இதுவும் காதல்தான்

.....இதுவும் காதல்தான்.....

கல்லூரியின் கன்டீன் வாசலில் நின்றவாறே அவன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்...எப்போதும் காலையில் வந்தவுடனேயே எனக்குத் தரிசனம் தருபவன்,இன்று மதியம் ஆகியும் என் கண்களிற்கு அகப்படாமல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்...

அவனது டிபார்ட்மென்டிற்கே சென்று பார்த்துவிடலாம் என்றால், அதன் பின் என் நண்பிகளின் கேலிகளுக்குள் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும்...ஆனால் அதிலொன்றும் பெரிய வருத்தமும் இல்லை எனக்கு...சொல்லப்போனால் அவர்களது கேலிகளை உள்ளூர ரசித்துக் கொண்டே வெளியில் முறைப்பதுதான் எனக்குப் பழகிப்போனதொன்றாச்சே...

அவனை எப்படிச் சந்திக்கலாமென்று என்
மூளையைத் தட்டி நான் யோசித்துக் கொண்டிருக்கவும் என் முதுகைத் தொட்டு வந்து விழுந்தது ஓர் கரம்..அந்தக் கரத்திற்குச் சொந்தமானவள் வேறு யாருமில்லை...கல்லூரிக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே எனக்கு நெருங்கிய தோழியாகிப் போன என் உயிர்த்தோழி கார்த்திகாதான்...

"...ஹேய் உதி இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் இங்கேயே நின்னு அவன் வருவானான்னு பார்த்திட்டிருக்கப் போற...வா கிளாஸ்க்கு போகலாம்..."

"இருடி...இன்னும் லன்ஞ் டைம் முடிய கொஞ்ச நேரம்தான் இருக்கு...அவன் கண்டிப்பா வருவான்...ஒரேயொரு தடவை பார்த்திட்டுப் போயிடலாம்...பிளீஸ்டி கார்த்தி..."

"..உன் வாய் வார்த்தை பலிச்சிடுச்சுடி...அங்க பாரு அவன் வாறான்..."

அவள் சொன்னதுமே எனக்குள் உணர்வலைகள் ஓங்கியெழ ஆர்வத்தோடு அவள் காட்டிய திசையில் பார்த்தேன்...ஆம் அவனேதான்...ப்ளூ கலர் பேன்ட் வெள்ளை நிறச் சேர்ட்டில் கையில் கொப்பியை வைத்து சுழட்டியவாறே வந்து கொண்டிருந்தான்..

அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நான்...அவன் அருகே வந்ததுமே அவன் என்னைக் காணாதவாறு மறைவாய் போய் ஒளிந்து கொண்டேன்...கன்டீன் வாசலை நெருங்கிவிட்டவன்,

"ஹாய் கார்த்திகா...என்ன நீ மட்டும் தனியா நிக்குற...எங்க உன் ப்ரண்டு உதயா..??.."

"ஆஆ...அவ கன்டீனுக்குள்ள இருக்கா ஹரி...நீங்க உள்ள போய் பார்த்துக்கோங்க.."

"..ம்ம் சரி..."என்றவாறு அவன் உள்ளே செல்லவும்...மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்த நான்...கார்த்திகாவோடு வகுப்பை நோக்கி விரைந்தேன்...

"இப்போ எதுக்குடி முறைக்குற...??.."

"நான் ஏன் முறைக்குறேன்னு உனக்குத் தெரியாதாக்கும்...இந்த ஒரு வருசமா அவன் வாற வரைக்கும் ஏக்கத்தோடு அவனுக்காகக் காத்திட்டிருக்க வேண்டியது...அவன் கண்ணில பட்டதுமே ஒளிஞ்சிட வேண்டியது...அப்புறம் அவனா வந்து பேசினாலும் அவன் யாருன்னே தெரியாத மாதிரி ஒரு ரியாக்சன் கொடுத்துப் பேசிட வேண்டியது..."

"என்ன வாழ்க்கைபூரா இப்படி மறைஞ்சிருந்தே காதல் பண்ணப் போறியா என்ன...??..."

"என்னை என்னடி பண்ணச் சொல்லுற...நானும் அவன்கிட்ட என் காதலை சொல்லிடலாம்னு நினைப்பேன்,ஆனால் அவனைப் பார்த்தாலே பேச நினைக்குற வார்த்தை எல்லாம் மறந்து போகுது.."

"இப்படியே சொல்லிட்டிரு...அவன் உனக்கு டாட்டா காட்டிட்டு போயிட்டே இருக்கப்போறான்..."

"என்ன முறைக்குற...இது ஹரிக்கு பைனல் இயர்...இந்த செமிஸ்டர் முடிஞ்சா அவனை நீ பார்க்கக் கூட முடியாது...ஒழுங்கா அவன்கிட்ட உன் காதலைச் சொல்லுற வழியைப் பாரு..."

அவள் பாட்டிற்குச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்...அவள் சொன்னவற்றில்
இருந்த உண்மை எனக்கும் புரியத்தான் செய்தது...ஆனாலும் அவனிடம் என் காதலை எப்படிச் சொல்வதென்றுதான் எனக்குத் தெரியவேயில்லை...இனியும் தாமதித்தால் அவனிடம் என் காதலைச் சொல்ல முடியாமலேயே போய்விடுமோ என்ற பயம் என்னை முதன் முறையாகத் தாக்க அவனிடம் என் காதலை என்ன நடந்தாலுமே நாளை சொல்லிவிடுவதாக முடிவு செய்து கொண்டேன்...

காதலைச் சொல்வதாக முடிவு செய்து கொண்ட எனக்கு அன்று இரவு முழுதும் உறக்கமே வரவில்லை...காதல் கனவிலேயே சுழன்றடித்துக் கொண்டிருந்தேன்...நான் அவனிடம் காதல் சொல்லிய பின்பு,அவன் பதிலிற்கு என்ன சொல்வான் என்பதிலேயே என் மனம் சுற்றிக் கொண்டிருந்தது...இவ்வாறாகவே அந்தப் பொழுது கழிய மறுநாள் காலை விடிந்ததுமே விரைந்து தயாராகிய நான் கல்லூரியின் வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்தேன்...

என்னைக் கண்டதுமே என்னருகே பைக்கை நிறுத்தியவன்..

"ஹேய் உதயா,என்ன வாசலிலேயே நின்னுட்டிருக்கீங்க...கார்த்திகாக்காக வெயிட் பண்றீங்களா...??..."

அவன் அப்படிக் கேட்டதுமே என் ஒட்டுமொத்த தைரியத்தையும் எனக்குள் வரவழைத்துக் கொண்ட நான்...

"இல்லை ஹரி...நான்...நான் உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்..…உங்ககிட்டக் கொஞ்சம் தனியா பேசனும்.."

"அதை ஏன் இப்படித் தயங்கித் தயங்கி கேட்குறீங்க...சரி வாங்க...கன்டீனில போய் பேசலாம்.."

இரண்டு குளிர்பானங்களோடு என்னெதிரே வந்தமர்ந்தவன்,

"இதை முதல்ல குடிங்க...அப்புறம் என்ன சொல்லனுமோ...அதை தயங்காமச் சொல்லுங்க..."

அவன் சொன்னதிற்காய் குளிர்பானத்தில் கொஞ்சத்தை என் வாயில் இட்டுக் கொண்டேன்...ஆனால் அதனால் கூட என் உள்ளத்தைக் குளிர்மைப்படுத்தி விட முடியவில்லை...ஆனால் அடுத்ததாய் அவன் சொன்ன வார்த்தைகள் என்னை உச்சியிலிருந்து பாதம் வரை குளிரூட்டிச் சென்றன..

"உதயா நான் கூட உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்...ரொம்ப நாளாவே இதை சொல்லனும்னு நினைச்சிட்டிருந்தேன்...ஆனால் அதை எப்படிச் சொல்றன்னுதான் தெரியல...இதை உங்ககிட்ட சொல்லலாமா வேணாமா என்கிற குழப்பத்திலேயே..."என்று அவன் முடிக்கும் முன்பே அவனை முந்திக் கொண்ட நான்...

"தாராளமாச் சொல்லுங்க ஹரி...என்கிட்ட என்ன தயக்கம் உங்களுக்கு...??.."

அவன் என்னிடம் காதலைச் சொன்னால் போல,நான் என்ன வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறேன்..

"இல்லை உதயா...முதல்ல நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க...அப்புறமா நான் சொல்லுறேன்..."

"பரவாயில்லை ஹரி...நீங்களே சொல்லுங்க...யார் சொன்னா என்ன...?யாராவது ஒருத்தர் சொல்லித்தானே ஆகனும்..."

"ம்ம்...சரி உதயா...அப்போ நானே சொல்லிடட்டுமா...??..."

"ம்ம்" என்று மெதுவாய் தலையசைத்த நான் அவன் சொல்லப்போகும் அந்த வார்த்தைகளுக்காய் படபடத்த நெஞ்சோடு காத்திருந்தேன்...ஆனால் அந்த நேரம் பார்த்து யாரோ என்னைப் பலமாய் தட்டி எழுப்பினார்கள்...வேறு யாருமில்லை அது என் அம்மாதான்...

"உதி...எழும்புடி...இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணத்தை வச்சுகிட்டு எப்படித்தான் உன்னால இப்படித் தூங்க முடியுதோ...??..சீக்கிரமா போய் ரெடியாகு போ..."என்று என் அம்மா என்னை அதட்டிச் செல்லவும்...அப்போதைக்கு என் நினைவுகளிற்கு இடைவேளை விட்டுக் கொண்ட நான்...எழுந்து திருமணத்திற்கான ஆயத்த வேலைகளில் என்னை மூழ்கடித்துக் கொண்டேன்...

"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ.."என்ற ஐயரின் குரல் கேட்டதுமே...குமரிப் பெண்கள் படை சூழ குனிந்த தலையை நிமிர்த்தாது மணமேடையை நோக்கி மெதுமெதுவாய் சென்று கொண்டிருந்தேன்...என் ஓரக்கண் பார்வையில் ஹரி புன்னகையோடு பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருப்பது தெரிந்தது...மணமேடைக்குச் செல்வதில் கிடைத்த அந்தச் சிறிய இடைவெளியில் மனம் மீண்டும் கடந்தகால நினைவுகளை மீட்டிப் பார்க்கச் சென்றது...

"என்னடா இவன் இதை போய் என்கிட்ட சொல்றானேன்னு தப்பா நினைக்காதீங்க...கார்த்திகா என்னோட நல்ல ப்ரண்ட்...இவ்வளவு வருசமா நட்பா பழகிட்டு...இப்போ திடீர்னு போய் நான் உன்னைக் காதலிக்குறேன்னு சொன்னா என்ன சொல்லுவாளோன்னு ஒரே பயமா இருக்கு...அதான் இதை உங்ககிட்ட சொல்லுறன்...அவ மனசில என்ன இருக்குன்னு நீங்க கேட்டு சொன்னீங்கன்னா...அதுக்கப்புறம் நானே அவகிட்ட பேசிக்கிறேன்..."

அவன் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல என் உயிர் எனக்குள்ளேயே உறைந்து கொண்டது...கண்ணீர் கூட எனக்குள்ளேயே அடைத்துக் கொள்ள அசைவற்று அமர்ந்திருந்தேன்...

"என்னாச்சு உதயா...அமைதியாயிட்டீங்க..??..இந்த உதவியை எனக்காக பண்ணுவீங்க ல..??

"...ம்ம்.."

"தாங்யூ உதயா...தாங்யூ சோ மச்...அப்புறம் நீங்க கூட ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே....என்ன விசயம் உதயா...??.."

"ஆஆ...சொல்லனும்னுதான் நினைச்சேன்...ஆனால் நீங்க சொன்னதைக் கேட்ட மகிழ்ச்சியில சொல்ல வந்த விசயத்தையே மறந்து போனேன்..."

