் படங்களின் கதைப்பொருள் கல்வி சார்ந்ததாக என்றுமே இருந்ததில்லை. கல்லூரிப் படங்களுக்குக் 'காதல்'தான் கதைச்சரடு. கல்லூரிப் போக்குவரத்திடையே இருவர்க்கு நேர்ந்த காதல் பற்றிய படம் ஒருதலை ராகம்.



கல்லூரிப் படம் வந்து வெற்றி பெற்றுவிட்டது. அந்த வெற்றிக்கு என்ன காரணம்? மாணவப் பருவத்தில் உள்ளவர்களிடையே தோன்றிய காதல். ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து படித்த ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வியோடு காதலும் கற்கிறார்கள் என்று காட்டினால் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று இதைக் காட்ட இயலுமா? அவ்வாறுதான் நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் சிந்திப்பார்கள். கல்லூரியில்தான் காதல் வருமா என்ன ? பள்ளிக் காலத்திலேயே காதல் வரும். 'பன்னீர் புஷ்பங்கள்' என்ற படத்தை எடுத்தார்கள். பள்ளி இறுதி வகுப்புகளில் படிக்கும் இரண்டு பிஞ்சு நெஞ்சங்களிடையே தோன்றும் அன்பு. கத்தி மீது நடப்பதைப்போன்ற கவனத்தோடு கையாளப்பட்ட திரைக்கதை. பன்னீர் புஷ்பங்கள் திரைப்படமும் வெற்றி பெற்றது. தமிழ்த்திரையில் தோன்றிய அழகிய இளஞ்சோடிகள் என்று சுரேசும் சாந்தியும் இன்றைக்கு வரையிலும் கருதப்படுகிறார்கள். பன்னீர் புஷ்பங்கள் வெளியானபோது சட்டப்படியான அகவை நிறைந்திராத சிறார்கள் இருவரிடையே தோன்றும் காதலை நம்மவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று தெரியவில்லை. எந்த எதிர்ப்பும் தோன்றவில்லை என்றால் படத்தின் திரைமொழி திறமையாக அமைந்துவிட்டது என்று பொருள்.



எண்பதுகளின் நடுப்பகுதியில் இரண்டு படங்கள் வந்தன. அவற்றில் ஒன்று மொழிமாற்றுப்படம். 'சின்னபூவே மெல்லப் பேசு, பருவ ராகம்' என்னும் அவ்விரண்டு படங்களும் கல்லூரிக் காதலைக் கதைப்பொருளாகக் கொண்டிருந்தன. மொழிமாற்றுப் படமாக வெளியானபோதும் இனிமையான பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் வெற்றிகரமாய் ஓடிய படம் பருவராகம். காதல் படம் வெற்றி பெறுவதற்கு அதன் பாடல்கள் ஒப்பீடற்ற தரத்தில் இருக்க வேண்டும். சின்ன பூவே மெல்லப் பேசு, பருவ ராகம் ஆகிய படங்களின் பாடல்கள் நம்மைக் கடந்து செல்லும் சுமை வண்டிகளில் இன்றும் ஒலிக்கின்றன. கல்லூரி வாழ்க்கையின் மகிழ்ச்சிக் காலம் அவ்விரண்டு படங்களிலும் முதன்மையாகக் காட்டப்பட்டன.



அந்தப் போக்குக்கு முத்தாய்ப்பாக, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இசையமைப்பாளரும் நாயகனும் அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்குச் சந்தை மதிப்போடு விளங்கினார்கள். "நான் நான்கு இலட்சத்திற்கு வாங்கி வெளியிட்ட அப்படம் நாற்பது இலட்சங்களை ஈட்டித் தந்தது," என்று அப்படத்தின் கோவைப்பகுதி வெளியீட்டாளர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகிறார். 'வைகாசி பொறந்தாச்சு" என்ற படம்தான் அது. அந்தப் படத்தில் என்ன சிறப்பு என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால், பாடல்களுக்காகவும் பள்ளி மாணாக்கர் காதற்கதை என்பதாலும் தொடர்ந்து ஓடியது. என் பள்ளித் தோழன் ஒருவன் அப்படத்தை இருபத்தைந்து தடவை பார்த்தான். அப்படத்தின் இயக்குநர் அடுத்ததாய் சரவணன் என்னும் நடிகரை அறிமுகப்படுத்தி ஒரு படம் எடுத்தார். அது ஓடவில்லை. பிறகு அவர் என்னானார் என்பதும் தெரியவில்லை.



அதற்கடுத்து வரிசையாய் எண்ணற்ற மாணவக் காதல் படங்கள் வந்தன. இதயம், காதல் தேசம் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. 'ஒரு கல்லூரியின் கதை' என்ற திரைப்படம் அளவில்லாத விளம்பரங்களோடு வெளியிடப்பட்டுத் தோல்வியுற்றது. அண்மையில் மலையாளத் திரையுலகை விழிவிரிய வைத்த 'பிரேமம்' திரைப்படம்கூட இவ்வகைமைதான். இவ்வகைப் படங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவான உட்கூறுகள் பல இருக்கின்றன. அவற்றில் தேர்ந்த இயக்குநர்கள் வெற்றி பெறுவார்கள். கூட்டத்தையே நடிக்க வைத்து எடுக்கப்படுகின்ற படங்கள் என்பதால் பெரும்பாலான காட்சிகளில் சட்டகத்திற்குள் பலர் இருப்பார்கள். இயக்குநர் கெட்டிக்காரராக இருந்தாலன்றிச் சிறப்பாக அமையாது.

இன்றைக்குப் பள்ளி / கல்லூரிக் காதல் என்பது தொலைக்காட்சித் தொடர் வரைக்கும் கதைப்பொருளாகிவிட்டது. ஒரு கல்லூரி வளாகம் கிடைத்தால் போதும், வெவ்வேறு காட்சிகளை அமைத்து எங்கும் அலையாமல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். இருந்த போதிலும், அந்தப் பண்டிதர் சொன்னதுபோல, திரைப்படப் போக்குகளை மாற்றியமைக்கும் வல்லமை சின்னஞ்சிறார்களின் காதலைக் கூறும் படங்களுக்குத்தான் இருக்கிறது. அத்தகைய படமொன்று இன்றைக்கு வெளியானாலும் வரலாற்று வெற்றி பெறும்.



கவிஞர் மகுடேசுவரன்

எழுதியவர் : (18-Mar-18, 1:57 pm)
பார்வை : 107

மேலே