கனவிலே கலையும் கொக்குகள்

"கொக்கே கொக்கே வெள்ள போடு,
கொழுந்து கொக்கே வெள்ள போடு"

இவ்வரிகளை உரக்க பாடிக்கொண்டே, தெற்கு நோக்கி நான் ஓடிக்கொண்டிருந்தேன், பதின்வயது சிறுவனாக. வானிலே உயரத்தில் கொக்குகள் கூட்டமொன்று அருகில் இருக்கும் வாய்க்காலை நோக்கி பறந்து கொண்டிருந்தன. எனது இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி கொக்குகளை என்னை நோக்கி அழைப்பது போல அசைத்துக்கொண்டிருந்தேன். என்னோடு ஓடி வந்த நண்பர்கள் யாவரும் பாதியிலேயே நின்று விட்டிருந்தனர். "டேய் அங்க போகாதே டா, அம்மா கிட்ட சொல்லிடுவேன்" என்று ஒலித்த தமக்கையின் குரல் என் பின்னே காற்றில் எங்கோ தொலைந்தது.

தட்டான்கள் தன்னை தான் பிடிக்க வருகிறானோ என்றஞ்சி கலைந்து ஓடின. தட்டான்களின் இறகுகள் எழுப்பும் ஓசையே தெருவெங்கும் நிறைந்திருந்தன. இளையராஜாவிடம் பாடங்கள் கற்றிருக்கக்கூடும் இந்த தட்டான்கள். பொதி சுமந்து வந்த கழுதைகள் தார் சாலையின் ஓரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. கழுதை மேய்ப்போன் புதிதாய் இணைந்த கழுதை ஒன்று ஓடிவிடாமல் இருக்க, அதனுடைய காலை மற்றொரு கழுதையின் காலில் சேர்த்து கட்டியிருந்தான். அந்த இரு கழுதைகள் மட்டும் ஓரிடத்தில் அமரமுடியாமல் அவனையே சுற்றி வலம் வந்தபடி இருந்தன.

எனது கவனத்தை முழுக்க கொக்குகள் மீது திருப்பி நான் ஓடினேன். ஊரின் எல்லையது, வெகுதூரம் வந்துவிட்டேன் என்பதை அறிந்த பின்னரே எனது ஓட்டம் நின்றது. வாழைத்தோட்ட வேலிகளை கடந்து கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. வேலிகளை தாண்டி பறந்திட என்னிடம் சிறகுகளும் இல்லையே. என் கைகளை திருப்பி நகக்கண்களை உற்றுப்பார்த்தேன். "கொக்குவின் வெள்ளை" (அல்லது அவ்வாறாக நான் நம்பிய) எனது வலது கை மோதிர விரல் நகத்தில் அப்பியிருந்தது.விரல் நகங்களை பார்த்தபடி வீடு நோக்கி நடக்க துவங்கினேன். என் உதடு ஓரங்களில் எதையோ பெரிதாக சாதித்ததின் அடையாளமாக புன்முறுவல் நிறைந்திருந்தது. நண்பர்களுக்கு இதை காட்டுகையில், அவர்களது மத்தியில் என் மீதான அபிமானம் அதிகரிக்கும் என்பதை நினைக்கையில் உள்ளூர ஓர் பேருவகை பிறந்தது.

திரும்பி வரும் வழியெங்கும் தட்டானின் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. ஆங்காங்கே என் வயதொத்த சிறுவர்கள் முட்கள் நிறைந்த உடைமர கிளைகளை காற்றிலே வீசி தட்டான்களை பிடிக்க முயன்றுகொண்டிருந்தனர். பிடிபட்ட தட்டான்களின் வயதுகள் அறியப்படக்கூடும், ஆயுள்கள் முடிவடையும் வேளைகளில்.

அந்த இரு கழுதைகளும் இன்னமும் நின்றபடியே இருந்தன. கால்கள் வலிக்கக்கூடும்.
வேப்ப மரத்தடி நிழலில் மேய்ப்போன் இப்பொழுது நன்கு தூங்கியிருந்தான். அவனது குறட்டை சத்தத்தை குட்டி கழுதை ஒன்று வேடிக்கை பார்த்தபடி அவனருகே அமர்ந்திருந்தது.