"ஓஓ..ஓகே உதயா...அப்புறமா ஞாபகம் வரும்போது மறக்காம என்னென்னு சொல்லுங்க...இப்போ கார்த்திகா இந்த பக்கமாத்தான் வாற மாதிரி தெரியுது... நான் கிளம்புறன் உதயா...நான் சொன்னதை மட்டும் மறந்திடாதீங்க ப்ளீஸ்..."என்றவாறே அவன் அந்தப் பக்கமாய் செல்லவும் கார்த்திகா இந்தப் பக்கமாய் வந்து சேர்ந்தாள்...

"ஹேய் உதி என்னடி நடக்குது இங்க...காதலைச் சொல்லிட்டியா என்ன...??.."என்று ஆர்வத்தோடு கேட்டவளையே சிறிதுநேரம் பார்த்த நான்...அங்கிருந்து விரைந்து கிளம்பினேன்...ஆனால் என்னைப் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து தடுத்து நிறுத்தியவள்,

"என்ன நீ..நான் பாட்டுக்கு கேட்டிட்டு இருக்கேன்...நீ பாட்டுக்கு கிளம்பி வந்திட்டே இருக்க...காதலைச் சொன்னியா இல்லையா...??..."

அவளைத் திரும்பிப் பார்த்து விரக்தியாய் ஓர் புன்னகையை உதிர்த்த நான்..

"நான் சொல்ல முன்னம் அவனே காதலைச் சொல்லிட்டான்..."

"சூப்பர்டி உதி...அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டேதான் சொல்லேன்டி...எது எப்படியோ எல்லாம் சந்தோசமாவே முடிஞ்சதில நான் ரொம்ப ஹப்பி..."என்றவாறே என் முகத்தைத் திருப்பியவள்,

"உதி என்னடி...என்னாச்சு...ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு...??..."

அவள் அப்படிக் கேட்டதுமே அதுவரை நேரமும் எனக்குள் அடைத்துக் கொண்டிருந்த கண்ணீர் வெடித்துக் கிளம்ப அவள் தோளில் சாய்ந்து மொத்தமாய் என் கண்ணீரைக் கரைக்க ஆரம்பித்தேன்...

"உதி எதுன்னாலும் சொல்லுடி...உனக்காக நானிருக்கேன்...பார்த்துக்கலாம்...இப்படி அழாதடி...எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு..."

ஒருவழியாக என் அழுகையை முடித்துக் கொண்ட நான்... அவளிலிருந்து விலகி நின்று கொண்டேன்...

"அவன் உன்கிட்ட காதலைச் சொன்னான்னுதானே சொன்ன...அதுக்கு ஏன்டி இப்படி அழுகுற...??..."

"காதலைச் சொன்னான்தான்...ஆனால் என் மேல வைச்சிருக்குற காதலை இல்லை...அவன் உன் மேல வச்சிருக்குற காதலைச் சொன்னான்..."

"என்னடி உளர்ற...??..."

"ஹரி உன்னை...உன்னைத்தான் காதலிக்குறானாம்..."மிகவும் வேதனையோடு வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்...

"அவன் சொன்னா....நீ அப்படியே ஆமாம் போட்டுக் கேட்டிட்டு வந்தியாக்கும்...அவன்தான் ஏதோ லூசு மாதிரி சொன்னான்னா நீயும் அதை வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்க...முதல்ல அவனை என்ன பண்றன் பாரு..."

"எங்க போற கார்த்திகா...??..."

"வேற எங்க...எல்லாம் அவனைத் தேடித்தான்...அவனை நாலு அப்பு அப்பினாத்தான் என் மனசு ஆறும்.."

"அவன் மேல என்ன தப்பு இருக்கு...??..நீ அடிக்கிறதா இருந்தா என்னைத்தான் அடிக்கனும்...அவன் மனசில என்ன இருக்குன்னு தெரியாமலேயே அவனைக் காதலிச்சது என்னோட தப்பு..."

"அவன் ஒன்னும் என்னைக் காதலிச்சு ஏமாத்தலையே...நான் அவனைக் காதலிச்ச மாதிரியே அவனும் உன்னைக் காதலிச்சிருக்குறான்...இதில அவன் மேல குற்றம் சொல்ல என்ன இருக்கு..??.."

