ரஞ்சிதம் அக்கா...
ரஞ்சிதம் அக்கா...
பிள்ளையார் கோவில்
ஆல மரத்தில்..,
ரஞ்சிதம் அக்கா
தினமும் மஞ்சள் கயிறு
கட்டி போடுவதை கண்டிருக்கிறேன்....
மற்ற பெண்களோடு அவள்
சேர்ந்து வந்ததை நான் பார்த்ததில்லை....
அல்லது
மற்ற பெண்கள் அவளோடு சேர்ந்து வருவதை
விரும்ப வில்லை...
வயதுக்கு வந்து வருடங்கள்
ஆகியும் ..,
ஆறேழு மாப்பிள்ளைகள் பெண் பார்த்து
போனாலும்...,
யாரிடமிருந்தும் பதில் கடிதம் வந்ததில்லை....
ரஞ்சிதம் அக்கா நல்ல கருப்பு நிறம்...
அவள் தலை முடியை
பார்த்து கோமதி அக்கா அடிக்கடி
சிரித்துக் கொள்வாள்...
" ரஞ்சிதம் தல முடிய விட அவ ஆத்தாளுக்கு
முடி அதிகம் டி..."
தெருவின் எல்லா அக்காவிற்கும்
ரஞ்சிதம் அக்கா
அவல் பொறி ஆவதை
அடிக்கடி கண்டிருக்கிறேன்....
ஆனாலும் எனக்கு ரஞ்சிதம் அக்காவை
பிடிக்கும்......
அடிக்கடி என்னை அருகில் அழைத்து
அவள் வீட்டு முறுக்கையும்
அதிரசமும் தருவாள்..
என் தலை முடியை
அவள் பாசமாய் கோதிக்கொண்டிருந்த
அந்த நேரத்தில்
"ஏ அக்கா உனக்கு
இன்னும் கல்யாணம் ஆகல ?"
நான் கேட்ட கேள்விக்கு சிறிது நேரம்
பதில் ஏதும் சொல்லாமல்
பிறகு ..,
கலங்கிய கண்களோடு "அக்கா ரொம்ப கருப்பா இருக்கேனாட?"
என்றாள்....
கையில் இருந்த முறுக்கை
பிடுங்கி கொள்வாளோ என்கிற
பயத்தில் "கொஞ்சம் ...கருப்பு..கா"
என்றேன்....
"அக்கா நா பெரியவனா ஆனதும்
என்னைய கட்டிக்கிறியா?"
நான் சொன்னதுக்கு பின் அக்கா என்னை கட்டிக் கொண்டு
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்...
அடுத்த நாள் காலை
பிள்ளையார் கோவில் ஆல மரத்தில்
மஞ்சள் கயிற்றில் தூக்கு போட்டு
ரஞ்சிதம் அக்கா செத்து போனாள்....
இன்றும் நான் அந்த ஆல மரத்தை கடக்கிற
போதெல்லாம் கையில்
முறுக்கோடும் அதிரசத்தோடும்
ரஞ்சிதம் அக்கா என்னை பார்த்து
புன்னகைகிறாள்...