எனது தெருவில் திரும்பியதும் என் வீட்டினருகே எனது நண்பர்கள் நிற்பது தெரிந்தது. "எனக்கு கொக்கு வெள்ள போட்டிருச்சே" என்று கத்திகொண்டே அவர்களை நோக்கி ஓடலானேன்.

"என்னடா உளர்ர" என்று அப்பாவின் குரல். அப்பா எங்கு நிற்கிறார் என்று தெரியவில்லை.

எனக்கு கொக்கு வெள்ள போட்டுச்சு பா"

"கொக்கு?, வெள்ளையா?" என்ற அப்பா, எனது அம்மாவை அழைத்தார். "உன் புள்ள, தூக்கத்திலே ஏதோ புலம்புறான் பாரு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

விழித்தெழுந்து என் வலது கை மோதிர விரலை பார்த்தேன். கொக்குவின் வெள்ளைக்கான அடையாளம் எதுவுமில்லை. எனது அறையின் சுவரில் நாட்காட்டி 04-ஜூலை-2017 என்று சொல்லியது.

படுக்கையிலிருந்து எழுந்து, வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தேன். சற்று முன்பு மனத்திரையில் கொக்குகளை துரத்திச்சென்ற தெருவில் வந்து நின்றேன். வானிலே கொக்குகளை காணவில்லை. சில வருடங்களாகவே கொக்குகள் வருவதில்லை என்று மேகங்கள் சொல்வது போல எனக்கு தோன்றியது. அனைத்து கொக்குகளும் எங்கு போயிருக்கக்கூடும்? பதின் பருவம் கழித்து, நான் கடைசியாக கொக்கிகளை எப்பொழுது கண்டேன் என்று தெரியவில்லை. இது தான் பிரபஞ்சத்தின் சாராம்சமா?

அந்த கொக்குகளுக்கும், எனக்கும் ஒரே சொந்த ஊர் இல்லையா? கொக்குகளுக்கு சொந்த ஊர் உண்டு தானே? வேறு ஊர் தேடி சென்றிக்குமோ? என்னுள் தோன்றிய எந்த கேள்விகளுக்கும் விடையின்றி முச்சந்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். தட்டான்களின் சத்தமின்றி தெரு அமைதியாக இருக்கின்றது. வெகுநாட்களாக கழுதைகள் வந்து போனதற்கான அறிகுறி எதுவுமில்லை.

கொக்குகள், தட்டான்கள் மற்றும் கழுதைகள் என் நெஞ்சில் ஆயிரமாயிரம் கேள்விகளை விதைத்தன. இன்றைய தலைமுறையினர் இவைகளை நேரில் பார்த்ததுண்டா? கட்டாயமாக இணையத்தில் பார்த்திருக்கக்கூடும். கொக்குகளை நாமும் இனி இணையத்தில் மட்டுமே பார்க்கமுடியுமா? சிறுவர்கள் எவரும் வெள்ளை கேட்டு, கொக்குகள் பின்னே ஓடாததாலே, கொக்குகள் இன்றைய நாட்களில் ஊருக்கு வருவதில்லையோ!

பல்வேறு விலங்கு மற்றும் பறவைகளுடன் கூடி வாழ்ந்த நாம், இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தனியே வாழப்போகும் நாட்களை நோக்கி போய்கொண்டிருக்கிறோமா? இன்னமும் கிராமங்களில் எத்தனை வீடுகளில் கோழிகள் வளர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது ஊர் மட்டுமின்றி, எந்த கிராமங்களிலும் தட்டான்கள் விட்டுச்சென்ற அடையாளங்கள் இன்று இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை. தட்டான்கள் மறைந்தது போல, மனிதர்களும் ஓர் நாள் முற்றிலுமாக இந்த மண்ணை விட்டு மறைந்து போகக் கூடுமோ!

வீடு நோக்கி திரும்பி நடக்கலானேன். மனிதர்களின் மற்றும் தொலைக்காட்சியின் சத்தங்களும் என் காதுகளில் கேட்டாலும், ஏதோ ஓர் மயான அமைதி தெருவெங்கும் நிறைந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது.

எழுதியவர் : (19-Mar-18, 9:00 am)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 159

மேலே