"அப்போ உன்னைப் பார்க்க நம்ம டிபார்ட்மென்ட்டுக்கு வாறது...உன்னை எங்க கண்டாலுமே சிரிச்சு சிரிச்சுப் பேசினது...இதெல்லாம் கூட பொய்னு சொல்லப் போறியா...??..."

"எல்லாமே உண்மைதான்...ஆனா என்ன அவன் வந்தது...பேசினது எல்லாமே எனக்காக இல்லை கார்த்தி...எல்லாமே உனக்காக...அதை எனக்குச் சாதகமா நினைச்சுகிட்டதுதான் நான் பண்ண மிகப்பெரிய தவறு....."

"இப்போ நீ முடிவா என்னதான் சொல்ல வாற..??.."

"நீ ஹரியோட காதலை ஏத்துக்கனும் கார்த்திகா.."

"நினைச்சேன்டி...நீ அங்க சுத்தி இங்க சுத்தி இதிலதான் வந்து நிப்பேன்னு...நான் உனக்கு நண்பிடி...துரோகியில்லை..."

"இப்போ நீ ஹரியோட காதலை ஏத்துக்கலைன்னாத்தான் நீ எனக்குத் துரோகியாக வேண்டியிருக்கும்..."

"நம்ம காதல் தோத்துப்போறதோட வலி என்னென்னு உனக்குப் புரியாது...அந்த வலியை தயவுசெஞ்சு ஹரிக்கும் கொடுத்திடாத...அவன் எப்பவுமே சந்தோசமா இருக்கனும்..."

"அவன் சந்தோசமா இருக்கனும்னு நீ நினைக்கலாம்...ஆனால் நீ சந்தோசமா இருக்கனும்னு நான் நினைக்கக் கூடாது...அப்படித்தானே...??..."

"அப்படி நான் சந்தோசமா இருக்கனும்னு நீ நினைச்சின்னா,ஹரியோட காதல் ஜெயிக்கனும்...அதிலதான் என் சந்தோசம் இருக்கு..."

"ஒருவேளை நான் ஹரியைக் காதலிக்கலன்னா நிச்சயமா நீ அவனோட காதலை ஏத்திட்டிருப்ப...இப்பயும் அப்படியே நினைச்சுக்க...

"அப்போ உன் வாழ்க்கை...பெரிசாத் தியாகம் பண்றதா நினைப்பா உன் மனசில...??"

"என் வாழ்க்கையை நினைச்சு உனக்கு எந்தக் கவலையுமே வேண்டாம் கார்த்திகா...நான் ஒன்னும் தற்கொலை எல்லாம் பண்ணிக்கப் போறதில்ல...ஆனால் நீ இப்போ என்னால ஹரியோட காதலை ஏற்க மறுத்தன்னா...நீ உன் ப்ரண்டை உயிர் இருந்தும் பிணமாத்தான் பார்க்க முடியும்...இனி உன்னோட இஸ்டம் கார்த்திகா..."

நினைவுகள் தோன்றி மறைய அதற்குள்ளாகவே மணமேடையை நெருங்கி வந்துவிட்ட நான்...அவன் அருகே கார்த்திகாவை அமர வைத்துவிட்டு விலகி நின்று கொண்டேன்...

கெட்டிமேளம் முழங்க அவளின் கழுத்தில் மங்களநாணினை அணிவித்து நிமிர்ந்தவனின் முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியே என் மனதினை முழுவதுமாய் நிரப்ப அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்...

கண்கள் என் அனுமதியின்றியே கண்ணீர்த்துளிகளைப் பரீசலிக்க,அவன் காதல் வெற்றியடைந்துவிட்ட மகிழ்ச்சியில் என் உள்ளம் மௌனமாய் புன்னகைத்துக் கொண்டது...இணைந்து வாழ்ந்தால்தான் காதலா..??..இதுவும் காதல்தான்...

எழுதியவர் : அன்புடன் சகி (18-Mar-18, 9:52 am)
Tanglish : ithuvum kathalthaan
பார்வை : 872

மேலே