முதுமொழிக் காஞ்சி 48

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அறத்தாற்றின் ஈயாத(து) ஈகை யன்று. 8

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் அறத்தின் நெறியின் ஈயாதது ஈகையன்று.

பதவுரை:

அறத்தாற்றின் ஈயாதது – தரும மார்க்கத்திலே கொடாதது,

ஈகை அன்று – ஈகை என்று சொல்லத் தக்கதாகாது.

அறத்தாற்றின் ஈதலாவது பாத்திரமறிந்து கொடுத்தல். ஈகையின் இலக்கணமும் அதுவே.

வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 221 ஈகை

பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது. இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம்.

வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-18, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே